ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

பதிவு செய்த நாள் : 08 ஜூலை 2019 19:26

வாஷிங்டன்

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா ஆகியவற்றுடன் ஈரான் செய்துகொண்ட ஒப்பந்தப்படி யுரேனியத்தை 3.67 சதவீதத்துக்கு மேல் செறிவு படுத்தக்கூடாது. ஆனால் அமெரிக்கா ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி விட்ட காரணத்தினால் யுரேனியத்தை 30 சதவீதத்துக்கும் மேல் செறிவூட்ட போவதாக ஈரான் அறிவித்திருந்தது. ஈரானின் அறிவிப்பு தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டார்.

வரம்புக்கு மேல் யுரேனியத்தை ஈரான் செறிவூட்டும் பணியை மேற்கொண்டால் அதன் விளைவுகள் கடுமையானதாக இருக்கும். ஈரான் மிகுந்த கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டியது அவசியம் என டிரம்ப் கூறினார். ஈரானை எச்சரிக்கை செயவதற்கு காரணம் என்ன என்று நான் இப்பொழுது சொல்ல மாட்டேன். அந்தக் காரணம் நல்ல காரணமல்ல. ஈரான் மிக கவனத்தோடு நடந்து கொள்ள வேண்டும். அதுதான் இப்பொழுது நான் கூற விரும்பும் செய்தி என நியூ ஜெர்சி மாநிலத்தில் மோரிஸ் டவுன் செய்தியாளர்களிடம் டிரம்ப் குறிப்பிட்டார்.

பாம்பியோ எச்சரிக்கை

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ ஈரானுக்கு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டார். 

ஒப்பந்தத்துக்கு அதிகமாக யுரேனியத்தை செறிவூட்டும் பணியினை ஈரான் மேற்கொண்டால் மேலும் புதிதான பொருளாதாரத் தடைகளை ஈரான் சந்திக்க நேரிடும் என பாம்பியோ தெரிவித்தார்.

90 சதவீத்த்துக்கு மேல் யுரேனியத்தை செறிவூட்டினால்தான் அதனை அணு குண்டுகளில் பயனபடுத்த இயலும் என்பது குறிப்பிடத் தக்கது.