பூரி ஜெகநாதர் ரத யாத்திரை தொடங்கியது

பதிவு செய்த நாள் : 04 ஜூலை 2019 15:10

அகமதாபாத்,

   பூரியில் உலகப்புகழ் பெற்ற ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை இன்று கோலாகலமாக தொடங்கியது. இந்த ரத யாத்திரையில்  லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ரத யாத்திரை துவக்க நாளான இன்று அகமதாபாத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா சிறப்பு வழிபாடு செய்தனர்.

ஒடிசா மாநிலத்தின் கடற்கரை நகரமான பூரியில் அமைந்துள்ளது ஜெகநாதர் கோவில். வைணவ திருத்தலங்களில் முக்கியமானதாகும். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை உலகப் பிரசித்தி பெற்ற திருவிழாவாகும்.

இக்கோவிலில் குடிகொண்டுள்ள ஜெகநாதர், பலதேவர் மற்றும் சுபத்ரா தேவி ஆகியோர் ஆண்டுதோறும் தனித்தனியாக 3 ரதங்களில் ஏறி, பூரி நகரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்கள். 3 தெய்வங்களும் தங்கள் அத்தையான குண்டிச்சா கோவிலுக்கு சென்று தங்கிவிட்டு திரும்புவார்கள்.

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை இன்று கோலாகலமாகத் தொடங்கியது. இதற்கா 3 பிரமாண்ட தேர்கள் செய்யப்பட்டு, வண்ணம் தீட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டது.

16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, மஞ்சள் நிறத் தேரில் உற்சவ மூர்த்தியான பூரி ஜெகன்நாதரும், 14 சக்கரங்களை கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய தேரில் பலதேவரும், 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கருப்பு நிறத் தேரில் சுபத்ரா தேவியும் எழுந்தருளினர். இதையடுத்து பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனர்.

வாண வேடிக்கைகள் முழங்க, மூன்று தேர்களும் ஆடி அசைந்து பவனி வரும் காட்சியைக் காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

10 நாட்கள் ரத யாத்திரை விழா நடைபெற உள்ளது.

இந்தியா முழுவதிலும் இருந்து பல லட்சம் மக்கள் வருவதால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பூரி நகரில் 10,000 போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்திய கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படையினரும் கடற்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அகமதாபாத் ரத யாத்திரையில் பங்கேற்ற அமித் ஷா

அகமதாபாத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஜெகநாதர் ஆலயத்திலும் இன்று ரத யாத்திரை தொடங்கியது. இன்று காலையில் நடைபெற்ற மங்கள ஆரத்தி நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது மனைவியுடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி வழிபாடு

கொல்கத்தாவில் பூரி ஜெகநாதர் கோவிலின் ரத யாத்திரையில் பங்கேற்க நுஸ்ரத்துக்கு இஸ்கான் அமைப்பு சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்று இன்று நஸ்ரத் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி ஆகியோர் ரத யாத்திரையில் கலந்துக் கொண்டு வழிபாடு நடத்தினர். 

ரத யாத்திரை விழாவை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.