கலிஃபோர்னியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பதிவு செய்த நாள் : 07 ஜூலை 2019 14:33

கலிஃபோர்னியா,

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 அலகுகளாகப் பதிவான அந்த நிலநடுக்கம், அந்தப் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையானது என்பது குறிப்பிடத்தக்கது.

நிலநடுக்கம் குறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

தெற்கு கலிஃபோர்னியா பகுதியில் அமைந்துள்ள ரிட்ஜெக்ரெஸ்ட் நகருக்கு 10 கி.மீ. தொலைவிலுள்ள பாலைவன நிலப் பகுதியில் வியாழக்கிழமை அன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.4 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம், அந்தப் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் சக்தி வாய்ந்தது எனக் கூறப்பட்டது.

மீண்டும் நிலநடுக்கம்

தெற்கு கலிஃபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலீஸ் நகருக்கு 240 கி.மீ. தொலைவில் வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 அலகுகளாகப் பதிவானது. அந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் லாஸ் ஏஞ்சலீஸ் வரை உணரப்பட்டது.

குறைந்த அளவே மக்கள் வசிக்கும் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ, பலத்த காயங்களோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. எனினும், பல இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகவும், நிலநடுக்க பாதிப்புக்குள்ளான ட்ரோனா என்ற நகரில் மின்தடை ஏற்பட்டதாகவும் கலிஃபோர்னியா பேரிடர் மீட்பு அமைப்பின் இயக்குநர் மார்க் கிலார்டுசி தெரிவித்தார்.

நிலநடுக்கத்தால் பல்வேறு இடங்களில் எரிவாயு கசிந்து தீவிபத்து ஏற்பட்டது; குடிநீர் இணைப்பும், தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டன என்று அவர் கூறினார்.

11 மடங்கு சக்தி வாய்ந்தது

வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம், முந்தைய நாள் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கத்தைவிட 11 மடங்கு சக்தி வாய்ந்தது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. 2 நிலநடுக்கங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை என்று அந்த மையத்தின் அதிகாரிகள் கூறினர்.

அதிபரிடம் கோரிக்கை:

தங்களது மாகாணத்தில் இரண்டு நாள்களாக தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகளுக்கான நிவாரண உதவி வழங்குமாறு அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கலிஃபோர்னியா ஆளுநர் கவின் நியூஸம் தெரிவித்தார்.

நிலநடுக்கத்தால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட சான் பெர்னார்டினோ மாவட்டத்தில் பேரிடர் அவசர நிலையையும் அவர் அறிவித்தார்.

பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக 200 பாதுகாப்புப் படையினர் அடங்கிய குழுவினர், ஹெலிகாப்டர்கள் மற்றும் சரக்கு விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு படையின் டேவிட் பால்ட்வின் தெரிவித்தார்.