ஆன்மிக கேள்வி – பதில் – மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்

பதிவு செய்த நாள் : 09 ஜூலை 2019

* பாடல் பெற்ற தலத்திற்கும் மற்ற தலத்திற்கும் ஏதேனும் வித்தியாசம் உண்டா? ப. இளங்கோவன், நெல்லை.

இதனால் ‘ஏற்றத்தாழ்வு’ எனும் வித்தியாசம் எதுவும் கிடையாது. இறைவனின் திருவருளை நேரடியாகப் பெற்ற அருளாளர்களால் பதிகம் பாடப்பெற்ற புனிதமும் பெற்றவை, பாடல் பெற்ற தலங்களாகப் போற்றப்படுகின்றன.


* ஒவ்வாமையால் அவதிப்படுவதால் சாம்பிராணிப்புகை ஒத்துக் கொள்ளவில்லை. விளக்கு மட்டும் ஏற்றினால் போதுமா? ஏ. நடனசுந்தரம், சிவசைலம்.

தீபம் மட்டும் ஏற்றினால் போதும். ஒவ்வாமை எனும்போது தவறேதும் இல்லை.


* பாதபூஜை யாருக்கு செய்யலாம்? அதன் நோக்கம் என்ன? ஆர். சுகன்யா பாலசுந்தரம், சுசீந்திரம்.

புண்ணிய சீலர்களின் ஆன்மாவை சுமந்து நின்று இவ்வுலகுக்குப் பயன் கிடைக்குமாறு செய்வது திருவடிகளே! எனவேதான் பாதபூஜையானது முக்கியத்துவம் பெற்றுள்ளது. மாதா, பிதா, குரு, தெய்வம் இவர்களுக்குப் பாதபூஜை செய்வது புண்ணியம்.

 * சிலர் சுவாமிக்கு படைத்த வாழைப்பழத்தில் பத்தியை குத்தி வைக் கிறார்களே.. சரியா? எம். வள்ளிகாந்தன், ஆறுமுகநேரி.

சுவாமிக்குப் படைத்து  விட்டால் அது பிரசாதம் எனும் அந்தஸ்தைப் பெற்று விடும். அதில் பத்தி செறுகுவது தவறு. வேண்டுமானால் படைப்பதற்கு முன்பே இது போல் செய்யலாம்.