சமூக ஆர்வலர் கொலை வழக்கில் முன்னாள் பாஜக எம்.பி உட்பட 7 பேருக்கு ஆயுள்தண்டனை

பதிவு செய்த நாள் : 11 ஜூலை 2019 19:38

ஆமதாபாத், 

  சமூக ஆர்வலர் அமித் ஜெத்வா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் பாஜக எம்.பி தினு போகா சோலங்கி மற்றும் 6 பேருக்கு சிறப்பு சிபிஐ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

குஜராத் கிர் வனப்பகுதியில் சட்டவிரோதமாக நடக்கும் சுரங்க பணிகளுக்கு எதிராக சமூக ஆர்வலர் அமித் ஜெத்வா கடந்த 2010ம் ஆண்டு குஜராத் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

அப்போதைய பாஜக எம்.பி தினு போகா சோலங்கி அவரது மருமகன் சிவா சோலங்கி ஆகியோருக்கு இந்த சட்டவிரோத சுரங்க பணிகளில் தொடர்பு இருப்பதற்கு ஆதாரமாக பல ஆவணங்களை அமித் ஜெத்வா நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அமித் ஜெத்வாவின் பொதுநல வழக்கு நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2010ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி குஜராத் உயர்நீதிமன்றத்தின் வெளியே அமித் ஜெத்வா சுட்டுக்கொல்லப்பட்டார்.

அமித் ஜெத்வாவின் கொலை வழக்கை விசாரித்த அகமதாபாத் காவல்துறை கிரிமினல் பிரிவு இந்த கொலையில் பாஜக எம்.பி தினு போகா சோலங்கிக்கு தொடர்பு இல்லை என அறிவித்தது.

காவல்துறை விசாரணையில் திருப்தி அடையாத குஜராத் உயர்நீதிமன்றம் கடந்த 2013ம் ஆண்டு வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தது. அதை தொடர்ந்து முன்னாள் பாஜக எம்.பி அமித் ஜெத்வா மற்றும் 6 பேர் மீது சிபிஐ விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த வழக்கில் நேரில் பார்த்த சாட்சியங்களான 196 பேரில் 105 பேர் தங்களுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்களால் பின்வாங்கினர்.

அதை தொடர்ந்து அமித் ஜெத்வா கொலை வழக்கில் மறு விசாரணை நடத்த அவரது தந்தை பிகாபாய் ஜெத்வா, உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். அவரது மனுவை ஏற்ற குஜராத் உயர்நீதிமன்றம் கடந்த 2017ம் ஆண்டு மீண்டும் புதிதாக விசாரணையை துவங்க உத்தரவிட்டது.

விசாரணை முடிவில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் குற்றவாளிகள் என ஜூலை 6ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 7 பேருக்கும் இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

முக்கிய குற்றவாளியான முன்னாள் பாஜக எம்.பி தினு போகா சோலங்கி மற்றும் அவரது மருமகன் சிவா சோலங்கி உட்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிபதி கே.எம். டேவ் உத்தரவிட்டார்.

மேலும் தினு போகா சோலங்கி மற்றும் மருமகன் சிவா சோலங்கி இருவருக்கும் 15 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி டேவ் தீர்ப்பளித்தார்.

தீர்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அமித் ஜெத்வாவின் தந்தை பிகாபாய் ஜெத்வா ‘‘நம் நாட்டு நீதித்துறை தாமதமாக செயல்பட்டாலும் இறுதியில் எங்கள் குடும்பத்திற்கு நீதி கிடைத்துவிட்டது. சோலங்கி போன்ற குற்றவாளிகள் அனைவரும் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட வேண்டும்’’ என்று பிகாபாய் ஜெத்வா கூறினார்.