தந்தையால் உயிருக்கு ஆபத்து : தலித்தை மணந்த பாஜக எம்.எல்.ஏவின் மகள் வீடியோ மூலம் தகவல்

பதிவு செய்த நாள் : 11 ஜூலை 2019 19:51

லக்னோ, 

   உத்தரபிரதேசத்தின் பாஜக எம்.எல்.ஏ ராஜேஷ் மிஸ்ராவின் மகள் சாக்‌ஷி மிஸ்ரா (23) தலித் சமூகத்தை சேர்ந்த அஜிதேஷ் குமார் (29) என்பவரை திருமணம் செய்து கொண்டதால் தன் தந்தை தன்னை கொல்ல ஆள் அனுப்பியுள்ளதாக கூறும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

உத்தரபிரதேசம் பைரேலி மாவட்டத்தில் உள்ள பிதாரி சைன்பூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜேஷ் மிஸ்ராவின் மகள் சாக்‌ஷி மிஸ்ரா தலித் சமூகத்தை சேர்ந்த அஜிதேஷ் குமார் என்பவரை தான் திருமணம் செய்துகொண்டதாக தான் விடியோ செய்தி மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

தலித் சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதால் தன் தந்தை, சகோதரன் மற்றும் உதவியாளர் ஒருவர் என அனைவரும் தங்களை ஆணவ கொலை செய்ய முயற்சி செய்வதாக வீடியோவில்     சாக்‌ஷி மற்றும் அவரது கணவர் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை பதிவிடப்பட்ட இந்த வீடியோவில் சாக்‌ஷி மிஸ்ரா மற்றும் அவரது கணவர் இருவரும் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

‘‘நான் சுயவிருப்பத்துடன் அஜிதேஷ் குமாரை திருமணம் செய்து கொண்டேன். எங்களை அமைதியாக வாழவிடுங்கள். அஜிதேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை விட்டுவிடுங்கள். மீறினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரும். நான் ஓடி ஒடி களைத்துவிட்டேன். எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும்’’ என்று சாக்‌ஷி வீடியோவில் தெரிவித்துள்ளார்.

அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சாக்‌ஷியின் தந்தை அனுப்பிய ஆட்கள் வந்ததாகவும் நூலிழையில் அவர்களிடம் இருந்து தப்பி வந்ததாகவும் இருவரும் வீடியோவில் கூறினர்.

‘‘என் தந்தையின் ஆட்களிடம் சிக்கினால் நாங்கள் இருவரும் நிச்சயம் கொல்லப்படுவோம். எனவே எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை. என் தந்தைக்கு பரேய்லியை சேர்ந்த எம்.பிக்கள் எம்.எல்.ஏக்கள் யாரும் உதவி செய்ய கூடாது’’ என சாக்‌ஷி வலியுறுத்தியுள்ளார்.

தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி சாக்‌ஷி மற்றும் அவரது கணவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். தங்களுக்கும் தன் கணவர் வீட்டாருக்கும் தன் தந்தையால் ஆபத்து நேராமல் தடுக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடும்படி தங்கள் மனுவில் இருவரும் கோரியுள்ளனர்.

இந்த வீடியோ குறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆர்.கே.பாண்டே அவர்கள் இருவருக்கும் பாதுகாப்பு வழங்கும்படி காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார். அதேசமயம்    சாக்‌ஷி மற்றும் அஜிதேஷ் குமார் இருவரும் எங்கு இருக்கிறார்கள் என்ற விவரம் தெரியாததால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என ஆர்.கே. பாண்டே கூறியுள்ளார்.