அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா வரி விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது : அதிபர் டிரம்ப் சாடல்

பதிவு செய்த நாள் : 09 ஜூலை 2019 20:27

வாஷிங்டன்,

   அமெரிக்காவின் ஏற்றுமதி பொருட்கள் மீது இந்தியா அதிக வரி வசூலிப்பதை இனி ஏற்றுக்கொள்ள முடியாது என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் டுவிட்டரில் சாடியுள்ளார்.

அமெரிக்காவின் பிரபல ஹார்லே டேவிட்சன் மோட்டா வாகனங்கள் உட்பட இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அமெரிக்க பொருட்கள் மீது அதிகளவில் வரி வசூலிக்கப்படுவதாக அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்தியாவை வரிகளின் ராஜா என்றும் அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக இன்று டுவிட்டரில் பதிவிட்டுள்ள அதிபர் டிரம்ப் ‘‘அமெரிக்க பொருட்கள் மீது பல காலமாக இந்தியா அதிகளவில் வரி விதித்து வருகிறது. இனி இதை ஒருபோதும் ஏற்க முடியாது’’ என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஹார்லே டேவிட்சன் வாகனங்கள் தொடர்பாக அதிபர் டிரம்ப் புகார் கூறியதை தொடர்ந்து ஹார்லே டேவிட்சன் வாகனங்கள் மீது வசூலித்து வந்த 100 சதவீத வரியை மத்திய அரசு 50 சதவீதமாக குறைத்தது.

இந்தியாவின் வரி குறைப்பு நடவடிக்கையை அதிபர் டிரம்ப் வரவேற்றாலும் ஹார்லே டேவிட்சன் வாகனங்கள் மீது 50 சதவீத வரி வசூலிக்கப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில் இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக மோதல் சமீபத்தில் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஸ்டீல், இரும்பு பொருட்கள் மீதான வரியை அதிபர் டிரம்ப் உயர்த்தினார். மேலும் இந்தியாவுக்கு வழங்கி வந்த வரியில்லா சலுகையை அதிபர் டிரம்ப் கடந்த மாதம் ரத்து செய்தார்.

அதற்கு பதிலடியாக கடந்த மாதம் அமெரிக்காவின் பாதாம், பருப்பு வகைகள் உள்ளிட்ட 28 பொருட்கள் மீது இந்தியா கூடுதல் வரி விதித்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்தியாவின் இரும்பு மற்றும் ஸ்டீல் மீதான வரி உயர்வை எதிர்த்து உலக வர்த்தக நிறுவனத்தில் அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 28ம் தேதி ஜப்பானில் நடந்த ஜி20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிபர் டொனால்ட்  டிரம்ப் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இருதரப்பு வர்த்தக பிரச்சனைக்கு தீர்வு காண இருநாட்டு வர்த்தக அமைச்சர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

மேலும் இந்த வாரம் அமெரிக்கா தலைநகர் வாஷிங்டன் நகரில் இந்தியா தொடர்பாக நடைபெறவிருக்கும் கூட்டத்தில் அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சர் வில்பர் ராஸ் மற்றும் எரிசக்தித்துறை அமைச்சர் ரிக் பெரி இருவரும் கலந்து கொள்கிறார்கள்.