சர்ச்சைக்குரிய மசோதா கைவிடப்படுவதாக ஹாங்காங் அரசு அறிவிப்பு : போராட்டக்காரர்கள் ஏற்க மறுப்பு

பதிவு செய்த நாள் : 09 ஜூலை 2019 20:36

ஹாங்காங்,

  ஹாங்காங்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணைக்காக சீனாவுக்கு அனுப்ப வழிவகை செய்யும் சர்ச்சைக்குரிய மசோதா கைவிடப்படுவதாக ஹாங்காங் நிர்வாக தலைவர் காரி லாம் இன்று அறிவித்தார். அதேசமயம் மசோதாவை சட்டமன்றத்தில் இருந்து திரும்பி பெற காரி லாம் மறுத்துவிட்டார். அதனால் மசோதா கைவிடப்படுவதாக காரி லாம் கூறியதை போராட்டக்காரர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.

ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களை சீனாவிடம் ஒப்படைக்க வழிவகை செய்யும் மசோதா ஒன்று ஹாங்காங் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த சட்டத்தின் மூலம் சீன அரசுக்கு எதிராக குரல் கொடுப்போர் மீது தேசிய விரோத சட்டத்தின் கீழ் சீனா நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக ஹாங்காங் மக்கள் அஞ்சுகிறார்கள்.
இந்த சர்ச்சைக்குரிய மசோதாவிற்கு எதிராக கடந்த ஜூன் 9ம் தேதி லட்சக்கணக்கான மக்கள் ஹாங்காங்கில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

30 ஆண்டுகளுக்கு பின் ஹாங்காங்கில் நடைபெற்ற இந்த மக்கள் போராட்டம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. பல உலக நாடுகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்தன. மக்கள் போராட்டத்தால் ஹாங்காங் அரசு மீது அழுத்தம் அதிகரித்த காரணத்தால் மசோதாவை தற்காலிகமாக கைவிடுவதாக ஹாங்காங் அரசின் நிர்வாக தலைவர் கேரி லாம் ஜூன் 15ம் தேதி அறிவித்தார். மேலும் இந்த மசோதாவால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

அதை தொடர்ந்து மக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். அதேசமயம் மசோதாவை தற்காலிகமாக கைவிட்டால் போதாது. அதை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வந்தனர். மசோதாவை ரத்து. செய்யும்படி ஹாங்காங் எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

மேலும் சீனாவுக்கு ஆதரவாக செயல்படும் ஹாங்காங் அரசின் தலைவர் காரி லாம் பதவி விலக வேண்டும். கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் விடுவிக்கப்பட வேண்டும். போராட்டத்தில் போலீசாரின் வன்முறை செயல்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.

போராட்டக்காரர்களின் இந்த நிபந்தனைகளை ஏற்க காரி லாம் மறுத்துவிட்டார். அதன் காரணமாக ஹாங்காங்கில் மக்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மசோதா கைவிடப்பட்டது

ஹாங்காங்கில் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் சர்ச்சைக்குரிய மசோதா கைவிடப்பட்டதாக ஹாங்காங் நிர்வாக தலைவர் காரி லாம் இன்று அறிவித்தார்.

‘‘எனது நிர்வாகம் இந்த மசோதாவை நிறைவேற்ற எடுத்து கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்து விட்டன. எனவே மீண்டும் இந்த சர்ச்சைக்குரிய மசோதாவை நிறைவேற்றும் திட்டம் ஹாங்காங் அரசுக்கு இல்லை. மசோதா முழுமையாக கைவிடப்படுகிறது’’ என்று காரி லாம் அறிவித்தார்.

அதேசமயம் சட்டமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் இருந்து மசோதாவை திரும்ப பெற காரி லாம் மறுத்துவிட்டார். இதனால் போராட்டக்காரர்கள் காரி லாம் கூறுவதை ஏற்க மறுத்துவிட்டனர். மேலும் மசோதா முழுமையாக ரத்து செய்யப்படாவிட்டால் மீண்டும் போராட்டங்கள் தொடரும் என எச்சரித்துள்ளனர்.

சீனா பதில்

சர்ச்சைக்குரிய மசோதா கைவிடப்படுவதாக ஹாங்காங் அரசு அறிவித்தது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கெங் ஷுவாங்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த கெங் ஷுவாங் கடந்த ஜூன் 15ம் தேதி மசோதா தற்காலிகமாக கைவிடப்பட்ட போது ஹாங்காங் அரசின் முடிவை மதிப்பதாகவும் புரிந்து கொள்வதாகவும் சீனா கூறியது. இந்த விவகாரத்தில் இதற்கு மேல் புதிதாக கூற ஒன்றுமில்லை என்று கெங் ஷுவாங் தெரிவித்தார்.

அதேசமயம் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ ஆகியோர் ஹாங்காங்கின் பிரபலமான ஊடக நிறுவனங்களான நெக்ஸ்ட் டிஜிட்டல் மற்றும் ஆப்பிள் டெய்லி செய்திதாள் ஆகியவற்றின் நிறுவனர் ஜிம்மி லாய் சீயிங்கை சந்தித்து மக்கள் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தியதற்கு கெங் ஷுவாங் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

ஹாங்காங் சட்டத்தை மதித்து அந்நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று கெங் ஷுவாங் வலியுறுத்தினார்.