இந்தியாவில் கொலை செய்யப்படுவோரில் 80 சதவீதம் பெண்கள் : ஐநா ஆய்வறிக்கை தகவல்

பதிவு செய்த நாள் : 09 ஜூலை 2019 20:58

நியூயார்க்,

   இந்தியாவில் கொலை குற்றங்களில் பலியானவர்களில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பெண்கள். அதிலும் 40 முதல் 50 சதவீதம் பேர் வரதட்சணைக்காக கொல்லப்படுவதாக ஐநா வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோமிசைட் என்றழைக்கப்படும் கொலை குற்றங்கள் தொடர்பான அறிக்கையை ஐநாவின் போதை மருந்து மற்றும் கிரைம் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

தி குளோபல் ஸ்டடி ஆன் ஹோமிசைட் 2019 என்றழைக்கப்படும் இந்த ஆய்வறிக்கையில் கடந்த 2017ம் ஆண்டு உலகளவில் 4.64 லட்சம் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் 60 சதவீதம் மக்கள் தொகை கொண்ட ஆசியாவில் கடந்த 2017ம் ஆண்டு கொலை குற்றங்களின் எண்ணிக்கை குறைந்த சதவீதத்தை கொண்டுள்ளது. அதற்கு நேர் மாறாக அமெரிக்காவில் உலகளவில் அதிக கொலை குற்றங்கள் பதிவாகியுள்ளன.

இந்தியாவில் கொலை குற்றங்களின் எண்ணிக்கை கடந்த 2000ம் ஆண்டு முதல் படிப்படியாக குறைந்து வருவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2000ம் ஆண்டு 48,167 ஆக இருந்த கொலை குற்றங்கள் 2016ம் ஆண்டில் 42,678 ஆக குறைந்துள்ளது. குறிப்பாக கடந்த 2009 முதல் 2015ம் ஆண்டு வரை கொலை குற்றங்களின் எண்ணிக்கை 10 சதவீதம் குறைந்துள்ளது.

இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கொலை குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேசமயம் இந்தியாவின் தென் மாநிலங்களில் கொலை குற்றங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இந்தியாவில் நடக்கும் ஒட்டுமொத்த கொலையில் ஆண்களின் எண்ணிக்கை 20 சதவீதத்தை விட குறைவு

இந்தியாவின் தேசிய கிரிமினல் ரெக்கார்டு பியூரியோ அளித்த தகவலின் படி இந்தியாவில் கொலை செய்யப்படும் பெண்களில் சுமார் 40 முதல் 50 சதவீதம் பேர் வரதட்சணை கொடுமை காரணமாக கொல்லப்படுகிறார்கள். இந்த எண்ணிகை கடந்த 1999ம் ஆண்டு முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் வரதட்சணை வாங்குவதற்கு கடந்த 1961ம் ஆண்டு தடைவிதிக்கப்பட்டாலும் இந்த வழக்கத்தை ஒழிக்க முடியவில்லை. நாடு முழுவதும் பல பெண்கள் ஆண்டுதோறும் வரதட்சணை காரணமாக கொல்லப்படுகிறார்கள்.

ஆணாதிக்க சமுதாயமான இந்தியாவில் பெண் சிசுகொலையின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மூட நம்பிக்கை காரணமாக சில பெண்கள் சூனியக்காரி என்று குற்றம்சாட்டப்பட்டு கொல்லப்படுவதாக ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தெற்காசியாவில் திருமணமான பெண்களில் ஐந்தில் ஒருவர் கணவரால் கொடுமைக்கு செய்யப்படுகிறார்கள். அதிகப்பட்சமாக வங்காளதேசத்தில் 47 சதவீதம் பெண்கள் இந்தியாவில் 34 சதவீதம் பெண்கள் கணவரால் சித்தரவதைக்கு ஆளாகிறார்கள் என்றும் ஐநா ஆய்வறிக்கை கூறுகிறது.