பாட்டிமார் சொன்ன கதைகள் – 224 – சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 12 ஜூலை 2019


மத யானை!

நீயும் இந்­தப் பிற­விக்கு முன் சொர்க்க வாசி­யாக இருந்­தாய். சொர்க்­கத்­தி­லும் என்னை நீ காத­லித்­தாய். உன்­னு­டைய விருப்­பத்­தை­யும் பூர்த்தி செய்து வாக்­குத் தத்­தம் செய்­தி­ருந்­த­படி வசுக்­க­ளை­யும் பிறந்­த­வு­ட­னேயே மானிட ஜன்­மத்­தி­லி­ருந்து விடு­வித்­தேன். தேவ காரி­யங்­கள் இப்­ப­டியே மனி­தர்­க­ளுக்கு விளங்­கா­ம­லி­ ருப்­ப­துண்டு.  ஆச்­ச­ரி­ய­மா­க­வும் பயங்­க­ர­மா­க­வும் தோன்­று­வ­துண்டு.

பிறகு கங்­கா­தேவி `` அஷ்­ட­வ­சுக்­க­ளில் ஒரு­வ­னா­கிய இந்­தக் குமா­ரன் மாத்­தி­ரம் உன்­னு­டைய விருப்­பத்­திற்­கி­ணங்க இந்த லோகத்­தில் வெகு காலம் இருப்­பான். இவன் பாக்­கி­ய­சாலி என்­றாய். உண்­மை­யில் அவர்­கள்­தான் பாக்­கி­ய­சா­லி­கள். இவன் தூண்­டித்­தான் மற்ற வசுக்­கள் வசிஷ்ட , மக­ரி­ஷி­யின்  பசு­வைத் திரு­டிச் சாபத்­திற்கு உட்­பட்­டார்­கள். எனவே அவர்­க­ளுக்கு விரை­வில் விடு­தலை கிடைத்­து­ விட்­டது. ‘ என்று சொல்லி, அந்­தர்த்­த­ன­மாகி விட்­டாள்.

அந்­தக் குமா­ரன்­தான் பின்­னா­ளில் பீஷ்­மா­சா­ரி­யார் என்று பிர­சித்தி பெற்று மகா­பா­ர­தப் புரு­ஷர்­க­ளில் ஒரு­வ­ராக விளங்­கி­னான். எட்­டாத சிக­ரம் எட்­டி­யது.

கங்கா தேவி தன்­னைப் பிரிந்து போன­பின், சந்­தனு மகா­ராஜா இராஜ போகத்­தில் வெற்­றுப்­புற்­ற­வ­னாய், வேட்­டை­யா­டு­வ­தி­லும் காட்­டிலே திரிந்து கொண்­டி­ருப்­ப­தி­லும் பெரும்­பா­லும் பொழுது போக்கி வந்­தான். அவ­னால் அந்த தெய்­வக் காத­லியை மறந்து விட முடி­ய­வில்லை. அடிக்­கடி முனி­வர்­க­ளோடு பழகி இந்­தி­ரிய ஜபம் செய்து கொண்டு ஞானத்­தை­யும் வைராக்­கி­யத்­தை­யும் அடைய முயன்­றான். எனி­னும் அந்­தக் காத­லி­யின் நினைவு அடிக்­கடி வந்து கொண்­டி­ருந்­தது.  மறு­ப­டி­யும் ஒரு சம­யம் அவன் வேட்­டை­யா­டிக் கொண்டு கங்கா நதிக்­க­ரை­யில் சஞ்­ச­ரித்­தான். பழைய நினை­வு­கள் வெள்­ள­மிட்டு வந்­தன. ஆனால் என்ன ஆச்­ச­ரி­யம் ! கங்­கை­யில் வெள்­ளம் ஏன் இவ்­வ­ளவு குறை­வா­க­ யி­ருக்­கி­றது? இந்த மகா நதி ஏன் முன்­போல் ஓடிக்­கொண்­டி­ருக்­க­வில்லை. இவ்­வி­த­மாக சிந்­தித்து அதன் கார­ணத்­தை­யும் குறித்து ஆராய்ந்து கொண்டே போகும் போது, இராஜ லட்­ச­ண­மும் வீர லட்­ச­ண­மும் நிரம்­பிய ஒரு சிறு­வ­னைக் கண்­டான்.

அந்­தச் சிறு­வன், இளஞ் சூரி­ய­னைப் போன்ற ஒளி­யுள்­ள­வ­னா­க­வும் முழு­மதி போன்ற முகம் உள்­ள­வ­னா­க­வும் இருந்­தான். வளர்ச்சி பெற்று வரும் அந்­தத் தோள்­க­ளும், மத­யானை போன்ற நடை­யும், தைரி­ய­லட்­சுமி குடி­கொள்­ளும் அந்த முக மண்­ட­ல­மும் அர­ச­னுள்­ளச்த்தை வசீ­க­ரித்து விட்­டன. அவன் தான் அஸ்­தி­ரங்­க­ளைப் பிர­யோ­கித்­துக் கங்கை வெள்­ளத்தை அப்­ப­டித் தடுத்­துக் கொண்டு நிற்­கி­றா­னென்­பதை அறிந்­த­தும், அர­ச­னு­டைய ஆச்­ச­ரி­யம் இன்­னும் அதி­க­மா­யிற்று.

`மனி­தர்­க­ளுக்கு முடி­யாத இப்­ப­டிப்­பட்ட வீரச் செயல்­களை செய்­யும் இவன் யார் ? என்று சந்­தனு பிர­மித்­துப் போனான். சிறு­வனோ புன்­சி­ரிப்­போடு கங்­கை­யிலே மறைந்து போனான். அர­ச­னு­டைய ஆச்­ச­ரி­யம் கரை கடந்து பொங்­கி­விட்­டது.

தீடி­ரென்று அந்­தப் பழைய காலம் திரும்பி வந்­துது போலத் தோன்­றி­யது.. மறு­ப­டி­யும் வந்­து­விட்­டாள் கங்­கா­தேவி. ஆனால் காத­லி­யின் அந்த நிலை­யில் அல்ல. தாயின் கருணை முகத்­திலே ததும்­பி­யது. அதே திவ்ய ரூபம், அதே ஆப­ர­ணம் அலங்­கா­ரம். அதே வெண்­பட்­டாடை. ஒரு நிமி­ஷத்­திற்கு முன் சந்­தனு பார்த்த அதே சிறு­வனை வலது கையில் பிடித்­துக்­கொண்டு எதிரே தோன்­றி­னாள்.  `` அரசே உன்­னு­டைய எட்­டா­வது புதல்­வன் இவன் . அழைத்­துக்­கொண்டு போய் வளர்த்­தே­னல்­லவா? சிறந்த அறி­வாளி. முதன்­மை­யான வில்­லாளி. அரச நீதி­யி­லும் தகுந்த பயிற்­சி­ய­ளித்­தி­ருக்­கி­றேன். மன­வு­று­தி­யில் இவ­னுக்கு மேற்­பட்­ட­வர் யாருமே இல்லை. உன் வீட்­டுக்கு அழைத்­துக் கொண்டு போ’ என்று சொன்­னாள்.

இவ்­வாறு சொல்லி அந்த கங்கை வெள்­ளத்­தி­லேயே மறைந்து போன­தும், சந்­தனு மகா­ரா­ஜான் அந்த வீர­புத்­தி­ரன் மீது விசேஷ அன்பு பாராட்­டி­னான். இரா­ஜ­தா­னிக்கு வந்த இள­வ­ர­ச­னுக்­குப் பட்­டா­பி­ஷே­கம் செய்­வித்­தான். அவனை கங்கா புத்­தி­ரன் என்று வாய் குளிர உளம் குளிர அழைத்து வந்­தான். பழைய காதல்; புத்­திர வாத்ஸ்ல்­ய­மாக பரி­ண­மித்து விட்­டது. அந்­தப் புத்­தி­ர­னும் தன் ஒழுக்­கத்­தி­னால் தந்­தை­யை­யும், தேசத்­தை­யும் ஒருங்கே மகிழ்­வித்­தான். அர­ச­னு­டைய ஒழுக்­கத்­தை­யும், இள­வ­ர­ச­னு­டைய உயர்ந்த சுபா­வத்­தை­யும் கண்டு, பொரு­ளை­யும் இன்­பத்­தை­யும் காட்­டி­லும் தர்­மமே சிறந்­தது என்று மக்­கள் உறுதி கொண்­ட­னர்.

இப்­படி நான்கு ஆண்­டு­கள் கழிந்த பின், சந்­த­னு­வுக்கு மறு­ப­டி­யும் காடு­க­ளைப் பார்க்க வேண்­டு­மென்­றும், தனி­மை­யாக சஞ்­ச­ரிக்க வேண்­டு­மென்­றும் ஆசை ஏற்­பட்­டது. ஒரு நாள் யமுனை ஆற்­றங்­க­ரை­யில் தன் இஷ்­டப்­படி சஞ்­சா­ரம் செய்து வரு­கை­யில், தோணி  நடத்­திக் கொண்­டி­ருந்த ஒரு பெண்­ணைக் கண்டு `` நீ யாரு­டைய பெண்?’ என்று விசா­ரித்­தான். ` நான் செம்­ப­ட­வப் பெண்’ என்று அவள் பதில் சொன்­னாள். அர­சனோ, ` ரூபத்­தின் இனிமை போலி­ருக்­கி­றது. சொல்­லி­யும் இனி­மை­யும் ‘ என்று தனக்­குள் தானே சொல்­லிக் கொண்­டான். `இவள் தன்னை ஒரு தெய்­வப் பெண் என்று  சொல்­லிக் கொண்­டி­ருக்­க­லாம். ஆனால் எந்­தத் தெய்­வத்­திற்கு இந்த ரூபம் உண்டு ?’ என்ற ஆராய்ச்­சி­யில் மூழ்­கிப் போனான். கங்கா தேவி­யின் காதல் ஏதோ ஒரு பழைய கனவு போல் மறந்து கொண்­டி­ருந்­தது. ` அந்த தேவிக்­கும் இந்த அழகு கிடை­யாது ‘ என்று சித்­தஞ்ச் செய்து விட்­டான்.

 சந்­தனு இந்­தப் புதிய சித்­தாந்­தத்­திலே தன் பத­வி­யை­யும் மறந்து, அவள் தந்­தை­யி­டம் நேரில் போய் அவ­ளைத் தனக்கு தர்­ம­பத்­தி­யாக மணம் செய்து கொடுக்­கும்­படி வேண்­டிக் கொண்­டான். அதற்­குச் செம்­ப­ட­வன் ` அவளை ராணி­யாக மணம் செய்து வைக்­கி­றேன்.  அப்­ப­டி­யா­னால் ராஜாவே ! நீ எனக்கு ஒரு பிர­திஞ்சை செய்து கொடுக்க வேண்­டும்.’ என்று சொன்­னான்.             (தொட­ரும்)