தற்செயல் அல்ல...!
(சென்ற வாரத் தொடர்ச்சி...)
இளையராஜா பாடிய பாடல்களைப் பற்றிய என் அனுமானம் பிறரால் பாடவியலாத பாடுவதற்கான மிகத்துல்லியமான குரல் அகப்படாத பாடல்களை மாத்திரம் அவர் பாடியவரில்லை. அவை அவர் பாடிய பாடல்களில் சிலபல. அவற்றைத் தாண்டி அவர் பாடிய பாடல்களில் பெருவாரிப் பாடல்கள் வெற்றிபெற்ற சூப்பர்ஹிட் பாடல்களாக அமைந்தது தற்செயலல்ல. மேற்சொன்ன ப்ளூ வகைமைக் குரலாளர்கள் உலக அளவில் தாபம் பொங்குகிற பாடல்களையும் பாடியிருப்பது கூறத்தக்கது.
இளையராஜாவின் வசீகரம் அப்படியான பாடல்களைத் தன்னாலான அளவு வித்யாசப் படுத்தியது தான். உதாரணமாக ஆத்தாடி பாவாட காத்தாட என்ற பாடல் பூவிலங்கு படத்தில் இடம்பெற்றது. அதன் துவக்க இசை மிகப் பலமான புல்லாங்குழல் ஒற்றையாகத் தொடங்கி மெல்ல தாளக்கருவியில் நிலைபெறும். ஆத்தாடி பாவாட காத்தாட எனத் தொடங்கி குளிக்குது ரோசா நாத்து எனும் போது ஒளிந்திருந்து காணக் கிடைத்த தழுவல் காட்சிபோல மனமெங்கும் விரவும்.
உன்னிப்பாகக் கவனித்தால் ஆபாசமாகவோ முகஞ்சுளிக்கிற அளவுக்கோ இந்தப் பாடல் சென்றுவிடாமல் இருப்பதற்கான கடிவாளமாக இந்தப் பாடலின் பின்மைய இசையை மென் சோக இசைக்கோர்வையாகவே அமைத்திருப்பார். தாளக்கட்டு காதலும் சரசமும் பொங்கும். தன் குரலால் கடிவாளம் கட்டி இருவேறு குதிரைகளைப் பாடலின் பூர்த்தி கணம் வரைக்கும் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருப்பார் ராஜா.
காரணமின்றிக் கண்ணீர் வரவழைக்கிற பாடல்களைத் தந்த அதே குரலா மனதின் அணுக்கமான அடியாழத்திலிருந்து பரவசத்தையும் கிளர்ச்சியையும் உற்பத்தி செய்தது என்ற வினாவுக்கு அந்த ராஜாவால் மாத்திரமே பதிலளிக்க முடியும். காதல் கசக்குதய்யா போன்ற பாடல்களை லேசான அயர்ச்சியுடன் பாடி இருப்பார் ராஜா.
ஜேசுதாஸ் உடன் ராஜா இணைந்து பாடிய பாடல்களில் கடலோரம் கடலோரம் அலைகள் ஓடி விளையாடும் என்ற பாடல் எப்போதும் இனிக்கும் ரகம். கடல் சார்ந்த இசையை இந்தியப் படங்களில் சலீல்தா ராஜா உட்பட வெகு சிலரே துல்லிய அற்புதங்களாக வார்த்திருக்கிறார்கள். அப்படியான பாடல்களில் இதுவும் ஒன்று. முழுவதுமாக சற்று மேல் தளத்தில் ராஜாவும் கொஞ்சம் இறங்கிய இடத்தில் ஜேசுதாஸூம் பாடியிருப்பது ரசம். இரண்டு குரல்களும் இணைந்தொலிக்கிற இடங்களிலெல்லாமும் விலகி நெருங்கி பரவச கேட்பனுபவமாக விரிந்திருக்கும்.
அவதாரம் படத்தில் வருகிற அரிதாரத்தைப் பூசிக் கொள்ள ஆசை பாட்டை ராஜா எடுத்திருக்கும் அழகே அழகு. நாசர் குரலில் வசனங்களும் ராஜா குரலில் பாடலும் மாறி மாறி தொடங்கும்.ஒரு கட்டத்தில் நாசர் பாடுவதாகவே நம் மனம் நம்பும். இளையராஜா குரலில் நேர்த்திய அற்புதங்களில் இந்தப் பாடலும் ஒன்று என்பேன்.
இளையராஜா தன் குரலில் பாடிய பாடல்கள் எத்தனை இருந்தாலும் கூட ஆகச்சிறந்த பெருவிருப்பப் பாடலாக இதனைத் தான் சொல்ல முடிகிறது. இதனைக் கேட்ட மாத்திரத்தில் இருந்து இந்தக் கணம் வரைக்கும் எனக்குள் சதா ஆலவட்டங்களை உண்டு பண்ணிக் கொண்டிருக்கிற அந்தப் பாடல் சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது. ஜானகியுடன் சேர்ந்து பாடியிருப்பார் ராஜா. ஆட்டோராஜா படத்தில் இடம்பெற்ற இப்பாடல் பல மொழிகளிலும் ராஜாவால் பயன்படுத்தப் பட்டது.
பூமணி படத்தில் ராஜா பாடிய தோள் மேல தோள் மேல பாடல் சுஜாதவுடன் பாடியிருப்பார் ராஜா...
நான் இருந்தேன் வானிலே மேகமாய்
ஏன் விழுந்தேன் பூமியில் வேகமாய்
வீழ்ந்ததும் நல்லதே தாகமாய் உள்ளதே
மறக்க முடியாத பாடல். இந்தப் பாடல் முழுவதையும் மென் நோய்மை கலந்த குரலில் பாடி இருப்பார் ராஜா. உடன் பாடிய சுஜாதா குரலுக்கேற்ற ஓரிடத்தில் ஒலிக்கும் முழுப்பாடலும்.