அயோத்தி விவகாரம்: ஒரு வாரத்திற்குள் இடைக்கால அறிக்கை தேவை: மத்தியஸ்த குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பதிவு செய்த நாள் : 11 ஜூலை 2019 11:26

புதுடில்லி,           

அயோத்தி விவகாரம் தொடர்பாக ஜூலை 18ம் தேதிக்குள் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என மத்தியஸ்த குழுவிற்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தை 3 அமைப்புகள் பங்கிடுவது தொடர்பான அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து 14 மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இவற்றை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு, இதுபற்றி நீதிமன்றத்திற்கு வெளியே பேச்சுவார்த்தை நடத்தி சுமுக முடிவு எடுப்பதற்காக ஒரு மத்தியஸ்த குழுவை அமைத்தது.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையிலான அந்த குழுவில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், நீதிபதி கலிஃபுல்லா, ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அந்த குழுவுக்கு வரும் ஆகஸ்டு 15ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மத்தியஸ்த குழு சரியாக செயல்படவில்லை என சில இந்து அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது 15 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் அயோத்தி பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணவேண்டும் என்ற மூத்த வழக்கறிஞர் பராசுரன் கோரிக்கை வைத்தார்.

இதற்கு, மத்தியஸ்த குழு முடிவெடுத்து அறிக்கை தாக்கல் செய்யும் வரை காத்திருக்கலாமே என நீதிபதிகள் கூறினர்.

இதையடுத்து, சமரசக் குழு விசாரணை நடத்தி, வரும் ஜூலை 18ம் தேதிக்குள் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும், இணக்கமான தீர்வை மத்தியஸ்த குழு பரிந்துரை செய்யாவிட்டால், அதற்குப் பிறகு இந்த விவகாரத்தை வரும் ஜூலை 25ம் தேதி முதல் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.