திண்ணை 7–7–19

பதிவு செய்த நாள் : 07 ஜூலை 2019

எழுத்தாளர், விக்கிரமன் எழுதிய, 'இதழாசிரியர்கள் மூவர்' நுாலிலிருந்து:

'ஆனந்த விகடன்' இதழில், கல்கி பணியாற்றியபோது, கல்கி என்ற பெயரில், எட்டு பக்கம் கதை; இயற்பெயர், ரா.கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில், ஆறு பக்கம் கட்டுரை; கர்நாடகம் என்ற புனை பெயரில், நாலைந்து பக்கம் ஆடல், பாடல், விமர்சனம்; பெயர் குறிப்பிடாமல், நான்கு முதல் எட்டு பக்கம் மற்றும் தலையங்கம் என, எழுதி குவித்தார்.

விகடனில், ஆசிரியராக இருந்தபோதே, விடுதலை போராட்டங்களில் பங்கேற்று, இரண்டு முறை சிறை சென்றவர், கல்கி. இச்சூழலில், போராட்டத்தில் பங்கு கொள்ள, மூன்றாவதாக வாய்ப்பு வந்தபோது, யாருடனும் ஆலோசிக்காமல், தன்னை போராட்டத்தில் அனுமதிக்க வேண்டி, காந்திஜிக்கு விண்ணப்பம் அனுப்பினார்.

யாருடனும் ஆலோசிக்கா மல் என, கூறியதற்கு காரணம் உண்டு.

ஒன்று: அவருக்கு, கடுமையான ஆஸ்துமா இருந்தது. டாக்டரிடம் ஆலோசனை கேட்டிருந்தால், சம்மதித்திருக்க மாட்டார்.

இரண்டு: ராஜாஜி. அவரும், கல்கியின் உடல்நலன் கருதி அனுமதித்திருக்க மாட்டார். ஆனால், அனுமதி வழங்கி, கடிதம் எழுதினார், காந்திஜி.

மனைவியிடம் சொல்லி, நேராக, 'ஆனந்த விகடன்' நிறுவனர், வாசன் அறைக்குள் நுழைந்தார், கல்கி. அங்கு, ஏற்கனவே, எழுத்தாளர், துமிலன் இருந்தார்.

போராட்டத்தில் பங்குகொள்ள, காந்திஜி அனுமதித்துள்ளதை, வாசனிடம் தெரிவித்தார், கல்கி.

அதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார், வாசன்.

'உங்கள் பெயரை கொடுத்திருப்பதை பற்றி, என்னிடம், முன்கூட்டியே ஒரு வார்த்தை சொல்லவில்லையே...' என்றார்.

'நான்தான், ஒவ்வொரு போராட்டத்திலும் கலந்து கொள்கிறவனாச்சே... அது, உங்களுக்கு தெரியுமே...' என்றார், கல்கி.

'இருந்தாலும், நீங்கள், என்னிடம், முதலிலேயே சொல்லியிருக்க வேண்டாமோ! போராட்டத்தில் கலந்து கொள்ள போய் விட்டால், பத்திரிகை வேலையை யார் பார்ப்பதாம்?' என்றார், வாசன்.

'துமிலன் பார்த்துக் கொள்கிறார்...' என்றார், கல்கி.

'அது, எனக்கு தெரியும். நீங்கள், போராட்டத்தில் ஈடுபடுவது, பத்திரிகையை பாதிக்கும். ஏற்கனவே ஒரு முறை, அச்சாபீசுக்கு ஜாமின் கட்ட நேர்ந்தது, உங்களுக்கு தெரியாதா?'

'பத்திரிகை ஆசிரியராக, என் பெயர் போடப்பட வில்லையே...' என்றார், கல்கி.  'இருந்தாலும், உங்கள் தொடர்பு இருக்கிறதென்று, அரசுக்கு தெரியாதா?'

'என்னை என்ன பண்ணச் சொல்கிறீர்கள்...' என்று, நேரடியாகவே கேட்டார், கல்கி.

'நீங்கள், போராட்டத் தில் சேர போவதில்லை என்று, காந்திஜிக்கு கடிதம் எழுதி விடுங்கள்...' என்றார், வாசன்.

'அது, நடக்காத காரியம்...'

'அப்படியானால், பத்திரிகை யுடன், தற்காலிகமாக, உங்கள் தொடர்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்...' என்றார்.

'ராஜினாமா செய்யச் சொல்கிறீர்களா?' என்றார், கல்கி.

'ஆம்...' என்றார், வாசன்.

'சரி... சிறை சென்று வந்த பின், பதவியை ஒப்புக்கொள்கிறேன்...' என்றார், கல்கி.

'அதைப் பற்றி அப்போது பார்த்துக் கொள்ளலாம்...' என்றார், வாசன்.

ஐந்தே ஐந்து நிமிடங்களில், தான் உழைத்து உயர்த்திய, 'ஆனந்த விகடன்' இதழின், முன்னாள் ஆசிரியராகி விட்டார், கல்கி.

திறமைக்கு மதிப்பு இல்லாமல் இருக்குமா? இவர் சாய்ந்ததை, டி.சதாசிவம் முட்டுக்கொடுத்து, தாங்கி, 'கல்கி' பத்திரிகையை துவக்க உதவியது, தனிக் கதை!                                    ***