‘ராமாயண’ நாடகம் நடக்கிறது!

பதிவு செய்த நாள் : 09 ஜூலை 2019

காஞ்சிப்பெரியவரை தரிசிக்க வந்த பக்தர் ஒருவரின் முகத்தில் வருத்தம். பத்திரிகையில் அவர் படித்த செய்தியே அதற்கு காரணம்.

''என்ன விஷயம்?'' என்று கேட்டார் சுவாமிகள்.

''ராவணன் சீதையை கடத்திய போது, அதே காட்டில் சற்று துாரத்தில்தான் ராமன் இருந்தான். ஆனாலும், சீதையிட்ட கூச்சல் கூட அவனுக்கு கேட்கவில்லையே.... அப்படிப்பட்டவனுக்கு பக்தர்கள் கூப்பிட்டால் எப்படி கேட்கும் என்று ஒரு பத்திரிகையில் எழுதியிருந்தனர். ராமரை பற்றி இப்படி குறைவாக எழுதினார்களே என்று மனம் வேதனைப்படுகிறது. இதற்கு என்ன பதில் சொல்வது என்றும் புரியவில்லை'' என்று கண் கலங்கினார்.

சுவாமிகள் கலகலவெனச் சிரித்தபடி, ‘ராமாயண’ நாடகம் நடக்கிறது. அதில் வால்மீகி மகரிஷி சிறுவர்களான லவ, குசர்களை ராமரிடம் அழைத்து வருவது போல் ஒரு காட்சி. ராமராக வேஷமிட்டவர் ராஜபார்ட் ராமசாமி அய்யங்கார். அது மட்டுமல்ல. அவரது சொந்தப் பிள்ளைகளே லவகுசர்களாக நடித்தனர்.

நாடகராமர் வால்மீகியிடம், ''இந்தக் குழந்தைகள் யார்?'' எனக் கேட்கிறார்.

அப்போது, ''என்ன இது... ராமசாமி அய்யங்காருக்கு சொந்தப் பிள்ளைகளையே அடையாளம் தெரியவில்லையே என்று நாடகம் பார்க்கிறவர்கள் கேலி செய்யலாமா? அல்லது நாடக வால்மீகி, '' நீங்கள்தானே ராமசாமி அய்யங்கார்; உங்களின் சொந்தப் பிள்ளைகள்தானே இவர்கள்'' என்று பதில் சொன்னால் அது எத்தனை ரசாபாசமாக இருக்கும்?

உண்மையில் இருப்பதை, நமக்கு தெரிந்ததை நாடகத்தில் அப்படியே சொல்ல முடியாது. ஏனென்றால் அது நடிப்பு.

நாடகம் பார்ப்ப வர்களும்,'என்னடா இது... அய்யங்காருக்குத் தன் குழந்தைகளையே அடையாளம் தெரியவில்லை என்று நினைக்க மாட்டார்கள். அது போல மகாவிஷ்ணுவும் பூலோகத்தில் ராமனாக தனது சக்தி, ஞானத்தை மறைத்துக் கொண்டு மனிதனாக வாழ்ந்தார்.

மனித ராமனுக்கு சீதையின் கூச்சல் கேட்காது. ஆனால், கடவுள் ராமருக்கு பக்தர்களின் குரல் கட்டாயம் கேட்கும்! ''விளக்கத்தால் தெளிவு பெற்ற பக்தர் மகிழ்ச்சியுடன் விடைபெற்றார்.