சென்செக்ஸ் 266 புள்ளிகள், நிப்டி 84 புள்ளிகள் உயர்வு

பதிவு செய்த நாள் : 11 ஜூலை 2019 18:53

மும்பை,

    மத்திய பட்ஜெட் தாக்கத்தால் சரிந்து இருந்த இந்திய பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் தொடங்கின. மும்பை பங்குச் சந்தையின் அடையாளக் குறியீட்டெண் சென்செக்ஸ் இன்று மாலை 266 புள்ளிகள்    உயர்வுடன்  நிறைவடைந்தது.

மத்திய பட்ஜெட்டில் கூடுதல் வரி காரணமாக மும்பை பங்கு சந்தை கடந்த சில நாட்களாக சரிவுடன் காணப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் அமைப்பின் தலைவர் ஜெரோம் போவெல் இம்மாத இறுதியில் வட்டிவிகிதங்களை குறைப்பதற்கான எதிர்பார்ப்பை வலுப்படுத்தியுள்ளார். இதன் காரணமாக இன்று இந்திய ரூபாயின் மதிப்பும் உயரத் தொடங்கியது. மேலும் உலக பங்குச்சந்தையும் உயர்வுடன் காணப்பட்டது.

இதன் எதிரோலியாக இந்திய பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் துவங்கும் பொழுதே சென்செக்ஸ் ஏற்றத்துடன் தொடங்கியது. மாலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 266.07 புள்ளிகள் உயர்ந்து 38,823.11 புள்ளிகளில் நிலைபெற்றது.

தேசியப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிப்டி 84 புள்ளிகள் உயர்ந்து 11,582.90 புள்ளிகளில் நிலைபெற்றது.

இந்திய ரூபாயின் மதிப்பு

இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை (11-07-2019) வர்த்தகம் துவங்கியதும் அமெரிக்க டாலருக்கு எதிரான நாணய மாற்றின் போது 25 காசுகள் அதிகரித்து ரூ. 68.33 காசுகளாக இருந்தது.

இன்று மாலையில் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.68.36 காசுகளாக நிலைபெற்றது.

நேற்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.58 காசுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.