பட்ஜெட்டில் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பான அறிவிப்புகள் இல்லை : ப. சிதம்பரம் கருத்து

பதிவு செய்த நாள் : 11 ஜூலை 2019 17:20

புதுடில்லி,

   மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம், நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லக்கூடிய வலிமையான கட்டமைப்பு மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பான அறிவிப்புகள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை என கூறினார்.

கடந்த ஜூலை 5ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட் மீதான விவாதம் இன்று காலை மாநிலங்களவையில் நடைபெற்றது.முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விவாதத்தை துவக்கி வைத்து உரையாற்றினார்.
நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டு
அப்போது நாட்டின் முதல் முழுநேர பெண் நிதி அமைச்சராக பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் நிர்மலா சீதாராமனை பாராட்டி பேசினார்.

‘‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’’ என்ற மகாகவி பாரதியாரின் பாடலை சுட்டிக்காட்டி நிர்மலா சீதாராமனை பாராட்டினார் ப. சிதம்பரம். மேலும் தற்போதையை நிதி அமைச்சர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது கூடுதல் மகிழ்ச்சி அளிப்பதாக ப. சிதம்பரம் கூறினார்.

முக்கிய தகவல்கள் இல்லாத பட்ஜெட்

பட்ஜெட் மீதான தன் கருத்துக்களை கூறிய ப. சிதம்பரம், பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவரங்கள் எதையும் நிர்மலா சீதாராமன் கூறாதது ஏன் ? என கேள்வி எழுப்பினார்.

நாட்டின் வருவாய் உட்பட முக்கிய நிதி விவரங்களை நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் தெரிவிக்கவில்லை. இதற்கு முன் இதுபோன்ற முக்கிய விவரங்கள் எதுவும் கூறாமல் பட்ஜெட் தாக்கலானதாக எனக்கு நினைவில்லை. இனி வரும் காலங்களில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய தகவல்களை பட்ஜெட்டில் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பான ஜிடிபி வளர்ச்சியின் கணிப்பு தொடர்பாகவும் தெளிவான தகவல்கள் இல்லை. ஒரு பக்கம் ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதமாகவும் மற்றொரு பக்கம் 8 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்படுகிறது.

ஒரு சதவீதம் என்றாலும் அது மிக பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் தற்போதைய நிதி நிலவரம் குறித்து தெளிவான ஒருங்கிணைந்த தகவல்களை அளிக்கவில்லை,

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வலிமையான கட்டமைப்பு, சீர்திருத்தங்கள் மிகவும் அவசியம். ஆனால் அதுபற்றி பட்ஜெட்டில் எதுவும் கூறவில்லை.

பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தைரியம் கொண்டவர். இந்த் ஆண்டு இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை 8 சதவீதமாக உயர்த்த அவர் என்னென்ன சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வார் ?

நாட்டின் பொருளாதார மதிப்பு 2.7 லட்சம் கோடி டாலர்களாக உள்ளது. தற்போது வளர்ச்சி விகிதம் 12 சதவீதமாக உள்ளது. நாட்டில் நிதி அமைச்சர் ஒருவர் இல்லையென்றாலும் இந்த நிலை அடுத்த 6 ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயரும்.

நாட்டின் வளர்ச்சி விகிதம் 11 சதவீதமாக இருந்தால் அடுத்த 7 ஆண்டுகளில் பொருளாதாரம் இருமடங்கு வளர்ச்சி பெறும்.

இந்த நிலையில் இந்தியாவின் பொருளாதார மதிப்பை 5 லட்சம் கோடி டாலராக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது மாயமந்திரத்தால் தான் சாத்தியம். மக்களின் மனதில் தேவையற்ற நம்பிக்கையை வளர்க்க வேண்டாம்.

வளர்ச்சியை ஊக்குவிக்க அதிகளவில் முதலீடுகள் தேவைப்படுகின்றன. முதலீடுகளுக்கு உள்நாட்டு சேமிப்பு மிகவும் அவசியம். ஆனால் உள்நாட்டு சேமிப்பை மேம்படுத்தவற்கான திட்டம் எதுவும் பட்ஜெட்டில் இல்லை.

செலவுக்கான இலக்குகளை அடைய வருவாய் சேகரிப்புக்கான சரியான இலக்குகளை மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.

கர்நாடகா, கோவா விவகாரம்

கர்நாடகா மற்றும் கோவாவில் நிலவும் அரசியல் சூழல் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என ப. சிதம்பரம் கூறினார்.

‘‘கோவா மற்றும் கர்நாடகாவில் நடக்கும் அரசியல் மாற்றங்கள் பாஜகவின் அரசியல் இலக்கை அடைய உதவும். அதேசமயம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிகான இலக்கை அடையும் வழியில் தடைகளை ஏற்படுத்தும்’’

‘‘கடந்த இரண்டு நாட்களில் பாஜக அரசு ஜனநாயகத்தை நாசப்படுத்திவிட்டது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தால் நாட்டின் ஜனநாயக கட்டமைப்பு சீர்குலையும்’’ என ப. சிதம்பரம் எச்சரித்தார்.