கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் பயன்பாட்டுக்கு விரிவான திட்ட அறிக்கை வெளியாகும்: முதல்வர் அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 11 ஜூலை 2019 14:23

சென்னை,

   தமிழகத்தில் தொடர்ந்து நீர்த் தேவை அதிகரித்து வருகிறது, ஆனால் கிடைப்பது குறைந்து வருகிறது. இந்நிலையில கழிவு நீரை சுத்தம் செய்து மறு பயனபாட்டிறகு வகை செய்வது அதற்கன தனிக்குழாய் கட்டமைப்பை நிறுவுவது ஆகிய விவரங்களைக கொண்ட விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் என தமிழக முதலவர் எடப்பாடி கே பழனிசாமி சட்டமன்றத்தில் விதி 110ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டார்.

சட்டசபையில் இன்று 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்புகளின் விவரம்:

விரைவான நகரமயமாதல், தொழில் மயமாக்கல் போன்ற காரணங்களால், தமிழ்நாட்டில் குடிநீர்த் தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் அதே வேளையில், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் தொடர்ச்சியாக பருவமழை பொய்த்து, நீர்வளம் குறைந்து வருகிறது. இந்த நிலையை சிறப்பாக எதிர்கொள்வதோடு மட்டுமல்லாமல், நீர்நிலைகள் மாசுபடுவதை தவிர்ப்பது, தொழிற்சாலை மற்றும் இதர பயன்பாடுகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீரை உபயோகிப்பது, கழிவு நீர் மறு உபயோகக் குழாய் கட்டமைப்பை அமைத்தல் உள்ளிட்ட வழிமுறைகளைக் கொண்ட ஒருங்கிணைந்த கொள்கையை அம்மாவின் அரசு உருவாக்கும்.

கழிவு நீர் மறுசுழற்சி
அம்மாவின் “தொலைநோக்கு திட்டம் 2023”-ல், கழிவுநீரினை சுத்திகரிப்பு செய்து மறுசுழற்சி செய்வது ஒரு அங்கமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை நடைமுறைப்படுத்தி, நிலத்தடி நீர் மட்டத்தை பெருக்கிடவும், நீர் வழங்கல் ஆதாரங்களை அதிகரிப்பதற்கு நிரந்தர மற்றும் நிலையான தீர்வுகளைக் கண்டறிவதற்கும், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், 260 மில்லியன் லிட்டர் கழிவுநீரை மூன்றாம் நிலை சுத்திகரிப்பின் மூலம் சுத்திகரித்து, மறுபயன்பாட்டிற்காக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள நீர்நிலைகளில் விடுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்.

அதேபோன்று, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் திருச்சி மாநகராட்சிகளில் உள்ள நீர் நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, சுத்திகரிப்பு செய்யப்பட்ட கழிவுநீரினை மறு சுழற்சி செய்து தொழிற்சாலைகள் மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டுதல் போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு உபயோகிக்கும் சாத்தியக் கூறுகளைக் கண்டறிய, உரிய ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்பதை தெரிவித்துக்
கொள்கிறேன்.

அடையாறு நதிச் சீரமைப்பு

ரூ.2,371 கோடியில் அடையாறு நதி சீரமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.

அதில், 1. சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் அடையாறு மற்றும் கூவம் நதிகளுக்கான சுற்றுச்சுழல் சீரமைப்புத் திட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் மற்றும் இதனை சேர்ந்த பிரதான நீரோடைகளில் கழிவுநீர் கலப்பதை இடைமறித்தல், மாற்று வழிகளை அமைத்தல், இடத்திற்கு ஏற்ப ஆங்காங்கே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், கழிவுநீர் உந்து நிலையங்கள் அமைத்தல் மற்றும் தற்பொழுதுள்ள சென்னை கழிவுநீர் உட்கட்டமைப்புகளை புதுப்பித்தல், வலுப்படுத்துதல் போன்ற பணிகளை செயல்படுத்த, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தால் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, 2019 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் செயல்படுத்தும் இத்திட்டத்திற்கு சுமார் 2,371 கோடி ரூபாய் செலவாகும் என திட்டமிடப்பட்டு, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவைக்கு பதிய பேருந்து நிலையம்
5. கோவை மாநகராட்சி, தமிழ்நாட்டில் 2-வது பெரிய மாநகராட்சியாகும். இங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, அம்மா, கோயம்புத்தூரில் ஒரு ஒருங்கிணைந்த நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்கள். அதன் அடிப்படையில், வெள்ளலூரில் 61.62 ஏக்கர் பரப்பளவில், 178.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அரசு மானியம் மற்றும் உள்கட்டமைப்பு நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி உதவி பெற்று நடப்பு நிதியாண்டில் இப்பேருந்து நிலையம் செயலாக்கத்திற்கு கொண்டு வரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அறிவித்தார்.