மனதின் வாசனை!

பதிவு செய்த நாள் : 09 ஜூலை 2019

எத்தனையோ மரங்கள் காட்டிலே முளைத்து விறகாக மாறிவிடுகின்றன.

அவற்றிற்குச் சரித்திரம் எது?

குணங்கெட்ட மனிதன் பயனற்ற மிருகம்.

மனதை மலர்களால் நிரப்பிக் கொண்டவன் மட்டுமே, சமூகத்தின் தெய்வம் என்ற அந்தஸ்தை நிரந்தரமாக பெற்று விடுகிறான்.

நான் மலர்கள் நிரம்பிய மனிதனாக வாழ விரும்புகிறேன்.

எவ்வளவு துன்பங்கள், எவ்வளவு கஷ்டங்கள் வந்த போதிலும், இதயத்தில் தீய சிந்தனைகள் எழாமல் இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.

என் இறைவனே, என் நிலையையும், நினைப்பையும் சமப்படுத்திக் கொண்டே இரு.

நினைப்புக்கு மேல் நிலையை உயர்த்துவதானால் அது உன் இஷ்டம்.

ஆனால், நிலைமைக்கு மேல் நினைப்பை உயர்த்தி விடாதே.

மழை, புயல், இடி, மின்னல்களை தாங்கக்கூடிய உடலை எனக்குத் தா!

குளிர்ந்த நீரோட்டம் போன்ற – தெளிந்த மலர்களையுடைய மனதை எனக்குத் தா!

உலகம் என்னை அறிந்து கொள்ளும் அளவுக்கு கீழாகவே என்னை நான் அறிந்துகொள்ள அருள்புரி!

செயல் செய்யும் திறமையை என் வாழ்நாளிலும், பெயர் பெறும் பெருமையை என் சாவுக்கு பிறகும், நிலைத்திருக்கும் நல்ல பெயரை நிரந்தரமாகவும் எனக்கு வழங்கு!

என் கரங்களில் விளையாடும் காசு பணங்கள் என்னைக் கல்நெஞ்சனாக ஆக்கிவிடாமல் என்னைக் காப்பாற்று!

பணத்தை இழப்பதா குணத்தை இழப்பதா என்னும் பிரச்னை வருமானால், பணத்தையே இழந்துவிடவும், இழந்தபின் அதைப் பற்றி சிந்திக்காமலிருக்கவும், எனக்கோர் இதயம் வழங்கு!

இவ்வளவையும் நான் கேட்பது எதற்காக?

ஊரில் உயர்ந்த உத்தமனாகவா?

இல்லை;

குறைந்தபட்சம் எனக்காகவது நான் நல்லவனாக இருக்கலாம் அல்லவா?

நான் உலகத்தை பற்றி கவலைப்படவில்லை.

என் எதிரே இருக்கும் கண்ணாடியை பற்றியே கவலைப்படுகிறேன்.

கவிஞர் கண்ணதாசனின்  ‘அலைகள்’   நூலிலிருந்து...