அரசியல்மேடை : சட்டசபையும் சாமானியன் பார்வையும்...!

பதிவு செய்த நாள் : 06 ஜூலை 2019

தமிழக அரசியல் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு இப்போதைய சட்டசபையில் நுாற்றுக்கும் மேற்பட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆட்சிக்கட்சியாக உள்ள அதிமுகவிற்கு 123 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருக்கிறது. எதிர் அணியில் திமுகவிற்கு 100, காங்., 7, முஸ்லீம் லீக் கட்சிக்கு 1 என 108 எம்.எல்.ஏ.,க்கள் எதிர் அணியில் இருக்கிறார்கள். இது தவிர, முதன்முறையாக பேரவையில் உள்ள 6 பிரிவு இருக்கைகளில் சபாநாயகருக்கு இடது புறம் எதிர்கட்சி உறுப்பினர்கள் மட்டுமே அமர்ந்துள்ள நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்சி கட்சியான அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதன் தோழமை கட்சிகளான கொங்கு இளைஞர் முன்னணியின் தலைவர் தனியரசு, மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமி முன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ், ஆகியோரும் எதிர்வரிசையில் அமர்ந்துள்ளனர். அமமுகவின் பொதுச்செயலாளரான தினகரனும், சுயேட்சை வேட்பாளராக சட்டசபையில் எதிர் வரிசையில்தான் அமர்ந்துள்ளார். இப்படி ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் சமமான பலத்தில் இருப்பதால் சட்டசபையில் மக்கள் நலன் சார்ந்த ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை அழிக்கும் வகையிலேயே சபை உறுப்பினர்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

1952 முதல் 67 வரையிலுமான காங்., கட்சி ஆட்சி நடைபெற்ற காலகட்டத்தில் ராஜாஜி, காமராஜர், பக்தவச்சலம் போன்றோர் முதல்வராக இருந்து ஆட்சியை நடத்தினார்கள். அப்போது எதிர் வரிசையில் திமுக, கம்யூ., உள்ளிட்ட கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் அமர்ந்திருந்தனர். அன்றைய காலகட்டங்களில் நடைபெற்ற விவாதங்களை சட்டசபை குறிப்பு ஏடுகளில் பார்த்தால் அவை அத்தனையும் மக்கள் நலன் சார்ந்தும், மாநிலத்தின் நன்மை கருதியும் நடைபெற்று உள்ளன. காரசாரமான விவாதங்கள் அப்போது நடைபெற்று இருந்தாலும் கூட ஒரு சிறிதும் கண்ணிய குறைவோ, தனி நபர் விமர்சனமோ, தேவையற்ற வார்த்தை பிரயோகங்களோ இடம் பெறவில்லை. அன்றைய தினம் சட்டசபையில் உறுப்பினர்களாக பணியாற்றிய அனைவரும் அரசமைப்பு சட்டத்தின்படியும், சட்டசபையின் விதி மரபுகளை கடைபிடித்தும் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நம்மால் அறிய முடிகிறது. ஆனால், சமீபகாலமாக சட்டசபை என்பது வெறும் சத்த சபையாகவே தெரிகிறது. தனி நபர்களை துதி பாடுவது, தனி நபர்களை விமர்சிப்பது, ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறுவது என்கிற நிலை தொடர்கிறது. இதனால் கூச்சல், குழப்பம், மறியல், அடிதடி, வெளிநடப்பு, வெளியேற்றம், உள்ளிருப்பு போராட்டம் போன்று பலவற்றையும் சட்டசபை சந்திக்க வேண்டிய மோசமான நிலை ஏற்படுகிறது. ஜனநாயக நாட்டில் மக்களின் ஆதரவோடு சட்டசபைக்கு செல்கிற எம்.எல்.ஏ.,க்கள் தம்மை தேர்ந்தெடுத்த தொகுதி மக்களின் பிரச்னை, தொகுதி மேம்பாடு அடைவதற்கு என்ன தேவை, என்பது குறித்து பேசாமல் அரசியல் ரீதியான விமர்சன கருத்துக்களையே அதிகம் பேசுவது ஏற்புடையதல்ல. இதை மக்களும் விரும்ப மாட்டார்கள். ஆளும் கட்சியோ அல்லது எதிர்கட்சியோ யாராக இருந்தாலும் சட்டசபையில் அங்கம் வகித்துள்ள அனைத்து எம்.எல்.ஏ.,க்களுமே தங்களின் கடமையை, பொறுப்புக்களை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதை தான் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்து அனுப்பிய சாமானிய சாதாரண மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த எதிர்பார்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்து போகிற போது, அரசியல் பிரமுகர்கள் அனைவரின் மீதுமே மக்களுக்கு கடுமையான வெறுப்புணர்வு ஏற்படும். தமிழகத்தில் ஆகப்பெரிய ஆளுமைகளாக இருந்த தலைவர்கள் பலர் மறைந்துவிட்டனர். அண்மை காலத்தில் அதிமுகவுக்கு தலைமை வகித்த மக்கள் செல்வாக்கு மிக்க மிகப்பெரும் ஆளுமையான ஜெ.,யும் மறைந்துவிட்டார்.

அதே போல, மிகச்சிறந்த ஆளுமையாக அரசியல் களத்தில் இருந்த திமுக தலைவர் கருணாநிதியும் மறைந்து விட்டார். பரஸ்பரம் இரண்டு கட்சிகளிடையே இருந்த வெறுப்புணர்வு நீங்கி ஜனநாயக ரீதியில் இரு கட்சியினரும் செயல்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கான அறிகுறியாக சட்டசபையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக திமுக, அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் சகஜமாக பழகி வந்ததை காண முடிந்தது. ஆனால், அவை நடவடிக்கை என்று துவங்கிவிட்டால் திமுகவினர், அதிமுகவினரை குற்றம் குறை சொல்லி பேசுவது, ஆட்சிக்கட்சியான அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் திமுகவினரை கடுமையாக விமர்சிக்கும் நிலையும், தொடர்கிறது. இதனால் அடிக்கடி கூச்சல் குழப்பமும் அமளியும் தான் நிலவுகிறது. எனவே மக்கள் பிரதிநிதிகளாக மாநில சட்டசபைக்கே தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் கடமைகளை உணர்ந்து தொகுதி பிரச்னை, மக்கள் பிரச்னை, மாநில நலன் சார்ந்த பிரச்னைகளை முன்னெடுத்து அது தொடர்பான ஆரோக்கியமான விவாதங்களை நடத்த வேண்டும் என்பதே தமிழக மக்களின் பெறும் விருப்பமாக உள்ளது. இனிமேலாவது எம்.எல்.ஏ.,க்கள் அத்தகைய சிறப்பான அணுகுமுறையை கடந்த 80கள் வரையில் இருந்த நாகரீகமான கன்னியமான போக்கை கடைபிடிக்க வேண்டும்.

கட்சிகளுக்கு தலைமை ஏற்று நடத்துபவர்கள் அந்த கட்சியின் எம்.எல்.ஏ.,க்களுக்கு இது தொடர்பான பயிற்சியையும் வழங்க வேண்டும். கடந்த கால சட்டசபை நடவடிக்கை குறிப்புகளை படித்து அதன்படி சட்டசபையில் செயல்பட வேண்டும்.