கல்லை தின்று செரிக்கும் புழு

பதிவு செய்த நாள் : 07 ஜூலை 2019

பிலிப்பைன்ஸ் நாட்டின் தீவுப் பகுதிகளில், கல்லை தின்று செரித்து மணல் துகள்களாக வெளியேற்றும் அசுரப் புழு ஒன்றை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நீருக்கடியில் பாறைகளை மெல்லத் துளையிட்டு குடைந்து, உண்ணும் வழக்கம் கொண்டது, லிதோரிடோ அபாடானிகா என்ற புழு. மரக் கப்பல்கள், படகுகளின் அடிப்பகுதியை உண்டு செரிக்கும் கப்பற் புழு வகையைச் சேர்ந்த இந்தப் புழு, மரத்திற்கு பதில் கல்லையே உண்கிறது.

கல்லை உண்பது, அதிலுள்ள சத்துக்களை எடுக்கவா, இல்லை சில பறவைகள் உணவை அரைக்க சிறு கற்களை உட்கொள்வதுபோல, இந்தப் புழுவும் செய்கிறதா என்பது தெரியவில்லை. இந்தப் புழுவின் வயிற்றில் உள்ள நுண்ணுயிரிகள், கற்களை ஜீரணிக்க உதவுகின்றன என்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். இந்த நுண்ணுயிரிகள், ஆன்டிபயாடிக் மருந்துகளை தயாரிக்க உதவுமா என்ற கோணத்திலும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.