தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது

பதிவு செய்த நாள் : 03 ஜூலை 2019 13:27

சென்னை:

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு ஆன்லைனில் இன்று (புதன்கிழமை) தொடங்கியது.


தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள பொதுப் பிரிவினருக்கான பொறியியல் ஆன்லைன் கலந்தாய்வு இன்று (புதன்கிழமை) தொடங்கி 4 சுற்றுகளாக ஜூலை 28-ஆம் தேதி வரை ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

பொறியியல் கலந்தாய்வு ஜூன் 25-ஆம் தேதி தொடங்கியது.

முதல் 3 நாள்கள் சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான நேரடி கலந்தாய்வு சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் வளாகத்தில் நடைபெற்றது.

பிளஸ்-2 (+2) தொழில் பிரிவு மாணவர்களுக்கான நேரடி கலந்தாய்வு ஜூன் 26-ஆம் தேதி தொடங்கி 28 வரை 3 நாள்கள் நடைபெற்றது.

பொதுப்பிரிவு மாணவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று (ஜூலை 3) தொடங்கியது.

இந்தக் கலந்தாய்வில் மாணவர்கள் வீட்டிலிருந்தபடியோ அல்லது தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 46 கலந்தாய்வு உதவி மையங்களுக்குச் சென்றோ அதில் பங்கேற்கலாம். www.tneaonline.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் தங்களுக்கான பதிவுக்கட்டணத்தை செலுத்தலாம்.

4 சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெறுகிறது.

முதல் சுற்று

முதல் சுற்றில் இடங்களைத் தேர்வு செய்ய இன்று முதல் 10-ஆம் தேதி வரை மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். இதில் 200 முதல் 178 வரை கட்-ஆப் மதிப்பெண் பெற்றுள்ள அதாவது தரவரிசை 1 முதல் 9,872 வரை உள்ள மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். இந்தச் சுற்று மாணவர்கள் ஜூலை 8 முதல் 10-ஆம் தேதிக்குள் இடங்களைத் தேர்வு செய்துவிட வேண்டும். அதன் பின்னர் முதல் சுற்று மாணவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு விவரம் ஜூலை 11-ஆம் தேதி வெளியிடப்படும்.

ஜூலை 11, 12 ஆகிய 2 தினங்களில் மாணவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். அதனைத் தொடர்ந்து இந்த மாணவர்களுக்கான இறுதி ஒதுக்கீடு ஜூலை 13-ஆம் தேதி வெளியிடப்படும்.

இரண்டாம் சுற்று

ஜூலை 8 முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறும் இரண்டாம் சுற்று கலந்தாய்வில் தரவரிசை 9,873 முதல் 30,926 வரை உள்ள மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். இவர்கள் ஜூலை 13 முதல் 15-ஆம் தேதிக்குள் இடங்களைத் தேர்வு செய்துவிட வேண்டும். இவர்களுக்கான தற்காலிக இடஒதுக்கீடு ஜூலை 16-இல் வெளியிடப்படும். அதை, ஜூலை 16, 17 தேதிகளில் மாணவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

இறுதி ஒதுக்கீடு ஜூலை 18-ஆம் தேதி வெளியிடப்படும்.

மூன்றாம் சுற்று

மூன்றாம் சுற்று கலந்தாய்வு ஜூலை 13 முதல் 17 வரை நடைபெறும். இதில் தரவரிசை 30,927 முதல் 64,093 வரை உள்ள மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். இவர்கள் ஜூலை 18 முதல் 20 -ஆம் தேதிக்குள் இடங்களைத் தேர்வு செய்துவிட வேண்டும்.

இவர்களுக்கான தற்காலிக இடஒதுக்கீடு ஜூலை 21-இல் வெளியிடப்படும். அதை ஜூலை 21, 22 தேதிகளில் மாணவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். 

மாணவர்களுக்கான இறுதி ஒதுக்கீடு 23-ஆம் தேதி வெளியிடப்படும்.

நான்காம் சுற்று

18 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறும் நான்காம் சுற்று கலந்தாய்வில் தரவரிசை 64,094 முதல் 1,01,692 வரை உள்ள மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். இவர்கள் ஜூலை 23 முதல் 25-ஆம் தேதிக்குள் இடங்களைத் தேர்வு செய்துவிடவேண்டும். ஜூலை 26-ல் இவர்களுக்கான தற்காலிக இடஒதுக்கீடு வெளியிடப்படும். அதை 26, 27 தேதிகளில் மாணவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

அதனைத் தொடர்ந்து இவர்களுக்கான இறுதி ஒதுக்கீடு ஜூலை 28-ல் வெளியிடப்படுகிறது.