பிரிந்த தம்பதி சேர...

பதிவு செய்த நாள் : 09 ஜூலை 2019

இதிகாச ரத்தினமான ‘ராமாயண’த்தில் சுந்தர காண்டம் புனிதமிக்கது.

சுந்தரம் என்பதற்கு 'அழகு' என்பது பொருள். சீதையைப் பிரிந்த ராமனுக்கு அனுமன் மூலம், 'கண்டேன் சீதையை' என்ற நல்ல செய்தி கிடைத்தது இந்த காண்டத்தில்தான். அசோகவனத்தில் இருந்த சீதைக்கு நம்பிக்கை ஒளியாக அனுமன் தோன்றி, ராமன் வரவிருப்பதை சொன்னதும் இப்பகுதியே.

கிரக தோஷத்தால் பலவித சோதனைக்கு ஆளானவர்கள், திருமணமாகாத கன்னியர் பரிகாரமாக இதை படிக்க வேண்டும். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர இதை படிக்கலாம்.

‘காயத்ரி மந்திரம்’ ஜெபித்த பலனை சுந்தர காண்டத்தின் மூலம் பெற முடியும்.

சுந்தர காண்டத்தில் 68 சர்க்கங்கள் அல்லது பகுதிகள் உள்ளன. வளர்பிறை காலத்தில் நல்ல நாளில் தொடங்கி, தொடர்ந்து ஒரு நாளைக்கு ஒரு சர்க்கம் வீதம் 68 நாட்கள் படிக்க வேண்டும். 68வது நாட்களில் நிறைவாக, ராம பட்டாபிஷேக சர்க்கத்தை சேர்த்து படிக்க வேண்டும். வழிபாட்டின் போது ராமருக்கு பால் அல்லது வாழைப்பழம் படைப்பது நல்லது. உலகமே கைவிட்டாலும், உத்தமன் ராமன் உங்களை கைவிடமாட்டான்.

சொல்லின் செல்வனான அனுமன் சுந்தர காண்டம் படிக்கும் இடத்தில் எழுந்தருள்வார். சுந்தர காண்டம் படிப்பவர்கள் 'ஸ்ரீராமஜெயம்' மந்திரத்தை 108 முறை எழுதுவதோ, சொல்வதோ நல்லது.