சிறப்பாக வாழவைக்கும் சிவலோகநாதர்!

பதிவு செய்த நாள் : 09 ஜூலை 2019

சிவலோக பண்டாரநாதர்...!

மெல்லிய தேகம்... நீண்ட தாடி... இடுப்பை மட்டும் மறைக்கும் வஸ்திரம்... கையில் ஒரு கோல்...

சந்நியாசிக்கே உரித்தான எளிமையான தோற்றத்தில் நெல்லையப்பர் கோயிலுக்கு வந்திருந்தார். ஆனி மாதத் தேரோட்டம்! திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலின் சிகர நிகழ்ச்சியே இதுதான்.

ஊர் ஒன்றுகூடி வடம் பிடித்து இழுத்து வரும் தேரை இழுக்கச் சென்றார் சிவலோகநாதர்.  அவரின் பண்டாரக் கோலத்தைக் கண்டு முகம் சுழித்த சிலர், அவரை அங்கிருந்து விரட்டிவிட்டனர்.  தமது அவா நிறைவேறாத நிலையில் அங்கிருந்து சென்றுவிட்ட சிவலோகம், சிறிதுநேரம் கழித்து ஒரு காளை மாட்டின்   மீது அமர்ந்து வந்தார்.  முன்னே சென்று, அசைந்து அசைந்து கம்பீரமாக வரும் தேரழகை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.  மீண்டும் சந்நியாசியைப் பார்த்துவிட்ட இளைஞர் கூட்டம் கேலி, கிண்டல் செய்து, காளையின் மீது கல்லெறிந்து மறுபடியும் அவரை விரட்டியது.  அங்கிருந்து சென்றுவிட்டார் சந்நியாசி.

தெருவாசிகளின் பூஜை முடிந்து, முட்டுக்கட்டை அகற்றப்பட்டது.  தேரை இழுத்தனர்...!  என்னே அதிசயம்...! அணுவளவும் தேர் நகரவில்லை.  விழாக்குழுவினரும் பக்தர்களும் பகீரதப் பிரயத்தனம் செய்தனர்.  தேர் அசைந்தபாடில்லை.  இரண்டு மாதங்களாக நெல்லையப்பர் தேர், வீதியிலேயே நின்றிருந்தது.

சிவக்குற்றத்திற்கு ஆளாகிவிட்டோமோ என்றஞ்சிய ஆலய நிர்வாகிகள், தேர் நகராமலிருப்பதன் காரணமறிய பிரசன்ன ஜோதிடரை நாடினர்.  அவர்களிடம் ஜோதிடர், ‘‘சந்நியாசிக் கோலத்தில் தேர் இழுக்க வந்த மகான் ஒருவரை சில இளைஞர்கள் தடுத்ததுடன், தேரோட்டம் பார்க்க விடாமல் அவமானப்படுத்தித் துரத்தியும் விட்டனர்.  தேர் நகராமல் இருப்பதற்கு சந்நியாசியின் வருத்தம்தான் காரணம்.  சந்நியாசி மனம் குளிர்ந்தால்தான் தேர் நகரும்; நிலைகொள்ளும்.  சந்நியாசி தற்போது திருக்குற்றாலத்தில் உள்ளார்” என்றதும், திருக்குற்றாலம் வந்தனர் ஆலய நிர்வாகிகள்.

தம்மைத் தேடி சிலர் வருவதை ஞானதிருஷ்டியின்மூலம் அறிந்து கொண்ட சிவலோகர், தம் கையிலிருந்த கோலை வீசியெறிந்தார்.  உடனே குற்றாலத்திலிருந்து புறப்பட்டு, கோல் விழுந்த இடமான சதுர்வேதிமங்கலம் வந்தடைந்தார்.  புராண காலத்தில் காசியப மகரிஷி, வருணபகவான், சுகோஷ முனிவர் போன்றோரின் தவபூமியாக விளங்கிய - நரசிம்மர் காட்சியளித்த தலமான சதுர்வேதிமங்கலம் வந்ததும் சந்நியாசி ஆனந்தம் கொண்டார்.  அங்கு ‘குருக்கள் மடம்’ எனும் பகுதியில் பனை ஓலையால் குடில் அமைத்து தங்கியிருந்தார்.  சில நாட்களிலேயே நெல்லையப்பர் கோயில் நிர்வாகிகள் அங்கு வந்துவிட்டனர்.  சந்நியாசியிடம் சாஷ்டாங்கமாக வீழ்ந்து மன்னிப்புக் கோரினர். அதனையேற்றுக்கொண்ட சிவலோகநாதர், தம் ஓலைக்குடிசையில் இருந்தவாறே தேரை வடம்பிடித்து இழுப்பதுபோன்று பாவனை செய்தார்.  2 மாதங்களாக நகராமலிருந்த தேர் உடனே நகரத் தொடங்கியது.  இதனை வந்திருக்கும் நபர்களிடமும் சித்து வேலை மூலம் காண்பித்தார்.  சந்நியாசியின் தவ வலிமையைக்கண்டு வியந்தவாறே, நன்றிகூறிச் சென்றனர் ஆலய நிர்வாகிகள்.

இதன் பின்னர் வைத்திய சேவை புரிவதிலும், ஜோதிடப்பலன் கணித்துக் கூறுவதிலும் ஈடுபட்டிருந்தார் சிவலோகநாதர்.  வெகுவிரைவிலேயே சந்நியாசியின் புகழ் நாற்புறமும் பரவி, ஏராளமானோர் நாடிவந்தனர்.  இதனால் ‘ஏடு ஜோதிடர்’ என்றே சந்நியாசியை அழைத்தனர். எனினும் சந்நியாசிகளுக்கே உரிய யாசகம் (உகதானம்) பெற்றே வாழ்ந்துவந்தார்.  கஞ்சி காய்ச்சி, அனைவருக்கும் பனை ஓலைப் பட்டையில் வழங்கினார்.  உணவருந்திய எச்சில் பட்டைகள் காய்ந்ததும் காற்றில் பறந்து, குருக்கள் மடத்தின் கிழக்குப் பகுதியிலுள்ள தெருக்களில் விழுந்தன.  இதனால் சந்நியாசிக்கும் அங்கிருந்த குடியிருப்புவாசிகளுக்கும் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டன.  சச்சரவு முற்றியது.  சந்நியாசியின் ஓலைக்குடிசை இளைஞர்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டு எரிந்து சாம்பலானது.  அப்போது சிவலோகநாதர், நரசிம்மர் கோயில் தெப்பக்குள நீரின் மீது துண்டை விரித்து அதன் மீது படுத்து சித்து புரிந்துகொண்டிருந்தார்.  நடந்தவற்றை ஞானதிருஷ்டி மூலம் அறிந்தார்.  தம் குடிசை மீது தீ வைத்தவர்களை சபித்தார்.  சாபம் பலிக்கத் தொடங்கியது.  அங்கிருந்த நான்கு தெருக்களும் தீப்பற்றி எரிந்து அழிந்தன. தீ வைத்தவர்களின் உடல்கள் அக்னியாகத் தகித்தன.

தவறை உணர்ந்த அப்பகுதி மக்கள், நரசிம்மர் கோயிலில் இருந்த சிவலோகநாதரைத் தேடிவந்து மன்னிப்புக் கேட்டதுடன், சாபவிமோசனமும் வேண்டினர். அவர்களிடம், சித்ரா பவுர்ணமியன்று தாம் ஜீவசமாதி ஆகவுள்ளதாகவும், அங்கு தமக்குக் கோயில் அமைத்து, ஒவ்வொரு பவுர்ணமியன்றும் சாம்பார் சாதம், தயிர் சாதம் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு வழங்கி வந்தால் சாபம் நீங்கும் என்றும் கூறினார்.

தாம் கூறியபடியே, ஒரு சித்ரா பவுர்ணமி நாளில், ஆறடி பள்ளம் தோண்டி நிலத்திற்குள் அமர்ந்து சமாதிநிலை அடைந்தார் சிவலோகநாதர்.  சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சம்பவம் இது.  சித்தரால் சபிக்கப்பெற்ற தெரு இன்றுவரை வளர்ச்சியடையாமல் ‘வெட்டுப்பட்டான் முடுக்கு’ என்னும் பெயரில் உள்ளது.  சில ஆண்டுகளுக்குமுன் ‘சிவலோக பண்டாரநாதர் ஜீவசமாதி’ கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்பெற்றது.  அதன்பின் இப்பகுதி அரசியல்ரீதியாகவும், ஆன்மிகரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் ஏற்றம் கண்டு வருகிறது.

சிவலோக பண்டாரநாதரை வழிபடுவதற்கு காலை நேரமும், வியாழக் கிழமையும், பூச நட்சத்திரமும், பவுர்ணமித் திதியும் உகந்தவை.  நல்லெண்ணெய், ஊதுபத்தி வழங்கி வழிபாடு செய்வது சிறப்பு.  எத்தகைய சாபம், தோஷம் இருந்தாலும் இவரை வழிபடத்தொடங்கியதும் நீங்கிவிடுகிறது.  சந்தான பாக்கியம் தரும் சிறப்புக் கோயிலாகவும் இது விளங்குகிறது.  கிரகங்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்த வல்லவர்கள் சித்தர்கள் மட்டுமே!  எனவே, நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்களையும் போக்க சிவலோக பண்டாரநாதரை வணங்கி பலன் பெறலாம்.  சிறப்பாக வாழ வைப்பார் இந்த சித்தர்.

புராண காலத்தில் ‘சதுர்வேதிமங்கலம்’ என்றும், மன்னர் காலத்தில் ‘ஷத்திரிய சிகாமணி நல்லூர்’ என்றும் அறியப்பெற்ற இத்தலம், தற்போதைய கீழப்பாவூர் ஆகும். கீழப்பாவூர் வடக்குப் பேருந்து நிலையத்தில் இறங்கி, அரசு நூலகத்தின் பின்புறம் சென்றால் குருக்கள் மடத்தை அடையலாம்.

தகவலுக்கு : 97106 52626

-    – கீழப்பாவூர்  கி. ஸ்ரீமுருகன்