மாத்திரைகளால் பாதிக்கப்படும் பெண் தொழிலாளர்கள்

பதிவு செய்த நாள் : 06 ஜூலை 2019

தென் இந்­தி­யா­வின் மான்­செஸ்­டர் என்று அழைக்­கப்­ப­டும் கோவை, திருப்­பூர் நக­ரங்­க­ளில் ஆயத்த ஆடை, பின்­ன­லாடை, ஜவுளி ஆலை­கள் அதிக அள­வில் உள்­ளன. இது போன்ற ஒரு ஆலை­யில் பணி­யாற்­று­ப­வர் சுதா. தையல் தொழி­லா­ளி­யாக உள்ள சுதா­விற்கு, மாத­வி­டாய் காலங்­க­ளில் ஏற்­ப­டும் வயிற்று வலி­யில் இருந்து தப்­பிக்க வேறு வழி­யில்­லா­மல் மாத்­திரை சாப்­பிட வேண்­டி­ய­துள்­ளது. தின­சரி 10 மணி நேரம் வேலை செய்­யும் சுதா, விடு­முறை எடுத்­தால் சம்­ப­ளம் கிடைக்­காது. எனவே வேறு வழி­யில்­லா­மல் மேற்­பார்­வை­யா­ள­ரி­டம் இருந்து மாத்­திரை வாங்கி சாப்­பிட்டு சமா­ளிக்க வேண்­டி­ய­துள்­ளது.

அந்த நாட்­கள் கடி­ன­மான நாட்­கள். வயிற்று வழி­யில் இருந்து தப்­பிக்க மாத்­திரை உத­வி­யாக இருக்­கின்­றது என்­கின்­ற­னர் இந்த பெண் தொழி­லா­ளர்­கள். ஒரு வரு­டம் இவ்­வாறு மருத்­து­வ­ரின் பரிந்­துரை இல்­லா­மல் மாத­வி­டாய் காலங்­க­ளில் ஏற்­ப­டும் வலிக்­காக மாத்­திரை சாப்­பிட்­ட­தன் பலன்  சுதா­விற்கு மாத­வி­டாய் குறித்த காலத்­தில் ஏற்­ப­டா­மல், இந்த சுழற்சி மாறி­போய்­விட்­டது. இது போல் பல இளம் பெண்­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

தமி­ழ­கத்­தில் ஆயத்த ஆடை நிறு­வ­னங்­க­ளில் வேலை செய்­யும் 100 பெண்­க­ளி­டம் ‘தாம்­ஸன் ராய்ட்­டர் பவுண்­டே­ஷன்’ நேர­டி­யாக ஆய்வு நடத்­தி­யது. இவர்­க­ளுக்கு மாத­வி­டாய் காலங்­க­ளில் தயா­ரிப்பு நிறு­வ­னத்­தின் பெயர் இல்­லாத மாத்­தி­ரை­கள் கொடுக்­கப்­ப­டு­கின்­றன. இத­னால் பாதி பேர் உடல்­ந­லம் பாதிக்­கப்­பட்­டுள்­ளது என்று தெரி­வித்­துள்­ள­னர்.  

இந்த மாத்­தி­ரை­கள் பெரும்­பா­லும் மருத்­து­வ­ரின் கண்­கா­ணிப்பு இல்­லா­மல் கொடுக்­கப்­ப­டு­கி­றது. இது சட்­ட­வி­ரோ­தம். இந்த ஆய்­வில் இருந்து தெரிய வந்த தக­வல்­க­ளுக்கு பிறகு, மாநில அரசு ஆயத்த ஆடை போன்ற தொழிற்­சா­லை­க­ளில் பெண் தொழி­லா­ளர்­க­ளின் உடல்­ந­லனை கண்­கா­ணிப்­ப­தாக கூறி­யுள்­ளது.

இந்த மாத்­தி­ரை­களை பல வரு­டங்­கள் சாப்­பிட்ட பிறகு, பல்­வேறு பிரச்­னை­கள் ஏற்­ப­டு­வதை உணர்­கின்­றோம். இந்த மாத்­தி­ரை­க­ளால் ஏற்­ப­டும் பக்க விளை­வு­க­ளைப் பற்றி எச்­ச­ரிக்­க­வில்லை என்று பல பெண்­கள் கூறு­கின்­ற­னர். இத­னால் மன உளைச்­சல், பதட்­டம், சிறு­நீர் பாதை தொற்று நோய், கர்ப்­ப­பை­யில் கட்­டி­கள், கருச்­சி­தைவு ஏற்­ப­டு­வ­தாக கூறு­கின்­ற­னர்.

இந்த பெண்­கள், தங்­க­ளுக்கு கொடுக்­கப்­ப­டும் மாத்­தி­ரை­களை, தாம்­ஸன் ராய்ட்­டர் பவுண்­டே­ஷனை சேர்ந்­த­வர்­க­ளி­டம் காண்­பித்­தார்­கள். அவற்­றில் தயா­ரிப்பு நிறு­வ­னத்­தின் பெயர், மருந்­து­க­ளின் கலவை, காலா­வா­தி­யா­கும் தேதி போன்ற விப­ரங்­கள் இல்லை.

இந்த மாத்­தி­ரை­களை பரி­சோ­தித்த இரண்டு மருத்­து­வர்­கள், இவை ஸ்டீராய்டு மாத்­தி­ரை­கள் அல்­ல­வென்­றும், வீக்­கத்­தைக் குறைக்­கின்ற (anti-inflammatory) , இபு­பு­ரூ­பென் (ibuprofen), அட்­வில் (Advil) மாத்­தி­ரை­கள். இந்த மாத்­தி­ரை­கள் மாத­வி­டாய் நாட்­க­ளில் அடி­வ­யிற்று வலியை குறைக்க உத­வும். அதே நேரத்­தில் இந்த மாத்­தி­ரை­களை அடிக்­கடி சாப்­பிட்­டால், பக்க விளை­வு­கள் ஏற்­ப­டும் என்று எச்­ச­ரித்­த­னர்.

சுதா­வுக்கு மருத்­துவ பரி­சோ­தனை செய்த போது, அவ­ரது கர்­பப்­பை­யி­லும், அதனை சுற்­றி­யும் கட்டி இருப்­பது தெரி­ய­வந்­தது. அவரை பரி­சோ­தித்த மருத்­து­வர், சுதா, வேலைக்கு செல்­லா­மல் ஓய்வு எடுத்­துக் கொள்ள வேண்­டும் என்று கூறி­னார். ஆனால் அவ­ரால் வேலைக்கு செல்­லா­மல் ஓய்வு எடுக்க முடி­யாது. ஏனெ­னில் அவ­ரது தாயார் வாங்­கிய கடனை அடைக்க வேண்­டும். குப்­பை­க­ளில் இருந்து பொருட்­களை பொறுக்கி விற்­பனை செய்­யும் சுதா­வின் தாயார், உள்­ளூ­ரில் வட்­டிக்கு பணம் கொடுப்­ப­வ­ரி­டம் ஒரு லட்­சத்து 50 ஆயி­ரம் ரூபாய் கடன் வாங்­கி­யுள்­ளார். அதனை திருப்பி செலுத்த சுதா வேலைக்கு சென்றே ஆக வேண்­டும்.

தாம்­ஸன் ராய்ட்­டர் பவுண்­டே­ஷன் ஆய்வு முடி­வு­களை தமி­ழக அரசு அதி­கா­ரி­க­ளி­டம் காண்­பித்த போது, இந்த வரு­டம் ஆயத்த ஆடை தொழிற்­சா­லை­க­ளில் வேலை செய்­ப­வர்­க­ளின் உடல் நலன் பற்றி கண்­கா­ணிக்­கும் திட்­டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டும். வேலை தொடர்­பான நோய்­க­ளால் எத்­தனை பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர் என்ற புள்ளி விப­ரம் சேக­ரிக்­கப்­ப­டும் என்று தெரி­வித்­த­னர்.

தமிழ்­நாடு வேலை தொடர்­பான மற்­றும் சுற்­றுச் சூழல் உடல்­ந­லன் பிரிவை சேர்ந்த மூத்த அதி­காரி மணி­வே­லன் ராஜ­மா­ணிக்­கம், “இந்­திய தொழிற்­சா­லை­கள் சட்­டப்­படி, தகுதி வாய்ந்த மருத்­து­வர் அல்­லது செவி­லி­யர் உள்ள மருந்­த­கம் இருக்க வேண்­டும். சில சிறிய தொழில் நிறு­வ­னங்­கள், இந்த சட்­டத்தை கடைப்­பி­டிப்­ப­தில்லை” என்று தெரி­வித்­தார்.

தொழிற்­சங்­கங்­கள், தொண்டு நிறு­வ­னங்­கள், ஹெச் அண்ட் எம், மதர்­கேர், கேப் போன்ற சர்­வ­தேச அள­வில் பிர­பல ஆயத்த ஆடை நிறு­வ­னங்­கள் பங்­கேற்­றுள்ள ‘தி எதி­கல் டிரேட் இனி­டி­யே­டிவ்’ (The Ethical Trade Initiative), “தொழி­லா­ளர்­க­ளுக்கு மாத்­தி­ரை­கள் கொடுப்­பது பற்றி கேள்­விப்­பட்­டுள்­ள­தா­க­வும், இது பற்றி விசா­ரித்­துள்­ள­தா­க­வும்” தெரி­வித்­துள்­ளது.

ஆயத்த ஆடை உற்­பத்­தி­யா­ளர் சங்­கங்­கள், தங்­கள் சங்­கத்­தில் உறுப்­பி­னர்­க­ளாக உள்ள ஆயத்த ஆடை நிறு­வ­னங்­கள், மாத­வி­டாய் காலத்­தில் ஏற்­ப­டும் வலிக்கு மாத்­தி­ரை­கள் கொடுப்­ப­தில்லை. இது போன்ற மருந்­து­கள் மருத்­து­வ­ரின் பரிந்­துரை இல்­லா­மல் கொடுப்­ப­தில்லை என்­றும் தெரி­வித்­துள்­ளன.

தற்­போது இரு­பது வய­தா­கும் சுதா, அடிக்­கடி மகப்­பேறு மருத்­து­வ­ரி­டம் செல்ல வேண்­டி­ய­துள்­ள­தால், தனது சேமிப்பு முழு­வ­தும் கரைந்­து­வி­டு­கி­றது. தின­சரி 400 ஆயத்த ஆடை­க­ளுக்கு காலர், பட்­டன், பாக்­கெட் தைக்க வேண்­டி­ய­துள்­ளது. நான் வேலை செய்­யும் போது வலி, எரிச்­சலை பொருத்­துக் கொள்ள கற்­றுக் கொண்­டுள்­ளேன். தற்­போது நான் மாத்­தி­ரை­களை சாப்­பி­டு­வ­தில்லை. ஆயத்த ஆடை தொழிற்­சா­லை­யில் சில வரு­டங்­க­ளாக வேலை செய்­வ­தால், எனது உடம்பு பல­வீ­ன­மாகி விட்­டது. கஷ்­ட­மாக உள்­ளது. இருப்­பி­னும் சமா­ளித்­துக் கொள்­கின்­றேன் என்று கூறு­கின்­றார்.

தமி­ழக அர­சின் புள்ளி விப­ரங்­க­ளின் படி, தமி­ழ­கம் முழு­வ­தும் 40 ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்ட ஆயத்த ஆடை உற்­பத்தி நிறு­வ­னங்­கள், பின்­ன­லாடை, நூற்­பாலை, ஜவுளி ஆலை­கள் உள்­ளன. இவற்­றில் மூன்று லட்­சத்­திற்­கும் அதி­க­மான பெண்­கள் வேலை செய்­கின்­ற­னர் என தெரி­கி­றது. ஆனால் கணக்­கில் வரா­மல் ஆயி­ரக்­க­ணக்­கான பெண்­கள் வேலை செய்­கின்­ற­னர்.

கிரா­மங்­க­ளில் இருந்து வரும் ஏழை குடும்­பங்­க­ளைச் சேர்ந்த இளம் பெண்­கள், படிப்­ப­றிவு இல்­லா­த­வர்­கள், ஒதுக்­கப்­பட்ட சமூ­கத்­தைச் சேர்ந்­த­வர்­களே, இந்த ஆலை­க­ளில் கடு­மை­யாக உழைக்­கின்­ற­னர். இவர்­கள் பிர­பல நிறு­வ­னங்­க­ளுக்­காக நீண்ட நேரம் ஆயத்த ஆடை­களை தயா­ரிக்­கின்­ற­னர்.

தொழிற்­சங்­கத்­தைச் சேர்ந்­த­வர்­கள், “பிர­பல நிறு­வ­னங்­கள் ஆயத்த ஆடை­களை, குறைந்த விலை­யில், விரை­வாக கொடுக்க நிர்ப்­பந்­திப்­ப­தால், தொழி­லா­ளர்­களை கழிப்­ப­றைக்கு கூட செல்­ல­வி­டா­மல் தடுப்­ப­தில் இருந்து, தகாத வார்த்­தை­க­ளால் திட்டி வேலை வாங்­கு­கின்­ற­னர்” என்­கின்­ற­னர். தாம்­ஸன் ராய்ட்­டர் பவுண்­டே­ஷ­னைச் சேர்ந்­த­வர்­க­ளி­டம் பேசிய பெண்­கள், மேற்­பார்­வை­யா­ளர் முன் மாத்­தி­ரை­களை முழுங்க வேண்­டும் என்று கூறு­வ­தா­க­வும், அவர்­கள் மாத்­திரை பெய­ரையோ அல்­லது அதன் பக்க விளை­வு­களை பற்­றியோ கூறு­வ­தில்லை என்­றும் தெரி­வித்­த­னர். இந்த பெண்­க­ளில் பெரும்­பா­லோர் 15 முதல் 25 வய­திற்கு உட்­பட்­ட­வர்­கள். மாத்­தி­ரை­யின் அளவு,நிறம், வடி­வத்தை வைத்து மாத்­தி­ரை­களை அடை­யா­ளம் கண்டு கொடுக்­கின்­ற­னர்.

தென் இந்­திய ஜவுளி ஆலை­கள் சங்க பொதுச் செய­லா­ளர் கே. செல்­வ­ராஜு, “நாங்­கள் சங்க உறுப்­பி­னர்­க­ளி­டம், மாத­வி­டாய் போன்ற காலங்­க­ளில் கவ­ன­மாக இருக்­கும்­படி கூறி­யுள்­ளோம். தொழி­லா­ளர்­க­ளின் நல­னில் கவ­ன­மாக இருக்க வேண்­டும். அடிக்­கடி ரத்த பரி­சோ­தனை நடத்த வேண்­டும். ஹீமோ­கு­ளோ­பின் அளவை கண்­கா­ணித்து, தேவைப்­பட்­டால் இரத்த சோகை இருந்­தால் சத்­துள்ள உண­வு­களை சாப்­பி­டு­மாறு கூற வேண்­டும். இரத்த சோகை உள்­ள­வர்­க­ளும், போதிய ஊட்­டச்­சத்து இல்­லா­த­வர்­க­ளும் வேலைக்கு சேர்­கின்­ற­னர்” என்று தெரி­வித்­தார்.

திருப்­பூர் ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் சங்க தலை­வர் ராஜா எம். சண்­மு­கம் கூறு­கை­யில், சாதா­ர­ண­மாக மருத்­து­வ­ரின் பரிந்­துரை இல்­லா­மல் தொழி­லா­ளர்­க­ளுக்கு மருந்­து­கள் கொடுப்­ப­தில்லை. தலை­வலி, காய்ச்­சல் போன்­ற­வை­க­ளுக்கு மாத்­தி­ரை­யும், சதை வலிக்கு களிம்­பு­க­ளும் மட்­டுமே இருக்­கும். எனக்கு மாத­வி­டாய் காலத்­தில் மருந்­து­கள் கொடுப்­பது பற்றி தெரி­யாது. நாங்­கள் நிச்­ச­ய­மாக இது போன்­ற­வை­க­ளுக்கு ஆத­ர­வாக இல்லை. நாங்­கள் எல்லா நிறு­வ­னங்­கள் சார்­பி­லும் உறு­தி­ய­ளிக்க முடி­யாது. சில நிறு­வ­னங்­கள் எங்­கள் சங்­கத்­தில் உறுப்­பி­னர்­க­ளாக இல்லை” என்று தெரி­வித்­தார். இந்த சங்­கத்­தில் ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்ட பின்­ன­லாடை நிறு­வ­னங்­கள் உறுப்­பி­னர்­க­ளாக உள்­ளன.

மத்­திய அரசு, மாநில அர­சு­க­ளைச் சேர்ந்த அதி­கா­ரி­கள், பெண் தொழி­லா­ளர்­க­ளுக்கு மாத­வி­டாய் காலங்­க­ளில் மாத்­திரை கொடுப்­பது பற்றி தெரி­யாது என்­கின்­ற­னர். “தொழி­லா­ளர்­க­ளுக்கு உடல்­நிலை சரி­யில்லை எனில் தொழிற்­சா­லை­கள் அரு­கில் உள்ள மருத்­து­வ­ம­னைக்கு அனுப்ப வேண்­டும். தகு­தி­யில்­லாத மேற்­பார்­வை­யா­ளர்­கள், கண்­கா­ணிப்­பா­ளர்­கள் மருந்­து­களை கொடுக்க கூடாது. மருந்­த­கங்­க­ளில் தகு­தி­வாய்ந்த செவி­லி­யர் இருக்க வேண்­டும். இதை அமல்­ப­டுத்­து­வது, குறிப்­பாக சிறிய தொழிற்­சா­லை­க­ளில் அமல்­ப­டுத்­து­வது சிர­மம். நாங்­கள் கூடிய விரை­யில் தொழி­லா­ளர்­கள் சந்­திக்­கும் பிரச்­னை­கள் பற்­றிய உண்மை நிலையை அறிய தொழிற்­சா­லை­க­ளில் ஆய்வு செய்ய உள்­ளோம் என்று மணி­வே­லன் ராஜ­மா­ணிக்­கம் தெரி­வித்­தார்.

இந்­தி­யா­வில் இருந்து ஆயத்த ஆடை­களை வாங்­கும் 66 பிர­பல நிறு­வ­னங்­கள் பங்­கேற்­றுள்ள தி எதி­கல் டிரேட் இனி­டி­யே­டிவ் தலைமை அதி­காரி, பீட்­டர் மெக்­அ­லிஸ்­டர் கூறு­கை­யில், “நாங்­கள் சமீ­பத்­தில்­தான் இதை பற்றி (மாத்­திரை கொடுப்­பதை) கேள்­விப்­பட்­டுள்­ளோம். இதை ஏற்­றுக் கொள்ள முடி­யாது” என்று கூறி­னார்.

ஆல் உமன் தமிழ்­நாடு டெக்ஸ்­டைல்ஸ் அண்ட் காமன் லேபர் யூனி­யன் பொதுச் செய­லா­ளர் திரு­மதி. ஜீவா பால­மு­ரு­கன், தொழிற்­சாலை உரி­மை­யா­ளர்­க­ளுக்கு அவர்­கள் கொடுக்­கும் மாத்­தி­ரை­யால் பெண்­க­ளுக்கு மாத­வி­டாய் பாதிக்­கும் என்­பது தெரி­யும். இருப்­பி­னும் தொழி­லா­ளர்­க­ளின் வேலை பாதிக்க கூடாது என்­ப­தற்­காக கொடுக்­கின்­ற­னர் என்று தெரி­வித்­தார். இவர் முன்பு நூற்­பா­லை­யில் வேலை செய்­யும் போது மாத­வி­டாய் காலங்­க­ளில் மாத்­தி­ரை­களை சாப்­பிட்­டுள்­ளார்.

தனது வேலைக்கு பாதிப்பு வந்­து­வி­டும் என்­ப­தால், தன்னை அடை­யா­ளப்­ப­டுத்­திக் கொள்ள விரும்­பாத நேர கண்­கா­ணிப்­பா­ள­ராக உள்ள பெண் கூறும் போது, “தனது வேலை நான்­கா­யி­ரம் பெண் தொழி­லா­ளர்­க­ளுக்கு, நேரடி கண்­கா­ணிப்­பில் (மாத­வி­டாய் காலங்­க­ளில்) வலி நிவா­ரணி மாத்­தி­ரை­களை கொடுப்­ப­து­தான். இந்த மாத்­திரை வயிற்று வலி வரும் போது சாப்­பி­டு­கின்­ற­னர். எனக்கு அதன் பெயரோ அல்­லது பக்க விளை­வு­கள் பற்­றியோ தெரி­யாது. நான் இந்த மாத்­தி­ரையை சாப்­பிட்­ட­தில்லை. வேலை செய்­யும் நெருங்­கிய நண்­பர்­க­ளை­யும் மாத்­திரை சாப்­பிட வேண்­டாம் என்று கூறு­வேன்” என்று தெரி­வித்­தார்.

திண்­டு­கல்­லில் மருத்­து­வ­மனை நடத்­தும் டாக்­டர். பி.நளினா குமாரி கூறும் போது, “நான் நூற்­பா­லை­கள், ஆயத்த ஆடை தொழிற்­சா­லை­க­ளில் வேலை பார்த்த பல பெண்­க­ளுக்கு சிகிச்சை அளித்­துள்­ளேன். அங்கு கொடுத்த மாத்­தி­ரை­யால், இந்த பெண்­க­ளின் ஹார்­மோன் சம­நிலை பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இத­னால் தலை சுற்­றல், குமட்­டல், வாந்தி ஏற்­ப­டுது நேர­டி­யான அறி­கு­றி­க­ளா­கும். மாத­வி­டாய் காலம் தவ­று­தல், மன உளைச்­சல் போன்­றவை மறை­முக அறி­கு­றி­க­ளா­கும். கர்ப்­பம் தரிக்க முடி­யாமை போன்­றவை மறை­முக பாதிப்­பு­கள் ஏற்­ப­டும்” என்று தெரி­வித்­தார்.

இந்­தி­யா­வில் மாத­வி­டாய் பற்றி உள்ள சமூக கருத்­தும், தயக்­கத்­தை­யும் தொழிற்­சா­லை­க­ளின் மேற்­பார்­வை­யா­ளர்­கள், மேலா­ளர்­கள் பயன்­ப­டுத்­திக் கொள்­கின்­ற­னர் என்று கூறும் ஜேம்ஸ் விக்­டர், “இந்த பெண்­க­ளுக்கு வீட்­டில் இருக்­கும் போது குறித்த நேரத்­தில் மாத­வி­டாய் ஏற்­பட்­டுள்­ளது. அவர்­கள் வேலைக்கு சேர்ந்த பிற­கு­தான் பிரச்னை உரு­வா­கி­யுள்­ளது. இந்த பெண்­க­ளுக்கு கூடு­த­லாக சானி­டரி நாப்­கின் கொடுப்­பது அல்­லது கழிப்­ப­றைக்கு அதிக தடவை செல்­வ­தற்கு அனு­ம­திப்­ப­தற்கு பதி­லாக மாத­வி­டாய் நிற்­ப­தற்கு மாத்­தி­ரை­கள் கொடுத்து, கொடு­மைப்­ப­டுத்­தி­யுள்­ள­னர். இதை பற்றி தெரிந்து இருந்­தும் கூட யாரும் பேசு­வ­தற்கு தயா­ராக இல்லை. இப்­போது நிலைமை கட்­டு­மீறி போய்­விட்­டது என்று அவர் தெரி­வித்­தார். இவர் தொழி­லா­ளர்­க­ளின் உரி­மை­க­ளுக்­காக போரா­டும் சிரீனி செக்­யூ­லர் சோஷி­யல் சர்­வீஸ் சொசைட்­டி­யின் (Serene Secular Social Service Society) தலை­வ­ராக உள்­ளார்.

இந்­திய தொழி­லா­ளர் நல சட்­டப்­படி 20 தொழி­லா­ளர்­க­ளுக்கு ஒரு கழிப்­பறை இருக்க வேண்­டும். சில ஆயத்த ஆடை ஏற்­று­மதி நிறு­வ­னங்­கள் தவிர, மற்­ற­வை­க­ளில் இல்லை என்று தொழிற்­சாலை கண்­கா­ணிப்­பா­ளர்­க­ளும் (பேக்­டரி இன்ஸ்­பெக்­டர்), ஆடிட்­டர்­க­ளும் கூறு­கின்­ற­னர். சர்­வ­தேச அள­வில் பிர­பல நிறு­வ­னத்­திற்­காக சோதனை செய்­யும் ஆடிட்­டர், சட்­டம், விதி­கள் இருக்­கின்­றன. ஆனால் அமல்­ப­டுத்­து­வது சவா­லா­னது என்­கின்­றார்.    

ஆயத்த ஆடை நிறு­வ­னங்­க­ளில் தொழி­லா­ளர் உரி­மை­க­ளுக்­காக பாடு­ப­டும் கம்­யூ­னிட்டி அவேர்­னஸ் ரிசர்ச் எஜி­கே­ஷன் டிரஸ்ட் 2016ல் செய்த ஆய்­வில், தொழி­லா­ளர்­கள் கழிப்­ப­றையை பயன்­ப­டுத்த தின­சரி ஐந்து நிமி­டங்­களே கிடைக்­கி­றது. அவர்­கள் கழிப்­ப­றைக்கு செல்ல நீண்ட வரி­சை­யில் காத்­தி­ருக்க வேண்­டி­ய­துள்­ளது என்­பது தெரிந்­தது. இதன் இயக்­கு­நர் பிரி­தி­வி­ராஜ் சின்­னத்­தம்பி, இங்கு உற்­பத்­திக்கு முக்­கி­யத்­து­வம் கொடுக்­கின்­ற­னர் என்­கி­றார்.    

பார­தி­தா­சன் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பெண்­களை பற்றி ஆய்வு செய்­யும் பிரிவு தலை­வர் மணி­மே­கலை நடே­சன், 2011ல் ஆயத்த ஆடை தொழிற்­சா­லை­க­ளில் வேலை செய்­யும் பெண்­க­ளின் நிலை பற்றி ஆய்வு செய்ய தொடங்­கி­யுள்­ளார். இவர் நிலைமை சிறிது முன்­னே­றி­யுள்­ளது என்­கின்­றார்.

அவர் கூறும் போது, “சுரண்­டல் முறை தொடர்­கி­றது. வெவ்­வேறு பெயர்­க­ளில், வடி­வங்­க­ளில் சுரண்­டல் முறை தொடர்­கி­றது. பல நேரங்­க­ளில் கழிப்­பறை வேண்­டு­மென்றே அசுத்­த­மாக வைக்­கின்­ற­னர். அப்­படி செய்­வ­தால் பெண்­கள் பயன்­ப­டுத்த தயங்­கு­வார்­கள். கழிப்­ப­றைக்கு செல்ல நேரம் எடுத்­துக் கொள்ள மாட்­டார்­கள். முடிந்த அளவு அதிக வேலை வாங்­கு­வ­தற்­கா­கவே இவ்­வாறு செய்­கின்­ற­னர்” என்று கூறு­கின்­றார்.

முன்பு குறிப்­பிட்ட சுதா­விற்கு தற்­போது 21 வய­தா­கி­றது. இவர் தொடர்ந்து வேலை செய்து கொண்­டுள்­ளார். ஏதா­வது மாற்­றம் ஏற்­ப­டும் என்ற எதிர்­பார்ப்­பதை கைவிட்­டு­விட்­டார். “நான் வேலைக்கு சேர்ந்த ஆரம்­பத்­தில் அதிக நேரம் வேலை செய்­வது, மாத­வி­டாய் வலி, அசுத்­த­மான கழிப்­பறை உட்­பட பல்­வேறு பிரச்­னை­கள் பற்றி பேச பயந்து கொண்­டி­ருந்­தேன். நான்கு வரு­டங்­கள் கடந்து விட்­டது. அதே சம்­ப­ளம், வேலை நேரத்­தி­லும் மாற்­றம் இல்லை. மருந்து பெட்­டி­யு­டன் நேர கண்­கா­ணிப்­பா­ளர் எப்­போ­தும் ஒவ்­வொரு அசை­வை­யும் கண்­கா­ணித்­துக் கொண்­டுள்­ளார். எந்த மாற்­ற­மும் இல்லை”. என்­கின்­றார்.

நன்றி: இந்த கட்­டுரை முத­லில் தாம்­ஸன் ராய்ட்­டர் பவுண்­டே­ச­னில் வெளி­யி­டப்­பட்­டது. ஸ்கோரல் டாட் இன் இணை­ய­த­ளத்­தில் அனு­ராதா நாக­ராஜ் எழு­திய கட்­டு­ரை­யின் சுருக்­கம்.