மத்திய திட்டங்களுக்கு இந்தியில் மட்டும் பெயர் வைத்தால் தென்தமிழக கிராம மக்களுக்கு என்ன புரியும்? கனிமொழி கேள்வி

பதிவு செய்த நாள் : 11 ஜூலை 2019 19:16

புதுடில்லி, 

  மத்திய அரசு தன் நலத்திட்டங்கள் அனைத்துக்கும் இந்தியிலேயே பெயரிட்டு வருகிறது. இந்த திட்டங்கள் குறித்து தமிழக கிராம மக்களால் என்ன புரிந்து கொள்ள முடியும்? என்று கனிமொழி எம்பி மக்களவையில் கேள்வி எழுப்பினார்.

ரயில்வே மற்றும் சேலம் ஸ்டீல் ஆலையை தனியார் வசம் ஒப்படைக்க நினைத்தால் அதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து தமிழக மக்கள், திமுக கட்சியினர் போராடுவார்கள் என கனிமொழி கூறினார்.

மக்களவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் திமுக எம்.பி கனிமொழி பேசினார்

தமிழகத்தின் சேலம் ஸ்டீல் ஆலை நஷ்டத்தில் ஓடுவதால் அதை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேபோல் ரயில்வேத்துறையை தனியார்மயமாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 ரயில்வே மற்றும் சேலம் ஸ்டீல் ஆலையை தனியார்மயமாக்கும் திட்டங்களை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு எதிராக தமிழக மக்களுடன் இணைந்து திமுக மற்றும் அதன் தலைவர் மு.க ஸ்டாலின் போராடுவார்கள் என கூறினார்.

மேலும் மத்திய அரசின் அனைத்து நலத்திட்டங்களுக்கும் இந்தியில் பெயரிடப்படுவதை கனிமொழி கண்டித்தார்.

‘‘பாஜக தலைமையிலான மத்திய அரசு தன் நலத்திட்டங்கள் அனைத்தையும் இந்தியிலேயே பெயரிட்டு வருகிறது. இந்த திட்டங்கள் குறித்து தமிழக கிராம மக்களால் என்ன புரிந்து கொள்ள முடியும்?’’

‘‘தூத்துக்குடியில் ஒரு பலகையில் பிரதான் மந்திரி சதக் யோஜனா என்று எழுதப்பட்டுள்ளது. அதற்கான மொழிபெயர்ப்பும் இல்லை. அதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை’’ என கனிமொழி தெரிவித்தார்.

மனிதக் கழிவுகளை அகற்ற மத்திய அரசு 90,000 பணியாளர்களை நியமித்துள்ளது. அவர்களின் உரிமைகளை பாதுகாக்க ஆளுங்கட்சி எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என கனிமொழி சாடினார்.

ஈரோடு ரயில் நிலையத்துக்கு தந்தை பெரியாரின் பெயரை சூட்ட வேண்டும் என்றும் மக்களவையில் திமுக எம்.பி.கனிமொழி கோரிக்கை விடுத்தார்.

திருநாவுக்கரசர் கருத்து

ரயில்வேத்துறை தனியார் மயமாக்கும் திட்டம் வெற்றியடையாது என்று தமிழக காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசரும் மக்களவையில் கூறினார்.

‘‘ரயில்வே தொடர்பான திட்டங்களை நிறைவேற்ற அடுத்த 10 ஆண்டுகளில் ரூ. 50 லட்சம் கோடி முதலீடு செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அப்படியென்றால் மத்திய அரசு ஆண்டுக்கு 5 லட்சம் கோடி கொள்முதல் செய்ய வேண்டும். இவ்வாறு நஷ்டத்தில் இயங்கும் நிறுவனம் மீது யார் முதலீடு செய்ய முன்வருவார்கள் ’’ என திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

காவிரி, கோதாவரி, கிருஷ்ணா இணைப்பு

மக்களவையில் பேசிய திமுக எம்.பி ஆர்.எஸ் பாரதி தமிழ் மொழிக்கு மத்திய அரசு மதிப்பளிக்கவில்லை என குற்றம்சாட்டினார். புத்தகங்கள், பிரிண்ட் மீடியா மீதான வரி உயர்வுக்கும் கண்டனம் தெரிவித்தார்.

மேலும் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்ப்பது தொடர்பாக பட்ஜெட்டில் எதுவும் கூறப்படவில்லை. குடிநீர் தேவையை தீர்க்க மத்திய அரசு உடனடியாக காவிரி, கிருஷ்ணா, கோதாவரி ஆறுகளை இணைக்க வேண்டும். இதற்கு வெறும் 1000 கோடி ரூபாய் தான் செலவாகும் என ஆர்.எஸ். பாரதி கூறினார்.