இது உங்கள் இடம்!

பதிவு செய்த நாள் : 07 ஜூலை 2019


பல்லை குடைவதற்கா பேனா?

நானும் என் நண்பரும் வங்கிக்கு சென்றோம். படிவத்தை நிரப்பி அடுத்த அழைப்பிற்காக காத்திருந்தபோது ஒருவர் எழுத பேனா கேட்டார். வங்கிக்கு செல்லும் பலரும் பேனா கொண்டு செல்வதே இல்லை. சரி என்று கொடுத்துவிட்டோம். அதன்பின் செய்த காட்சி அருவருக்கத்தக்கதாய் இருந்தது. ஆம்! சிறிது எழுதியவர் அடுத்து பேனா வின் ஊசியான முனையால் பல் குடைய ஆரம்பித்து விட்டார். மறுபடியும் எழுதினார். இடையிடையே நீர் யானை மாதிரி வாயை பிளந்து கொட்டாவி வேறு விட்டுக் கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த எங்களால் சகிக்க முடியவில்லை. இதனால் பேனாவே வேண்டாம் என்று கூறி அவரிடமே வைத்துக் கொள்ளும்படி கூறிவிட்டோம். ஆகவே அன்பர்களே! உதவுவதற்காக பேனா கொடுத்தால் இப்படியா பல் குடைவது? பேனா எழுதுவதற்குத்தானே தவிர, பல் குடைவதற்கு அல்ல!

– பா. இசக்கிமுத்து, வெள்ளானைக்கோட்டை.

இப்படிப்பட்ட ஆசிரியர் வேண்டும்!

என் கிளாஸ்மேட் நண்பர். ஆசிரியராக பணிபுரிகிறார். பகலெல்லாம் பள்ளிக்கூட ஆசிரியர். மாலை டியூஷன் ஸ்கூல் நடத்தி வருகிறார். நான் கேட்டேன், ''அதுதான் முழுநேர ஆசிரியராக பணிபுரிகிறாயே? பிறகு ஏன் இந்த டியூஷன் வேறு?'' என்று. அதற்கு அவர், ''டியூஷனில் வரும் பீஸ் எனக்கில்லை.  என்னிடம் படிக்க உதவி கேட்டு வரும் ஆரம்பப்

பள்ளி பிள்ளைகளுக்கு. அவர்களுக்கு பேனா, நோட்டுப் புத்தகம் போன்றவை வாங்க உதவியாக இருக்கும் இல்லையா....? அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்'' என்றார். இப்படியே தெருவுக்கு ஓர் ஆசிரியர் படிக்க உதவி கேட்பவருக்கு உதவினால் கல்வி கற்றதற்கான நல்ல பலன் கிடைக்கும். இவர் போன்ற தொண்டு மனப்பான்மை மிகுந்தவருக்கு 'நல்லாசிரியர்' விருதும் கிடைக்கும். இவரது குடும்பத்திற்கு இறைவன் நல்வாழ்வு நல்குவானாக...!

– எஸ்.என்.எம். பிள்ளை, பொட்டல் புதூர்.

சிறப்பான யோசனை!

பஸ் ஸ்டாப்பில், ஒரு பெரியவர், தன் குடும்பத்தினர் ஒவ்வொருவரிடமும், பதினைந்து ரூபாய் தந்து கொண்டிருந்தார். எதற்கு என விசாரித்தபோது, அவருடைய யோசனையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. காலை நேரம், முகூர்த்த நாள், டவுன் பஸ்சில் கூட்டம் அதிகமிருக்கும். அதனால் குடும்பத்தினர் ஆங்காங்கே பஸ்சில் இடம் பிடித்துக் கொள்வர். அந்த சமயம், இவர்களை தேடி, சுட்டிக்காட்டி, டிக்கெட் வாங்குவது கஷ்டம். கூட்டத்தில், நடத்துனருக்கும் எரிச்சலைக் கூட்டும். அதனால், குடும்பத் தினர், தனித்தனியே டிக்கெட் எடுத்துக் கொள்வர். நல்ல ஐடியாதானே.... சினிமா தியேட்டர், பொருட்காட்சி போன்ற இடங்களிலும் பின்பற்றலாம். கோயிலில் கூட, சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கும் போது, கை கொடுக்கும் உத்தி இது.

– என். கோமதி, பெருமாள்புரம்.

அட்வைஸ் மற்றவர்களுக்கு வேண்டாமே!

நம்மில் பல சகோதரிகள் மற்றவர்களுக்கு அட்வைஸ் பண்ணுவதையே பொழுதுபோக்காக வைத்துள்ளார்கள். இவர்கள் சிறு குழந்தைகளை கூட விட்டு வைப்பதில்லை. ‘அதை தொடாதே, இதை தொடாதே, அப்படி உட்கார், நான் சொல்வதை போல செய், அப்படி பேசாதே, சாரி கேளு’ என குழந்தையை வற்புறுத்துகின்றனர். குறும்பு செய்வதுதானே குழந்தை பருவம்! அளவான கண்டிப்பு போதாதா? அளவுக்கு மீறிய அட்வைஸ் குழந்தைகளை வெறி பிடித்த வர்கள் போல ஆக்கிவிடும்.  இன்னும் சிலரோ தங்களுக்குத்தான் எல்லாம் தெரிந்தது போல அடுத்தவர் வீட்டு விஷயங்களில் மூக்கை நுழைத்து ‘நீங்கள் இப்படி செலவு செய்யலாம், அப்படி சேமிக்கலாம், அந்த பூஜையை இத்தனை வாரங்கள் செய்யுங்கள், இப்படி உதவி செய்யுங்கள்’ என்கின்றனர். ஏன் சகோதரிகளே, அவர்களது வருமானமும், செலவும் அவர்களுக்குத்தான் தெரியும். உங்கள் இஷ்டத்திற்கு இந்த சாமானை அங்கு வை, இப்படி உடுத்து, இந்த கலர் வாங்கு என்றால் உங்களைப் பார்த்தால் வெறுப்புதான் வரும். உங்கள் தலையை பார்த்தாலே ‘ஐயோ, ½ பிளேடு வருகிறதே, என ஓடி ஒளிவார்கள். எனவே சகோதரிகளே! இனியாவது அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்காமல் இருப்போமாக!

– நா. பாரதலட்சுமி சுந்தர், தூத்துக்குடி.