திருச்செந்தூர் கல்லாமொழி கடற்கரைக்கு வந்து சென்ற ஹிளுறு நபி (அலை)

பதிவு செய்த நாள்

04
மே 2016
02:10

இவ்வுலகுக்கு அல்லாஹ் 1 லட்சத்து 24 ஆயிரம் நபிமார்களை அனுப்பினான். அதில் ஹஜ்ரத் ஹிளுரு அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்கள் மிகவும் பிரசித்தி பெற்றவர்கள். அவர்கள் ஒரு நபிதான் என பெரும்பாலான பதிவுகள் கூறுகின்றன.  இவ்வுலகில் தோன்றி மறைந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற கணக்கிலடங்காத கோடிக்கணக்கான இறைநேசர்களுக்கு அல்லாஹ் ஹிளுரு நபி (அலை) மூலம் பல அருட்கொடைகளை வழங்கினான். மேலப்பாளையம் பஸீர் அப்பா வலியுல்லாஹ் அவர்களை ஹிளுரு நபியிடம் ‘பைஅத்’ பெறச் செய்த அல்லாஹ், அவரை மாபெரும் இறைநேசராக இவ்வுலகில் வாழச் செய்தான். புனித நபி மூஸா (அலை)வுக்கு, ஹிளுரு (அலை) மூலம் அல்லாஹ் ஞானத்தை போதித்தான். அது பற்றிய குர்ஆன் வசனங்கள்:

‘இவ்விருவரும் (மூஸா நபியும், அவர்களின் பணியாளரும்) அங்கு வந்த போது நம் அடியார்களில் ஒருவரைக் (ஹிளுருவை) கண்டார்கள். (அவர் மீது நாம் அருள் புரிந்து நமக்கு சொந்தமானதொரு ஞானத்தையும் நாம் அவருக்கு கற்பித்திருந்தோம்’ (குர்ஆன் – 18:65).

மூஸா (அலை) அவரிடம் ‘உமக்கு கற்பிக்கப்பட்ட நன்மையானவற்றை நீர் எனக்கு கற்று கொடுப்பதற்காக நான் உங்களை பின் தொடரட்டுமா?” என்று கேட்டார். (குர்ஆன் 18:66).

* ஹிளுறு (அலை) அவர்கள், ஆதம் (அலை) நபியின் புதல்வர்களில் ஒருவர் எனவும், தஜ்ஜால் வரும்போது அவனைப் பொய்ப்பிக்கும் வரை ஹிளுரு நபியின் வயது அதிகப்பட்டிருக்கிறது எனவும் ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியுள்ளார்கள். ஹஜ்ரத் ஹக்கீமுத் திர்மிதீ (ரழி) தம்முடைய நூலான நவாதிர் என்னும் நூலில், ‘ஹழ்ரத் ஹிளுறு (அலை) அவர்கள் உயிருடன் உள்ளார்கள் என்பது பற்றி தெளிவுபடுத்துகின்றார்கள்.

* நபிமார்களில் 4 பேர் உலகம் முடியும் நாள் வரை உயிருடன் இருப்பார்கள். அவர்களுள் ஹிளுறு (அலை), இல்யாஸ் (அலை) ஆகியோர் இப்பூமியில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஹிளுரு (அலை) கடலிலும், இல்யாஸ் (அலை) கரையிலும் இருக்கின்றனர். இவர்களின் உணவு காளானும், கீரையும் ஆகும். இத்ரீஸ், ஈஸா ஆகிய இரு நபிமார்கள் விண்ணகத்தில் இருக்கின்றார்கள் என்று தப்ஸீர் பகவியில் எழுதப்பட்டுள்ளது.

ஹிளுரு நபி அவர்கள் திருச்செந்தூர் கடல் பகுதிக்கு வந்து சென்றதாகவும், வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். அதனை உறுதிப்படுத்தும் வகையில் திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம் செல்லும் வழியில் உள்ள கல்லா மொழி கடற்கரைப் பகுதியில் ஹிளுரு நபி அவர்களின் புனித நினைவிடம் உள்ளது. மரங்கள் சூழ, கடற்கரையின் குளுகுளு காற்றில் ஹிளுரு நபியின் நினைவிடத்தை காணும் போது ஒரு வித மனரம்மியமும், ஆத்ம சுகமும் கிடைக்கிறது.

வெளியூர்களில் இருந்து திருச்செந்தூரை கடந்து செல்லும் முஸ்லிம்கள் இங்கு சென்று இளைப்பாறத் தவறுவதில்லை. அங்கு சில மணி நேரங்கள் தங்கியிருந்து தொழுகை, தியானம் நடத்தி விட்டு செல்கின்றனர். சிலர் தங்கள் நேர்ந்த நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக ஹிளுரு நபி தர்காவில் பிரியாணி, நெய்சோறு, கறி விருந்து சமைத்து ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குகின்றனர். நேர்ச்சைக்குரிய சேவல், கோழி, ஆடு ஆகியவை அங்கேயே கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 200 வருடங்களுக்கு முன்பாக ஹிளுரு நபி தர்கா இங்கு அமைக்கப்பட்டதாக அதன் 6–வது தலைமறை நிர்வாகி பதுருத்தீன் கூறுகிறார். ‘‘ஹிளுரு நபி அவர்கள் வாழ்ந்து சென்ற காலத்தில் இங்கு வந்து சென்றுள்ளார்கள். அவரது நினைவாக எனது முப்பாட்டனார் சதக் அப்பா அவர்களால் இங்கு ஹிளுரு நபி நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அவரையடுத்து சக்கரையப்பா, அவரது மகள் கவிஞர் பாத்திமா பீவி, அவரது மகன் உதுமான் அலி, அவரையடுத்து எனது தாயார் சுலைஹா அம்மாள் 5வது தலைமுறையாக நடத்தி வந்தார். பாத்திமா பீவி எழுதிய நூருல் ஐனிய்யா ஹிளுரு நபி முனாஜாத்து பாடல் பாடி  ஆண்டுதோறும் இஸ்லாமிய மாதம் ஜமாத்துல் அவ்வல் 18வது பிறை அன்று இங்கு ஹிளுரு நபி நினைவு (கந்தூரி உரூஸ்) விழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. அன்றைய தினம் ஹிளுரு நபி பெயரில் குர்ஆன் தமாம் செய்யப்பட்டு அனைவருக்கும் நேமிதம் வழங்கப்படுகிறது’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

என்ன நாட்டத்தை மனதில் வைத்து கல்லாமொழிக்கு செல்கிறோமோ அந்த நாட்டங்கள் அனைவரும் கிளுரு நபி அவர்களின் துஆ பரக்கத்தால் நிறைவேற்றப்படுகிறது என்கின்றனர் தூத்துக்குடி, நெல்லை வாழ் முஸ்லிம்கள். 

– செய்யிது ஆஷிக்குல்லாஷா ரிபாஈ