சிறுகதை : காப்பகத்தில் ஒரு முத்து! – விஜயா கிருஷ்ணன்

பதிவு செய்த நாள் : 07 ஜூலை 2019

''என்ன வனிதா, இன்னுமா கிளம்பலே? மணி ஒன்பது ஆச்சு. பத்து மணிக்கெல்லாம் அங்க வர்றதா சொல்லியிருந்தேன். மதர் எதிர்பார்த்துக்கிட்டே இருப்பாங்க'' சொன்னபடியே குழந்தை பிரகாஷை அழைத்துக்கொண்டு வெளியே வந்தார் கலெக்டர் ராம் மோகன்.

''இதோ வந்துட்டேன்ங்க.'' தன் மேக்–அப்பை அவசர அவசரமாக முடித்த வனிதா வேகமாக வந்தாள். பிரகாஷை துாக்கிக் கொண்டு காரில் ஏற ராம் மோகனும் ஏறினார். கார் காருண்யா இல்லத்தை நோக்கி விரைந்தது.

கலெக்டர் ராம் மோகனை எதிர்பார்த்து மதரும், சிஸ்டர்களும், குழந்தைகளும் நின்றிருந்தனர். ராம் மோகனை சிறப்பான முறையில் வரவேற்று அழைத்துச் சென்றார் மதர்.

''சார், நீங்க ரெண்டு நாளைக்கு முன்னாடி அனுப்பி வச்ச துணிகளெல்லாம் கிடைச்சது. ரொம்ப சந்தோஷம். பிள்ளைகள் இன்னைக்கு தீபாவளின்னு அந்த புது துணிகளைத்தான் உடுத்தியிருக்காங்க. அவங்களுக்காக நீங்க ஏற்பாடு செய்திருந்த மதிய சாப்பாடும் தயாராகிறது.''

''மதர், உங்ககிட்டே ஒரு வேண்டுகோள். வேண்டுகோள்ங்கிறதை விட உங்ககிட்ட இருந்து ஒன்றை எதிர்பார்க்கிறோம் என்றே சொல்லலாம்'' – தயக்கத்தோடு ராம் மோகன் சொன்னார்.

''எங்ககிட்ட இருந்தா...! தயங்காம சொல்லுங்க, நிறைவேற்றி வைக்கிறோம்.''

''மதர், இவ என் ஒய்ப் வனிதா. இவன் என் பையன் பிரகாஷ். 3 வயசாகிறது.''

''இவங்களைத்தான் எனக்கு தெரியுமே. இதுக்கு முன்னே பார்த்திருக்கேன். இங்கே ஒரு தடவை அழைச்சுக்கிட்டு வந்திருக்கீங்களே...''

''மதர், எனக்கும் என் மனைவிக்கும் பெண் குழந்தைங்கன்னாலே ரொம்ப பிரியம். ஆனால், முதல்ல பொறந்தது ஆணா போயிற்று. அதுவும் சந்தோஷம்தான். அடுத்து ஒரு பெண் குழந்தை பிறக்கும் என்கிற ஆசை எங்களுக்கு இருந்தது. ஆனால் பிரகாஷ் பிறக்கும் போதே வனிதாவுக்கு உடல்நிலை மோசமா இருந்துச்சு. அவ பொழைச்சதே மறுபிழைப்புன்னு டாக்டர் சொல்லிட்டாங்க. அதனால நாங்க எங்க விருப்பப்படி ஒரு பெண் குழந்தையை தத்து எடுத்து வளர்க்கலாம்ங்கிற முடிவோட இருக்கிறோம். அதிலும் உங்களோட இந்த இல்லத்திலே இருந்து ஒரு குழந்தையை எடுக்க ஆசைப்படுறா வனிதா.''

''இதை சொல்லவா இவ்வளவு தயங்கினீங்க? இங்கே இருக்கிற ஒரு குழந்தை நல்லபடியா வளர்க்கிற ஒரு இடத்திற்கு போகுதுன்னா அந்த குழந்தை அதிர்ஷ்டசாலின்னுதான் நாங்க நினைப்போம். அதிலும் உங்க வீட்டுக்கு வந்து சேருதுன்னா அது புண்ணியம் செஞ்ச குழந்தையாகத்தான் இருக்கணும்.''

''அப்போ நாம குழந்தைகளை பார்ப்போமா.... பிறந்து கொஞ்ச நாளோ, மாதங்களோ ஆன குழந்தைதான் வேணும்னு வனிதா சொல்றா.''

''வாங்க, நீங்க சொல்ற மாதிரி பிறந்து இரண்டு, மூணு மாசமான பெண் குழந்தைங்க மூணு இருக்குது. உங்க விருப்பப்படியே நீங்க தேர்ந்தெடுங்க.''

குழந்தைகள் இருந்த பில்டிங்கிற்கு மதர் அழைத்துச் சென்றார். அங்கே சின்ன குழந்தைகளும், பெரிய குழந்தைகளுமாக பல குழந்தைகள் இருந்தனர். அவர்களை பராமரிப்பவர்களும் நின்றிருந்தனர். அவர்கள் கலெக்டரை பார்த்ததும், வணக்கம் சொன்னார்கள். அதில் ஒரு பெண்ணை பார்த்த வனிதா,

''நீங்க மாலினி இல்லே, என் தங்கை அனிதாவோட படிச்சவங்கதானே...?''

''ஆமா மேடம். அனிதா டிகிரி படிக்க சேர்ந்தா, நான் +2விற்கு பிறகு இந்த இல்லத்திலேயே வேலைக்கு சேர்ந்தேன். அனிதா எப்படி இருக்கா?''

''ம்... நல்லா இருக்கா.'' மேற்கொண்டு அவளைப் பற்றி ஏதாவது கேட்டு விடுவாளோ என்று நினைத்த வனிதா குழந்தைகளை பார்க்க ஆரம்பித்தாள்.

''மாலினி, அவங்க ரொம்ப சின்ன குழந்தை, அதிலும் பெண் குழந்தையை தத்து எடுக்க விரும்புறாங்க...''

''அப்படியா மதர், மேடம் இதோ இந்த குழந்தை பிறந்து 60 நாள்தான் ஆச்சு. ஒரு மாசத்துக்கு முன்னாடி ஒரு கடிதம் எழுதி வச்சுட்டு இந்த இல்லத்து வாசல்ல யாரோ கொண்டுவந்து போட்டுட்டு போயிட்டாங்க. அந்த கடிதத்திலே இந்த குழந்தை பிறந்த தேதியை மட்டுமே குறிப்பிட்டிருந்தாங்க. வேறு விவரங்கள் ஏதுமில்லை. நான்தான் காலையிலே குழந்தையை பார்த்து எடுத்துட்டு வந்து மதர்கிட்ட கொடுத்தேன்.''

வனிதா அந்த குழந்தையை பார்த்தாள். ரொம்ப அழகாக இருந்தது. அந்த குழந்தை அவளை பார்த்து சிரித்தது. ஆசையாக எடுத்து மார்போடு அணைத்தபோது அவள் உடம்பே புல்லரித்து போனது போன்றதொரு உணர்வு.

''என்னங்க, இந்த குழந்தையையே நாம எடுத்துக்கலாம்ங்க.''

''உனக்கு விருப்பம்னா அந்த குழந்தையையே நீ எடுத்துக்க. மதர், வனிதா இந்த குழந்தையை தத்து எடுக்க ஆசைப்படுறா.''

''எங்களுக்கும் ரொம்ப சந்தோஷம். முறைப்படி சில பார்மாலிட்டீஸ் இருக்கு. அதையெல்லாம் நானே செஞ்சு உங்ககிட்ட ஒப்படைக்கிறேன். மாலினி, இந்த குழந்தைக்கு நீ என்னென்ன சாப்பாடு கொடுக்குறே, மத்த விஷயத்தையெல்லாம் அவங்களுக்கு சொல்லிக் கொடு.''

''மதர், மணி 12 ஆச்சு. குழந்தைங்க பசியோட இருப்பாங்க. நாம அவங்களுக்கு சாப்பாட்டை கொடுக்கலாமா?''

''சரி சார். முதல்ல அங்கே போவோம்'' மதர் முன்னே நடக்க ராம் மோகனும், வனிதாவும், பிரகாஷும் பின்தொடர்ந்தனர்.

விருந்தை குழந்தைகளுக்கு பரிமாறின ராம் மோகன் ஆவலோடும், சந்தோஷத்தோடும் அவர்கள் சாப்பிடுவதை பார்த்தபடி நின்றிருந்தார். அவரும் அந்த குழந்தைகளோடு உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தார். அவர் மனதிற்குள் என்றைக்கும் இல்லாத சந்தோஷம்.

சாப்பாடு முடிந்ததும் ராம் மோகன் போன் பண்ண, சற்று நேரத்தில் அந்த இல்லத்தில் ஒரு வேன் வந்து நின்றது. அதிலிருந்து தீபாவளி இனிப்புகள் அட்டைப்பெட்டிகளில் வந்து இறங்க, அவற்றை தன் கைப்பட அந்த குழந்தைகளுக்கு எடுத்து கொடுத்தார் ராம் மோகன். புது துணி, வயிறார விருந்து சாப்பாடு, பின் தீபாவளி பலகாரங்கள், அந்த இல்லத்து குழந்தைகளின் சந்தோஷத்துக்கும், குதுாகலத்திற்கும் கேட்கவா வேண்டும்?

வனிதாவிடம் அந்த குழந்தையை மாலினி கொண்டு வந்து கொடுக்க, அவள் வாங்கினாள்.

''மதர், இந்த குழந்தையை நாங்க இன்னைக்கே எடுத்துக்கிட்டு போகவா?''

''வேறு யாராவது கேட்டா இன்னைக்கு கொடுத்திருக்க மாட்டோம். முறைப்படி என்னவெல்லாம் செய்யணுமோ அதையெல்லாம் செஞ்ச பிறகுதான் ஒப்படைப்போம். நீங்க இன்னைக்கு எடுத்துக்கிட்டு போங்க. அப்புறம் நாளைக்கோ, அடுத்த நாளோ வந்து சில பேப்பர்கள் கையெழுத்து போட்டு தாங்க'' என்று சொன்னபடியே குழந்தையை வாங்கி வனிதாவிடமும், ராம் மோகனிடமும் ஒப்படைத்தார். இதுவரை அந்த குழந்தையை பராமரித்து வந்த மாலினி, வனிதாவிடமிருந்து குழந்தையை வாங்கி முத்தமிட்டபடி அவளிடமே கொடுத்தாள். அவள் கண்கள் கண்ணீரால் நிரம்பி இருந்தன.

குழந்தையோடு கிளம்பினர். வரும் வழியிலேயே குழந்தைக்கு தேவையான துணிகள், தொட்டில், விளையாட்டு பொருட்கள், உணவு பொருட்கள், சில சிரப் வகைகள், பால் பாட்டில் என்று எல்லாமே வாங்கி கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்.

''அம்மா, தங்கச்சிய என்கிட்ட தாம்மா...''

''ஊஹும்... நீ துாக்கக்கூடாது. அவளை கீழே  படுக்க வைக்கிறேன். பக்கத்திலே இருந்து விளையாடு.'' பிரகாஷ் பக்கத்திலிருந்து விளையாடினான்.

அன்றே அந்த குழந்தைக்கு பெயர் சூட்ட எண்ணி பல பெயர்களை எழுதினர். கடைசியில் இருவரும் மனமொத்து 'அர்ஷிதா' என்னும் பெயரை செலக்ட் செய்தனர்.

மறுநாள் மதரிடம் இருந்து போன் வர, இருவரும் குழந்தையை எடுத்துக் கொண்டு போனார்கள். மதர் சில பேப்பர்களில் கையெழுத்து வாங்கினார். அவர்கள் வந்திருப்பதை அறிந்த மாலினி வந்து குழந்தையை வாங்கி அணைத்து முத்தமிட்டாள்.

''மாலினி, உனக்கு குழந்தையை பார்க்கணும் போல இருந்தா, அடிக்கடி எங்க வீட்டுக்கு வந்து பார்த்துட்டு போ.''

''வர்றேன் மேடம், நேரம் கிடைக்கிற போது வந்து பார்க்கிறேன்.''

ராம் மோகனும், வனிதாவும் கிளம்பினர்.

இரண்டு நாட்களுக்கு பிறகு ராம் மோகன் தன் அலுவலகத்திற்கு சென்ற பிறகு 11 மணியளவில் தன் செல் அடிக்க, எடுத்தாள் வனிதா. அறிமுகமில்லாத நம்பராக இருக்கவே ஆன் பண்ணி ''ஹலோ'' என்றாள். ''அக்கா, என் குரலை கேட்டதும் கட் பண்ணிடாதீங்க.'' பேசினது அனிதா. வனிதாவின் தங்கை.

''இல்லே... கட் பண்ணலே, சொல்லு...'' கோபத்துடன் பேசினாள் வனிதா.

''அக்கா, நான் காதலித்த ரமேஷை நம்பி வீட்டை விட்டு வந்தேன். உங்களுக்கெல்லாம் கேவலத்தையும் தேடி வச்சேன். என்னோட நகை எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு என்னை தனியா விட்டுட்டு எங்கேயோ ஓடிட்டான். நாலு மாச கர்ப்பிணியா இருந்த நான் என் வாழ்க்கையை முடிச்சுக்க துணிஞ்சேன்.

என்னை பார்க்க வந்த என் பிரண்ட் மாலினி என்னை தடுத்து அவங்க அம்மாகிட்ட என்னை கூட்டிட்டு போய் என்னை பார்த்துக்க சொன்னா. எனக்கு ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதான் பெண் குழந்தை பொறந்துச்சு. இந்த சமூகத்திலே தாலியும் இல்லாம கைக்குழந்தையோடு எங்கே போவேன்? மாலினிக்கு பாரமாக இருக்கவும் விரும்பலே. மாலினியிடம் குழந்தையை கொடுத்துட்டு அவள் வேலை பார்க்கிற இல்லத்திலேயே என் குழந்தையை வளர்க்க சொன்னேன். கோல்கட்டாவிலே ஒரு கம்பெனியிலே வேலை கிடைச்சது. நான் இப்போ இந்த ஊருக்கு வந்து ஒரு மாசம் ஆச்சு. அப்பப்போ மாலினிகிட்ட போன் பண்ணி குழந்தைய பத்தி விசாரிப்பேன். நேத்து போன் பண்ணும் போதுதான் அவ சொன்னா நீயும், அத்தானும் வந்து என் குழந்தையை தத்து எடுத்துட்டு போனீங்கன்னு. என்னால சந்தோஷம் தாங்க முடியலை.

அக்கா, சீரழிஞ்சு போன ஒருத்தியோட மகள்னு நினைச்சு என் பொண்ணை வெறுக்காேத அக்கா. எந்த சந்தர்ப்பத்திலும் உரிமை கொண்டாடி நான் வரமாட்டேன். அவளை உங்கள் குழந்தையாகவே நீங்கள் வளருங்க. அக்கா என் குழந்தையை ஒரு புனிதமான இடத்திலே ஒப்படைச்சிட்டேன்னு திருப்தியா இங்கிருந்து கிளம்புறேன். அர்ஷிதாவுக்கும், பிரகாஷுக்கும் என்னோட அன்பும், ஆசீர்வாதமும். வாழ்த்துக்களையும் சொல்லிக்கிறேன்.''

சட்டென்று போனை வைத்து விட்டாள் அனிதா.

தொட்டிலில் கிடந்த குழந்தையை எடுத்தாள் வனிதா.

'என் தங்கையின் குழந்தையா நீ? என் செல்லம், உன் மேல் உள்ள அன்பு இப்போ கூடுதே தவிர குறையலே.' அர்ஷிதாவை வாரி அணைத்து முத்தமிட்டாள். கண்களில் கண்ணீர் அருவியாக பெருக்கெடுத்தது. தன் தங்கையை நினைத்து பார்த்தாள்.

'எத்தனை அன்பாக இருந்தோம். ஒன்றாக வளர்ந்து, ஒன்றாக விளையாடி, ஒன்றாக ஸ்கூலுக்கு போய், தங்கையாக மட்டுமல்ல ஆருயிர் தோழியாகவும் இருந்தாளே, 2 வயது சின்னவள் என்றாலும் இரட்டையர் போல் இருந்தோமே. என்னை ஒரு கலெக்டருக்கு கட்டிக் கொடுத்தது போல அவளையும் ஒரு நல்ல குடும்பத்தில் நல்ல உத்தியோகம் பார்ப்பவருக்கு கட்டி கொடுத்திருப்பார்களே.

இந்த பாழாய்ப்போன காதல் வந்து அவளது தலைவிதியை மாற்றி விட்டதே. அவள் எங்கேயாவது நல்லபடியாக இருக்கட்டும். அவள் வயிற்றில் பிறந்த இவளை நான் நல்லபடியாக வளர்ப்பேன்' என்று நினைத்தபடியே அர்ஷிதாவை அணைத்து முத்தமாரி பொழிந்தாள். தன் தங்கையை அணைப்பது போல் இருந்தது அவள் மனதுக்கு.                                    

***