விவசாயிகளுக்கு எந்த நிவாரணத்தையும் வழங்காத மத்திய அரசு: மக்களவையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பதிவு செய்த நாள் : 11 ஜூலை 2019 17:04

புதுடில்லி

   மக்களவையில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோசமான நிலைமையில் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு எந்த நிவாரணமும் வழங்கவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.

17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 5ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் 2019-20 மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதையடுத்து, பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்றும் அவை நடவடிக்கைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. பூஜ்ஜிய நேரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரளா மாநிலத்தை மையமாக வைத்து பேசினார். அவரது தொகுதியான வயநாடில் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகளை முன்வைத்தார்.

அப்போது பேசிய ராகுல் காந்தி,”விவசாயிகளுக்கு அரசாங்க எந்த நிவாரணத்தையும் வழங்கவில்லை. ஆனால், தொழிலதிபர்களுக்கு 4.3 லட்சம் ரூபாயை சலுகையாகவும், 5.5 லட்சம் கோடி ரூபாய் கடனும் தள்ளுபடியும் செய்யப்பட்டுள்ளன. அரசாங்கம் ஏன் விவசாயிகளை தாழ்வாக பார்க்கிறது?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும்,”நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் நிலைமை மோசமாகிக்கொண்டே செல்கிறது. கேரள மாநிலத்தில் மிகவும் மோசமாகி வருகிறது. கடன் தந்த வங்கிகள், விவசாயிகளிடம் இருந்து கடனைத் திரும்பப்பெறும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. இதனால், கேரளாவில் மட்டும் 18 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். வயநாடில் ஒரு விவசாயி இன்னுயிரை நீத்துக்கொண்டார்.

விவசாயிகளுக்கு பல வாக்குறுதிகளை மோடி வழங்கினார். அவ்வாறு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் மத்திய அரசு நிறைவேற்றவேண்டும்” என்று ராகுல் காந்தி கேட்டுக்கொண்டார்.

17வது மக்களவை கூட்டத்தொடரில் ராகுல் காந்தி முன்வைக்கும் முதல் கேள்வி இது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ்நாத் சிங் பதில்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராகுல் காந்தி கேள்விக்கு பதிலளித்துப் பேசினார். அப்போது பேசிய ராஜ்நாத் சிங், “விவசாயிகளுக்கு வருடம் ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அரசு முன்னெடுத்துள்ளது. இதன்மூலம், விவசாயிகளின் வருவாய் 20-25 சதவீதம் உயரும்” என்று கூறினார்.

“பாஜக தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு முன், விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து காணப்பட்டது. விவசாயிகள் கடந்த 4 – 5 வருடங்களில் பெரிதும் அவதிக்குள்ளாகவில்லை. பல ஆண்டுகாலமாக இந்த நாட்டை ஆண்டவர்களின் ஆட்சி காலத்தில்தான் விவசாயிகள் பெரும் துன்பத்திற்கு உள்ளாகினர்” என்று தெரிவித்தார்.