சென்செக்ஸ் 793 புள்ளிகள், நிப்டி 252.55 புள்ளிகள் சரிவு

பதிவு செய்த நாள் : 08 ஜூலை 2019 18:02

மும்பை,

  மத்திய பட்ஜெட் தாக்கல் முதலீட்டர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக மத்திய பட்ஜெட் தாக்கலுக்குப் பின் முதல் நாளான இன்று சென்செக்ஸ் சரியத் தொடங்கியது. மாலையில் சென்செக்ஸ் 793 புள்ளிகள் சரிந்த நிலையில் வர்த்தகம் முடிவடைந்தது.   

மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் கடந்த 5ம் தேதி தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலையொட்டி காலை மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 40,022.73 புள்ளியை எட்டியது. 

பட்ஜெட்டில் தங்கத்திற்கு கூடுதல் வரி, பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற காரணங்களால் அன்று மாலையே வர்த்தகத்தில் சென்செக்ஸ் 394.67 புள்ளிகள் சரிந்து நிலைபெற்றது.

இந்நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு பின் 2019-20ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கலுதலுக்குப் பின்  நடைபெறும் முதல் பங்குச்சந்தை இன்று காலை சென்செக்ஸ் புள்ளிகள் 405.67 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து மதியம் சென்செக்ஸ் புள்ளிகள் திடீரென  907 புள்ளிகள் சரிந்து 38,757.52 புள்ளிகளைச் சந்தித்தன. இதைப் போல் நிப்டியும் 246.75 புள்ளிகள் சரிந்து 11,564.40 புள்ளிகளை கடந்தது.

மத்திய பட்ஜெட்டில் கூடுதல் வரி காரணமாக குறிப்பாக அந்நிய முதலீட்டாளர்கள் மீது அதிக வரிச்சுமை காரணமாக சென்செக்ஸ் புள்ளிகள் இன்று சரிவடைந்தன.

இந்நிலையில் மாலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 792.82 புள்ளிகள் சரிந்து 38,720.57. புள்ளிகளில் நிலைபெற்றது.

தேசியப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிப்டி 252.55 புள்ளிகள் சரிந்து 11,558.60 புள்ளிகளில் நிலைபெற்றது.

பஜாஜ் நிதி, ஓ.என்.ஜி.சி, என்டிபிசி, ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் மாருதி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் இன்று ஒரு நாளில் 8.18 புள்ளிகள் சரிந்தது. மறுபக்கம் யெஸ் வங்கி, ஹெச்சிஎல் டெக் மற்றும் டிசிஎஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 5.56 சதவீதம் உயர்ந்தது.

இந்திய ரூபாயின் மதிப்பு

இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை (08-07-2019) வர்த்தகம் துவங்கியதும் அமெரிக்க டாலருக்கு எதிரான நாணய மாற்றின் போது 16 காசுகள் சரிந்து ரூ. 68.58 காசுகளாக இருந்தது.

இன்று மாலையில் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.68.64 காசுகளாக நிலைபெற்றது.

கடந்த வர்த்தக இறுதியில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.42 காசுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.