பாட்டிமார் சொன்ன கதைகள் – 223 – சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 05 ஜூலை 2019

கங்கா தேவி!

`அப்படிப் பார்த்தாளே, அதுதான் என்ன?  விளையாட்டுப் பார்வையா? குறும்புப் பார்வையா? அன்புப் பார்வைதானா ? என்றெல்லாம் கனவு காணத் தொடங்கினாள்.

 அந்த ஒரே பார்வையில் அவள்  எத்தனையோ வெற்றிகளை அடைந்துவிட்டதாகத் தோன்றியது.  ` இவள் மகாலட்சுமி முதலான தேவஸ்தீர்களையெல்லாம் கீழ்ப்படுத்திவிட்டாள். சந்தேகமில்லை !’ என சித்தஞ்செய்து விட்டான். அரசன் வியப்புற்று மயிர்கூச்செறிந்தான். அந்த அழகிற்கே தாகங் கொண்டவளைப் போல் கண்களால் இன்பம் பருகினான். எனினும் திருப்தி அடையவில்லை. அவளும் அவனைக் கடைக் கண்ணால் பார்ப்பதில் சலிப்பில்லாதவளாயிருந்தாள்.

 அரசன் அவளை சமீபித்து ` என்னுடைய செல்வம் யாவும் இராஜ்யமும் , என்னுடைய உயிரும் உன்னைச் சேர்ந்தவை !’ என்று சொன்னான். அவளும் அந்த காணிக்கையை அப்படியே அங்கீகரித்து அனுக்கிரகம் செய்யும் தெய்வம் போல நின்றாள்.

`உன்னிடத்தில் நான் யாசிக்கிறேன் அம்மா என்றெல்லாம் அரசன் கூசிக் கூசி, ஏதேதோ சொல்ல ஆரம்பித்தான்.

 அவள் மிருதுவாகவும், அழகாகவும் உறுதியாகவும் பேசினாள். ` அரசே! நீயாவது மற்றவராவது என்னைப் பற்றி எந்த வகையிலும் தெரிந்து கொள்ள விரும்பக் கூடாது. நல்லதோ கெட்டதோ நான் என்ன செய்வேனோ அதில் என்னைத் தடுக்காமலிருக்க வேண்டும். எனக்கு விருப்பமில்லாததைச் சொல்லாமிலிருக்க வேண்டும். இப்படி நீ நடந்து கொள்ளும் வரை நான் உன் ராணியாக இருப்பேன். இது என்னுடைய நியமம். இந்த நியமம் தவறினால் நான் உன்னைப் பிரிந்து விடுவேன்.’ என்றாள். உடனே ` அப்படியே ஆகட்டும்’ என்றான் காதலன்.

 இந்தக் காதலன் தான் சந்தனு மகாராஜா என்று மகாபாரதத்திலே பிரசித்தி பெற்ற அரசர்களில் ஒருவன். இளமையிலேயே மகத்தான் தியாகத்தைச் செய்த பூருவின் பெயரால் கெளரவ வம்சத்தினர் என்ற பெயர் பெற்ற ஜனமேஜய மகாராஜாவின் முன்னோர்களில் ஒருவன்.

 சந்தனு தன் காதலியைத் தேரின்மேல் ஏற்றிக்கொண்டு அஸ்தினாபுரத்திற்குப் போனான். அந்தப் பெண்ணரசி எவ்வளவு காதல் கொண்டிருந்த போதிலும், எத்தனை விஷயங்களைக் குறித்துப் பிரியமாய் பேசிக்கொண்டிருந்த போதிலும், அரசனைப் பல வகையிலும் திருப்தி செய்து மகிழ்வித்து வந்த போதிலும், தன்னைக் குறித்து ஒன்றுமே பிரஸ்தாபிப்பதில்லை. அரசனும், அந்த இரகசியத்தை அறிய எவ்வளவும் அவலாயிருந்த போதிலும், அதைக் குறித்து ஒன்றுமே கேட்கத் துணியவில்லை.

 அவள் கர்ப்பம் தரித்தாள். அரசனுக்கு ஆனந்தம் அதிகமாயிற்று. பிறந்தது ஆண் குழந்தையென்று கேள்விப்பட்டதும், ` என் குலத்தை விளக்க வந்த தீபம் !’ என்று அரசன் ஆனந்தத்திலே ஆழ்ந்து போனான். ஆனால் அவள் அந்தக் குழந்தையைக் கங்கையில் போட்டுவிட்டாள் என்று அறிந்ததும் கரை காணாத துயரத்தில் ஆழ்ந்து விட்டான்.

 எனினும் அதைக் குறித்து அவளை ஒன்றும் கேட்கவில்லை. அவளுடைய நியமத்திற்கும் தன்னுடைய  வாக்கிற்கும் தங்களுடைய காதலுக்கும் விரோதம் வந்துவிடுமோ என்று பயந்தான் அவள் மறுபடியும் ஒரு பிள்ளையைப் பெற்றாள். அந்தப் புத்திரனையும் கங்கா பிரவாகத்தில் விட்டு விட்டாள். அரசனுக்குத் துயரத்தோடு கோபமும் கூட;  எனினும் அவள் பிரிந்து விடுவாளோ என்ற பயம், அதைக் குறித்தும் அவளைக் கண்டிக்க முடியாமல் செய்துவிட்டது.

 இப்படிப் பிறக்க பிறக்க ஏழு புத்திரர்களைக் கங்கையில் விட்டு விட்டான். கொஞ்சமும் இரக்கமில்லாமலே `` இப்படிப் பட்டபயங்கரமான கொலைகளுக்குக் காரணம் என்ன? இவள் வந்த காரணம்தான் என்ன? இந்தப் பாதகிதான் யாரோ என்று எண்ணாததெல்லாம் எண்ணினான். எனினும் கண்டிக்கத் துணிவு வரவில்லை. ` எத்தனையோ பழி பாவங்களும், பாதகங்களும் முழுகி மறைந்து போய்விட்டன. என்னுடைய காதல் என்ற கங்கையிலே!’ என்று எண்ணினான் அரசன்.

 ஆனால் எட்டாவது புத்திரனையும் அவள் கங்கையாற்றில் அமிழ்த்தி விடப்  புறப்பட்டாள் என்று தெரிந்த போது, சந்தனுவின் மனம் சுழன்றது. புத்தி கலங்கியது. ஆத்திரமாக அவளை நெருங்கி ` கொல்லாதே புத்திரனை ஏன் கொல்லுகிறாய்? எவ்வளவு பெரும் பாவத்தைச் சம்பாதித்துக் கொண்டாய்? நீ யார் ? பெண்ணோ? பேயோ?’ என்றெல்லாம் அடுக்கினான்.

 அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள், ``பயப்படாதே ! இந்த புத்திரனை நான் கொல்லப் போவதில்லை. வளர்க்கத்தான் போகிறேன். இவனுக்கும் உனக்கும் மங்களம் உண்டாகட்டும். இவன் உன் குலத்தைச் சிறப்பிக்கப் போகிறான். சாதாரண மனிதர்களால் ஆகாத காரியத்தைச் செய்யப்போகிறான் !’ அது கேட்டு, அரசனுக்கு முகம் மலர்ந்தது. `` இவன் பாக்கியசாலிதான் ‘ என்றான். ஆனால் அடுத்த நிமிஷத்தில் ` நாம் செய்த ஏற்பாட்டின்படி நான்  உன்னைப்பிரிந்து போகிறேன் !’ என்று அவள் சொன்னதும், அவன் மறுபடியும் துயரக் கடலில் ஆழ்ந்தான்.

 ` நீ யார் ? ஏன் குழந்தைகளைக் கங்கையில் அமிழ்த்தினாய் ?’ என்று சந்தனு மறுபடியும் கேட்க, அவள், `` நான் வேறு.கங்கை வேறு அல்ல. நான்தானே கங்கை ! என் குழந்தைகளை நான் தானே கொண்டு போனேன். அந்த இரகசியம் அரசனுக்கு விளங்கவில்லை. மறுபடியும் அவள் சொன்னாள்: ` நான் சாட்சாத் கங்காதேவிதான். அதாவது, கங்கையின் அதி தேவதை. உன்னை மகிழ்விப்பதற்கும், வசிஷ்டரால் மனிதராகும்ப்படி சபிக்கப்பட்ட தேவர்களாகிய எட்டு வசுக்களையும் புத்திரராகப் பெறுவதற்கும் நான் மானிட தேகம் எடுத்து வந்தேன்.

(தொடரும்)