உயர்கல்வியில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது: அமைச்சர் அன்பழகன் தகவல்

பதிவு செய்த நாள் : 09 ஜூலை 2019 12:47

சென்னை,

கல்வித் தரத்தில் முன்னேறிய மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது பேசிய தி.மு.க. உறுப்பினர் இன்பசேகரன்

தர்மபுரி மாவட்டம் கல்வித் தரத்தில் பின் தங்கியுள்ளதாக தெரிவித்தார்.

அதற்கு பதில் அளித்தார் அமைச்சர் கே.பி. அன்பழகன்,

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் 3 ஒன்றியங்கள் மட்டுமே கல்வித் தரத்தில் சற்று பின்தங்கி இருந்ததாகவும், அங்கு புதிய மாதிரி பள்ளிகள் அமைத்து மாணவர்களின் கல்வித் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மேல்நிலைப் பள்ளியில் இருந்து உயர்நிலை படிப்புக்கு சென்ற மாணவர்களின் விகிதம் 98.41 சதவீதமாக உள்ளதாகவும்,

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 6 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 1 பொறியியல் கல்லூரி, 3 சட்டக்கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், உயர்கல்வியில் தமிழகம் முதன்மை மாநிலமாக இருப்பதாகவும் அமைச்சர் அன்பழகன்  கூறினார்.

பின்னர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேசினார்.

பள்ளிக் கல்வித் தரத்தில் 11-வது இடத்தில் இருந்த தருமபுரி, அரசின் நடவடிக்கைகளால் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.