யார் இவர்?

பதிவு செய்த நாள் : 12 ஜூலை 2019

அன்று மாலை சூரி­யன் மறைய துவங்­கி­யது; பற­வை­கள், கூடு­களை நோக்­கிச் சென்­றன. வேலை முடித்து, ஆடு, மாடு­க­ளோடு வீடு திரும்­பி­னர் மக்­கள்.

அவன், நண்­பர்­க­ளு­டன், குளக்­கரை பக்­க­மாக நடந்­தான். அவ­னுக்கு மேலாக, ஒரு பற­வைக் கூட்­டம் பறந்­தது. அந்த கூட்­டத்­தைப் பார்த்­தான்; அவை, கிழக்­கி­லி­ருந்து, மேற்­காக கூடு­க­ளுக்கு திரும்­பி­கொண்­டி­ருந்­தன.

இதை கவ­னித்­த­வன், 'ஒரு கேள்வி கேட்­கி­றேன்; பதில் கூறுங்­கள் பார்ப்­போம்...' என, நண்­பர்­க­ளி­டம் சொன்­னான்.

'கேள் பார்ப்­போம்...'

'வானத்­தில் கொக்­கு­கள், எந்த வகை அள­வில் பறக்­கின்­றன...'

'அவற்­றின் இடை வெளிக்கு ஏற்ப பறக்­கின்­றன...' என்­ற­னர்.

அவன் யோசித்­த­படி, 'அப்­படி இல்லை...' என்­றான்.

'பின் எப்­படி...'

'பற­வை­கள் பறப்­பது, முக்­கோ­ணத்­தின் இரு பக்­கங்­க­ளில் உள்ள, நேர் கோடு­க­ளின் வெளி அமைப்­பில் உள்­ளது. இந்த, இரு வரி­சைக்­கும் இடை­வெளி துாரம், விரி­கோ­ணத்­தில், 150 டிகிரி அள­வில் இருக்­கும்...' என்று விளக்­கி­னான்.

நண்­பர்­கள் ஆச்­ச­ரி­யத்­தில் ஆழ்ந்­த­னர்.

ஒரு நாள் காலை, 'அம்மா... சாப்­பாடு தாங்க; பள்­ளிக் கூடத்­துக்கு நேர­மாச்சு...' என்­றான்.

'தம்பி... சோறு வடிக்க அரிசி இல்லை; பள்­ளிக் கூடம் சென்று வா, எப்­ப­டி­யா­வது அரிசி வாங்கி, மாலை­யில் சோறு வடிக்­கி­றேன்...' என, கண் கலங்க கூறி­னாள் அம்மா.

'சரிம்மா... மாலை­யில் சாப்­பி­டு­கி­றேன்...' என்று கூறி, தண்­ணீரை குடித்து, பள்­ளிக்­குச் சென்­றான்.

மாலை நெடு­நே­ர­மா­கி­யும் அவன் வீடு திரும்­ப­வில்லை. அம்­மா­வுக்கு பதட்­டம் அதி­க­ரித்து, தேட ஆரம்­பித்­தாள்.

அக்­கம் பக்­க­மெல்­லாம் விசா­ரித்­தாள்; எந்த தக­வ­லும் இல்லை.

'மதி­யம் பள்­ளி­யில் இருந்­தான்; அதன்­பின் எங்கே போனான் என்று தெரி­ய­வில்லை...' என்ற பதில்­களே கிடைத்­தன.

பள்­ளியை விட்­டால், கோவி­லில் தான் படிப்­பான்.

நண்­பன் ஒரு­வன், அவனை தேடி கோவி­லுக்­குச் சென்­றான்.

கோவில் மண்­ட­பத்­தில் அவன் படுத்­தி­ருந்­தான்; அவ­னைச் சுற்றி, சாக்­பீ­சால் கணக்­கு­கள் போடப் பட்­டி­ருந்­தன. தோளை தொட்டு எழுப்­பி­னான். திடுக்­கிட்­ட­படி, 'ஏண்டா எழுப்­புன. இன்­னும் பாதி கணக்கை முடிக்க வேண்­டுமே...' என்­றான்.

'நீ எங்­கடா கணக்­குப் போட்ட... துாக்­கத்­துல தானே இருந்த...'

'கன­வுல தான்; ச்சே... கெடுத்­துட்­டியே...'

'வீட்­டுக்கு போக­லாம்... அம்மா அழு­த­ப­டியே இருக்­கி­றார்...'

'நான் கணக்கு போடாம வர மாட்­டேன்...' என, தலைக்கு அடி­யில் வைத்து படுத்­தி­ருந்த நோட்டை எடுத்து, எழுத ஆரம்­பித்­தான். நண்­பன் காத்­தி­ருந்­தான். கணக்கை முடித்து, வீட்­டிற்­குப் புறப்­பட்­டான்.

அவன், எப்­போ­தும், கணக்­கையே நினைத்­தான். தன், மூன்று வயது வரை, வாய் பேச­மு­டி­யா­த­வ­னாக இருந்­தான்; இத­னால் மிக­வும் வருந்­தி­னர் பெற்­றோர்.

ஒரு நாள் -

வீட்­டுக்கு வந்த பெரி­ய­வர், 'உன் மகனை பள்­ளி­யில் சேர்த்து விடு; நன்­றாக பேசு­வான்...' என்று அவன் அப்­பா­வி­டம் கூறி­னார். அந்த அறி­வு­ரைப்­படி, பள்­ளி­யில் சேர்த்­த­னர். ஆறு மாதங்­கள் பள்­ளிக்கு சென்­ற­வன், சர­ள­மாக பேச ஆரம்­பித்­தான். அதன்­பின், கணக்­கு­கள் குறித்து மட்­டுமே பேசி­னான்.

மிகுந்த கூச்ச சுபா­வம் உள்­ள­வன். தான் உண்டு, தன் படிப்பு உண்டு என்று தான் இருப்­பான்; விளை­யாட செல்ல மாட்­டான்; வீட்­டுக்­குள்­ளேயே முடங்­கு­வான்.

சில நேரம், ஜன்­னல் வழியே தெருவை பார்த்­த­ப­டியே இருப்­பான். ஆசி­ரி­யர் நடத்­தும் பாடங்­களை ஊன்றி கவ­னிப்­பான். இதெல்­லாம், சரா­சரி பையன்­கள் செய்­கிற வேலை­யில்லை; அத­னால் பெற்­றோர் பயந்­த­னர்.

ஒரு நாள் -

வகுப்­பில், கணக்கு ஆசி­ரி­யர் பாடம் நடத்­திக் கொண்­டி­ருந்­தார்; உன்­னிப்­பாக கவ­னித்­துக் கொண்­டி­ருந்­தான்.

'வகுக்­கப்­ப­டும் எண்ணை, அதே எண்­ணால் வகுத்­தால் ஈவு ஒன்­றா­கும்...' என்­றார் ஆசி­ரி­யர்.

அவன் எழுந்து, 'அப்­படி என்­றால் பூஜ்­ஜி­யத்தை, பூஜ்­ஜி­யத்­தால் வகுத்­தால், ஈவு ஒன்று வருமா...' என்­றான்.

'பூஜ்­ஜி­யத்­திற்கு மதிப்­பில்லை...' என்­றார் ஆசி­ரி­யர்.

'பூஜ்­ஜி­யத்­திற்கு இடது பக்­கம் 1 என்று எழு­தி­னால், அது, பத்­தா­கி­றது அல்­லவா! எனவே, பூஜ்­ஜி­யத்­திற்கு மதிப்பு இல்லை என்று சொல்­ல­மு­டி­யாது...' என்­றான்.

அவ­னது கணித திறனை கேட்டு வியந்த ஆசி­ரி­யர், 'எனக்கு தெரி­யாத கணக்­கெல்­லாம் கூட, எளிய முறை­யில் போட்டு காட்­டு­கி­றியே... யாரி­டம் கேட்டு போடுற...' என்­றார்.

'என் கன­வில் கணக்கு தான் வரும்; மற்­ற­வர்­க­ளுக்கு புரி­யாத கணக்கை கன­வில் புரிந்­துக் கொள்­வேன். எந்த கணக்கை போட்­டா­லும், யாரோ எனக்கு சொல்லி தரு­வது போல இருக்­கும்...' என்­றான். அவர் யார் என்று கண்­டு­பி­டிச்­சிட்­டிங்­களா குட்­டீஸ்...

ஹாய் குட்­டீஸ் நீங்க தேடி­யது இவரை தான்... உலக புகழ் பெற்ற கணித மேதை, சீனி­வாச ராமா­னு­ஜம். ஏழை குடும்­பத்­தில் பிறந்து, வறுமை வாட்டி வதைக்க, விடாப்­பி­டி­யான முயற்­சி­யால், புகழ் நிலைக்க வாழ்ந்த கணித மேதை.