எம்எல்ஏக்கள் ராஜினாமா பற்றி இன்றே முடிவெடுக்க முடியாது: கர்நாடக சபாநாயகர் உச்சநீதிமன்றத்தில் மனு

பதிவு செய்த நாள் : 11 ஜூலை 2019 14:27

புதுடில்லி

   எம்எல்ஏக்களின் ராஜினாமா பற்றி இன்றே முடிவெடுக்க வேண்டும் என தனக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்த முடியாது என கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் மேல்முறையீடு செய்துள்ளார்.

கர்நாடகத்தில் குழப்பமான அரசியல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முதல்வர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 எம்எல்ஏக்களும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். மேலும் 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் கூட்டணி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்றனர்.

இதனால் அரசு மெஜாரிட்டி பலத்தை இழந்துவிட்டதால் குமாரசாமி அரசு பதவி விலகவேண்டும் என்று எதிர்க்கட்சியான பாஜக வற்புறுத்தி வருகிறது. அதேசமயம், ஆட்சியை கவிழ்ப்பதற்காகவே தங்கள் கட்சி எம்எல்ஏக்களிடம் பேரம் பேசி அவர்களை பாஜக ராஜினாமா செய்ய வைத்திருப்பதாக காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. ஆனால் எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ரமேஷ்குமார் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. 8 எம் எல் ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் முறையான படிவத்தில் இல்லை அதனால் அவர்கள் விரும்பினால் புதிதாக ராஜினாமா கடிதங்களைத் தரலாம். மற்ற 5 எம் எலேக்களின் கடிதங்கள் முறையாக் உள்ளன. அவர்களுடன் நேரில் பேசிய பிறகுதான் முடிவு செய்ய முடியும் என சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்தார்.

இன்றே ராஜினாமா கடிதங்கள் குறித்து முடிவு செய்யுங்கள் என்று சபாநாயகரிடம் உச்சநீதிமன்றம் கூற அதிகாரம் உள்ளதா எனத் தெரிவில்லை என சபாநாயகர் ரமேஷ் குமார் குறிப்பிட்டார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக வீட்டு வசதி துறை மந்திரியாக இருந்த எம்.டி.பி.நாகராஜ், கே.சுதாகர் ஆகியோர் நேற்று தங்கள் எம்எல்ஏ பதவி விலகினார்கள். அவர்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் கொடுத்தனர். இதனால் பதவி விலகிய எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்து இருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீட்டு வழக்கு சபாநாயகர் ரமேஷ் குமார் தொடர்ந்துள்ளார்.

சபாநாயகர் மனுவில்,”எம்எல்ஏக்கள் சொந்த விருப்பத்தின் பெயரில் ராஜினாமா செய்தார்களா, அல்லது வற்புறுத்தலின் பெயரில் இது நடந்ததா என்பது குறித்தெல்லாம் விரிவாக விசாரணை நடத்த வேண்டியுள்ளது. எனவே, அவசரமாக ராஜினாமா கடிதங்களை ஏற்பது இயலாத காரியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை அவசரமாக விசாரிக்குமாறு, சபாநாயகர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அதை மறுத்த உச்சநீதிமன்றம், நாளை இந்த வழக்கை விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.

கர்நாடக அரசியல் பிரச்சினை நீதிமன்றப்பிரச்சினை, சட்டப்பிரச்சினையாக இன்று உரு மாறி உள்ளது.