மூத்த பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘சிவநேசச் செல்வர்கள்! – 161

பதிவு செய்த நாள் : 09 ஜூலை 2019

அமைச்சர்கள் அரசரை வணங்கி, ‘‘திறைப் பொருட்களை முறைப்படி கொண்டு வந்து செலுத்தாத அரசன் ஒருவன் இருக்கிறான்’’ என்று உரைத்தனர். உடனே புகழ் சோழர் வியப்புடன் புன்னகை புரிந்து ‘‘அவன் யார்?’’ என்று வினவினார்.

‘‘அவன் அதிகன் என்பவன்; சமீபத்திலுள்ள மலை அரணத்தின் உள்ளே வாழ்பவன்’’ என்று அமைச்சர்கள் சொன்னார்கள்.

 உடனே புகழ் சோழர் அவர்களை நோக்கி, ‘‘இவ்வுலகில் உங்களுக்கு  எதிராக நிலைத்து நிற்கும் அரணும் உண்டோ? நீங்கள் படையெடுத்துச் சென்று அவ்வரணத்தைத் துகளாகச் செய்து, அவனது காவலையும் அழித்து வாருங்கள்’’ என்று கட்டளையிட்டார்.

 அமைச்சர்கள் அரசனின் ஆணைப்படி புறத்தே வந்து கடல் போன்ற நாற்பெரும் படைகளை அணிவகுத்து, வஞ்சி மாலைசூடிப் போருக்குப் புறப்பட்டுச் சென்று, அதிகனுடைய காடும், மலை அரணும் பொடிபடும்படிக் கொடிய அரண்களையுடைய குறுநில மன்னனாகிய அதிகனின் வலிமையான சேனைகளும், காஞ்சிமாலை சூடிக் கடும் கோபத்தோடு எதிர்த்தன. பெருங்கடல்கள்  இரண்டும் தம்முள் எதிர்த்து எழுந்தாற்போல,  

இரு திறத்தோரின் படைகளும் ஒன்றையொன்று எதிர்த்தன. யானைகளோடு யானைகள் எதிர் குத்தின. குதிரைகளுடன் குதிரைகள் மோதிச் சண்டையிட்டன. வீரர்களுடன் வீரர்கள் எதிர்த்துப் போர் புரிந்தனர். மலையோடு மலைகள் மோதினாற்போல வில் வீரர்கள் செலுத்திய யானைகள், தாமும் மோதி மோதிக் கொலையுண்டன. சூறாவளியைப் போல் எதிர்த்துப் பாய்கின்ற குதிரை வீரர்கள், ஒருவரையொருவர் கொன்று உயிர் நீத்தார்கள். போர் வீரர்கள் செஞ்சோற்றுக் கடனைக் கழிக்கத் தம்முள் தாம் எதிர்த்துப் பொறாது உயிர் நீத்தனர்.

 போரில் இறந்த வீரர்களுடைய உடல்களினின்றும் பெருகிய ரத்தம் ஆறு போல் ஓடியது. இறந்த வீரர்களின் பிணக்குவியல்கள் மலைபோல் குவிந்தன. காக்கைகளும், கழுகுகளும்,  மற்றைய பருந்துகளும் பொய்த்துக் கூடி, உணவாகிய மாமிசத் துண்டங்களை எடுத்துக்கொண்டு, மேலே எழுந்து பறந்தன. போர்க்களத்திலே வில், கதை, சக்கரம், சம்மட்டி, வாள், சிறுசூலம், வேல், ஈட்டி, முத்தலைச் சூலம், கப்பணம் முதலான போர்க்கருவிகள் ஒன்றோடொன்று தாக்கி, முறிந்து மொய்த்துக் கிடந்தன. அதிகனுடைய சேனைகள் அழிதலும், புகழ் சோழருடைய சேனை வீரர்கள் மலைக்காவல் சூழ்ந்த அரணத்தோடு கணவாய்களையும் இடித்து நிரவினர். அம்மலை நாட்டிலுள்ள அவ்வூரை வளைத்துக் கொண்டனர். உடனே அவ்வூரின் காவலையும்  அழிவு செய்தனர். வலிய சேனைகளை இழந்த அதிகன்,  சிதறுண்ட மதில்களைக் கொண்ட தன் ஊரைவிட்டு ஓடிப் பெருங்காட்டினுள்ளே போய் ஒளிந்து கொண்டான். புகழ் சோழருடைய படைவீரர்கள் அதிகனது சேனையில் வெட்டுப்பட்ட வீரர்களின் தலைகளையும், பெண்களையும், யானைகளையும், குதிரைகளையும்  கைப்பற்றிக் கொண்டனர். அதன் பிறகு அமைச்சர்கள், போர்த்தொழிலை விட்டு, வெற்றி பெற்ற தமது சேனைகளுடன் கருவூர்ப்பதிக்கு வந்து சேர்ந்தார்கள்.

 கருவூர்த் திருநகரத்தின் வாயிலின் முன்னே கொண்டு வரப்பட்ட பகைவரின் தலைக்குவியல்களை பணியாளர்கள், புகழ் சோழரது முன்னே கொண்டு வந்தார்கள். மண்ணுலகத்திற்கு உயிரே போன்றவராகிய புகழ் சோழர், தம் முன் கொணர்ந்த தலைக்குவியலுள் ஒரு தலையின் உச்சியில் ஒரு சிறு சடை இருப்பதைக் கண்டார். சிவனடியாரின்  சின்னமான அந்தச் சடையை கண்டவுடனே புகழ் சோழர் உடல் நடுங்கி, உளங்கலங்கி கைகூப்பித் தொழுது, எதிரே சென்று அத்தலையிற் சடையினை நன்கு தெரியப் பார்த்துக் கண்ணீர் பெருக்கி நின்று  ‘‘முரசு முழங்கச் சென்ற என் அமைச்சர்கள் போரில் பகைவனை வென்று புகழ் பூண்ட வெற்றியைப் பெற்றதோடு பழியையும் என் முன் கொண்டு வந்திருக்கிறார்களே! இந்த உலகத்தில் திருநீற்று நெறியினை நான் பாதுகாத்து அரசு செய்யும் தன்மையின் அழகு நன்று நன்று! மிகவும் நன்று! பகையரசர் பக்கம் போருக்குரிய மாலை சூடித் தமது அரசனுக்குரிய  செஞ்சோற்றுக் கடனைச் செய்து முடித்த இந்தச் சடைமுடி வீரர் சிவபெருமானுடைய திருநெறியினிலே நின்றவராவர். இவரையோ என் சேனை கொன்றது? அறுப்புண்ட இவருடைய சடைத் தலையைச் சுமந்து வரப் பார்த்ததும் நான் அரசாட்சியை சுமக்கவோ இருக்கிறேன்? இல்லை; பழியைச் சுமக்கவே இருக்கிறேன்!’’ என்று கூறி, இதற்குத் தீர்வாகப் பொருந்தும் ஒரு செயலைச் செய்ய துணிந்தார். அப்போது அரசர், தன் ஆணை வழியிலும், நூல் நெறியிலும் இன்று நின்ற அமைச்சர்களை நோக்கி, ‘‘இந்நிலவுலனாகக் காத்து அரசு புரிந்து சிவபெருமானுக்கு வழித்தொண்டு செய்யும் பொருட்டு நீங்கள் என் மகனுக்கு முடிசூட்டுங்கள்!’’ என்று கட்டளையிட்டார். அதைக் கேட்டு மனமழிந்து நிற்கும் அமைச்சர்களைத் தேற்றித் தமக்கு நேர்ந்த சிரபாரதமாகிய பழிக்குத் தீர்வு தாமே வகுப்பாராகிச் சிவநெறியிலே நிலைபெற்றுச் செந்தீயை முன்னர் மூட்டி திருநிறு புனைந்த திருக்கோலம் – இது பிராயச்சித்தத்தின் பொருட்டும் உடற்றூய்மையும், உயிர்த்தூய்மையும் உண்டாகத் திருநீறு அணிந்த வடிவமாகும். அப்படித் தாங்கி விளங்கினார். தாம் கண்ட சடைத் தலையை ஒரு பொற்தட்டிலே ஏந்தித் தமது முடியின்மேல் தாங்கிய வண்ணம் கொழுந்து விட்டு எரியும் தீயை வலம் வந்து திருவைந்தெழுத்தை எடுத்து ஓதிக்கொண்டு மகிழ்ச்சியுடன் தீப்பிழம்பினுள்ளே புகுந்தார்.

 தீயினுட் புகுந்த சோழர், மங்கல வாத்திய ஓசைகள் ஆகாயத்தில் முழங்க, வானவர் மலர்மாரி பொழிய, சிவபெருமானது திருவடி நிழலை அடைந்தார்.

 மூவேந்தர்களில் முதன்மையானவரான புகழ் சோழரின் அரும்பெரும் திருத்தொண்டை போற்றுவோம்.