கலிபோர்னியாவில் நிலநடுக்கும்: ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவு

பதிவு செய்த நாள் : 06 ஜூலை 2019 09:43

லாஸ் ஏஞ்சல்ஸ்,             

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 7.1 ரிக்டர் அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. கடுமையான நிலநடுக்கம் பதிவாகியிருந்ததால் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று இரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. கலிபோர்னியாவின் தெற்கு பகுதியில் உள்ள ரிட்ஜ்கிரெஸ்ட் நகரின் அருகே மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவானது. இதன்  காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின.

ரிட்ஜ்கிரெஸ்ட் நகரில் நேற்று முன்தினம் ஏற்கனவே 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை பீதிக்கு உள்ளாக்கி இருந்த நிலையில், நேற்று மீண்டும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

நேற்று முன்தினம் நிலநடுக்கம் ஏற்பட்டபோதே, அதைவிட பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது