துரை கருணா எழுதும் ‘கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்..!’ – 36

பதிவு செய்த நாள் : 06 ஜூலை 2019

பீரங்கிக்கு இரையான சுதந்திர போராளி மாவீரன் அழகு முத்துகோன்!

18ஆம் நூற்றாண்டில் ஆங்கி லேயர்களின் ஆட்சிக்கு எதிராக கடுமை யாக போராடி பீரங்கி தாக்குதலுக்கு ஆளாகி மரணத்தை முத்தமிட்ட மாவீரன் அழகு முத்துகோன்.

கட்டாளங்குளத்து கட்டபொம்மன் தென்பகுதி மக்களால் போற்றப்படும் படும் அழகு முத்துகோன் பற்றிய பதிவுகளை இந்த வாரம் காண்போம்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள கட்டாளங்குளம் எனும் கிராமத்தில் 1710–ம் ஆண்டு பிறந்தவர் அழகு முத்துகோன்.

இந்தியாவில் பல்வேறு சமஸ்தானங்கள், ஜமீன்கள், பாளையங்கள் இருந்த காலகட்டத்தில் எட்டயபுரம் பாளையத்தில் படைத்தளபதியாக பணியாற்றி மாவீரன் தான் அழகு முத்துகோன். ஆங்கில ஆட்சிக்கு எதிரொகவும் அவர்களுக்கு துணையாக நின்ற மருதநாயகம் படைகளுக்கு எதிராகவும் பலமுறை போராடியவர் இவர்.

தாய் மண்ணின் உரிமைக்காகவும், சுதந்திரத்திற்காகவும் வாழ்நாள் முழுவதும் போராடிய மாவீரன் அழகு முத்துகோன் இளம் வயதிலேயே வாள் வீச்சு, சிலம்பம், மல்யுத்தம், காளைகளை அடக்குதல் போன்ற பல்வேறு வீர போட்டிகளில் அந்தக்காலத்திலேயே மதுரை மன்னர் திருமலை நாயக்கரிடம் ‘சேர்வைக்காரன்’ என்கிற பட்டத்தை பெற்றவர்.

கிருஷ்ண கோத்திரம் கோபால வம்சத்தின் யாதவ குலத்தில் பிறந்தவர் என்பதால்தான் இவரை அழகு முத்துகோன் என்று அழைத்து வந்தனர். அந்தக்காலகட்டத்தில் எட்டயபுரம் சமஸ்தானத்தின் மன்னாக இருந்த ஜகவீர ராமபாண்டி எட்டப்பன் என்கிற அரசனுக்கு அழகு முத்துகோன் தளபதியாக இருந்ததாக வரலாற்று நூல்கள் தெரிவிக்கின்றன.

1878ம் ஆண்டு சாமி தீட்சிதர் என்கிற வரலாற்று ஆய்வாளர் எழுதிய வம்சிமணி தீபிகை என்கிற நூலிலும். 1890ம் ஆண்டு டபிள்யூ இ. கணபதி பிள்ளை என்பவர் எழுதிய ‘எட்டயபுரம் வரலாறு தொடர்பான நூலிலும் அழகுமுத்துகோனின் சிறப்புகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

அழகு முத்துக்கோன் இல்லையென்றால் ஜகவீரராம பாண்டியனே இல்லை என்கிற அளவிற்கு அவருடைய முக்கியத்துவம் குறித்து இந்த இரண்டு நூல்களிலும் விரிவாக எழுதப்பட்டுள்ளது. இது தவிர, அழகு முத்துக்கோன் வம்சவளியினர் வைத்துள்ள செப்பு பட்டயத்தில் அவரது பூர்வீகம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்நிய படைவீரர்களுக்கு எதிராக அடிக்கடி போர் தொடுத்து அவர்களை தோற்கடித்த அழகு முத்துக்கோனை நேருக்கு நேர் சந்திக்க பயந்த ஆங்கில குங்கினி படையினர் அவருடைய கைகளிலும், கால்களிலும் விலங்குகளை பூட்டி, பீரங்கிக்கு முன்னாள் நிறுத்தி உள்ளனர். அதேபோல, அழகு முத்துக்கோனிடம் துணை தளபதிகளாக பணியாற்றி 6 வீரர்களையும் அவரோடு அணி சேர்ந்து போராடிய 248 மாவீரர்களையும் கைது செய்து அவர்களை சித்ரவதை செய்துள்ளனர்.

தாய்நாட்டின் மானத்திற்காக மரணத்தை முத்தமிடவும் நாங்கள் தயார் என்று அந்த ஆங்கிலேயே அதிகாரிகளின் முன் கர்ஜனை செய்ததை கண்டு அவர்கள் அதிர்ந்துபோய் உள்ளனர். அப்போது ஆத்திரம் கொண்ட ஆங்கிலேய படைத்தளபதிகள் 248 வீரர்களின் தோள்களை வெட்டி சாய்த்துள்ளனர்.

 பின்னர் வீரன் அழகு முத்துக்கோன் மற்றும் 6 தளபதிகளையும் வரிசையாக நிற்க வைத்து பீரங்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.

1759ம் ஆண்டு இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தென்னிந்தியாவின் ஆங்கில ஆட்சிக்கு எதிராக போர்த்தொடுத்து, இந்திய விடுதலைக்காக தன் இன்னுயிரை முதல் காணிக்கையாக்கியவர் மாவீரன் அழகு முத்துக்கோன்தான் என்று வரலாற்று பதிவுகள் சொல்கின்றன.

இந்த மாவீரனுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் சென்னை தலைநகரில் எழும்பூர் நிலையம் முன்பு 1996ம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வீரன் அழகு முத்துக்கோன் சிலையை திறந்து வைத்தார். ஆண்டுதோறும் அவருடைய பிறந்தநாளின் போது அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது.