காஞ்சிபுரத்தில் காவல்துறை கெடுபிடி: கோயிலுக்கு அருகே ஷேர் ஆட்டோ ஓட்டுனர் தீக்குளித்து சாவு

பதிவு செய்த நாள் : 03 ஜூலை 2019 16:26

காஞ்சிபுரம்: 

கோயில் வரை செல்ல காவல்துறை அனுமதி மறுத்ததால், காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனம் அளிக்கும் கோயிலுக்கு அருகே ஷேர் ஆட்டோ ஓட்டுநர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பக்தர் ஒருவர் போலீஸாரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார்.


ஷேர் ஆட்டோ ஓட்டுநர் குமார் மரணம்

அத்திவரதர் தரிசனம் அளிக்கும் கோயில் அருகே சென்றுவர அனுமதிச் சீட்டு தன்னிடம் இருந்தும், தனது ஷேர் ஆட்டோவை காவல்துறையினர் அனுமதிக்காததால் அதிருப்தி அடைந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர் குமார், கோயிலுக்கு அருகே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.

அவரைக் காப்பாற்ற யாரும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், அவர் படுகாயத்துடன் அவரது ஷேர் ஆட்டோவிலேயே ஏற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார்.

ஆந்திராவை சேர்ந்த சக்தி மரணம்

அத்திவரதர் வைபவத்தில் கோவிலில் சாமி தரிசனத்திற்காக ஆந்திராவிலிருந்து வந்திருந்தவர் சக்தி ஆகாஷ். 

இன்று கோயிலுக்குச் சென்ற அவர் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்த தங்கப்பல்லியை புகைப்படம் எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் கோயில் ஊழியர்கள் கண்டித்ததன் பேரில், பாதுகாப்பிற்கு இருந்த காவலர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் மயக்கமடைந்த அவர் அப்படியே மரணமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து சக்தியின் உறவினர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.