மூத்த பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘சிவநேசச் செல்வர்கள்! – 160

பதிவு செய்த நாள் : 02 ஜூலை 2019

அதைக் கண்ட கூற்றுவ நாயனார் ஐயுறவு கொண்டு வருந்தி, ‘அடியேன் எனக்கு தில்லைக்கூத்தன் திருவடியே முடியாக வேண்டும்’ என்று நினைத்து இரவில் துயின்றார். சிவபெருமான் நாயனாரின் கனவிலே தோன்றி, தமது திருவடியை முடியாக, நாயனாருக்கு சூட்டியருளினார். நாயனார் அந்த திருவடியை முடியாக அணிந்து உலகத்தைப் பறந்து வந்தார்.

 தில்லைக்கூத்தர் மகிழ்ந்து தங்கும் பல சிவத்தலங்களுக்கும் கூற்றுவ நாயனார் சென்று பெரும் பூசனைகள் இயற்றி இறைவனையே வழிபட்டு சிவபெருமானின் திருவடி நிழலை அடைந்தார். களந்தைக் கூற்றனார் கழல் வணங்கிவிட்டு பொய்யடிமை இல்லா புலவர் செயல் கூறுவோம்.

பொய்யடிமையில்லாத புலவர்

 பொய்யடிமை இல்லாத புலவர் என்போர், நீலகண்டப் பெருமானின் திருமலரடிக்கே ஆளானவர்கள். அதுவே மெய்யுணர்வின் பயன் என்று துணிந்து விளங்கியவர்கள். இவர்கள் செய்யுட்களில் திகழும் சொற்களைப் பற்றிய தெளிவும், செம்மை தரும் பயனுடைய நூல்கள் பலவற்றைப் பயின்ற ஆய்வுணர்வும் உடையவர்கள். அவற்றால் பெறும் மெய்யுணர்ச்சியின் பயன் சிவபெருமானின் மலரடிகளை வணங்குதலே என்ற கருத்தின் வழி நின்று தொண்டாற்றியவர்கள். சிவபெருமானின் செயலையன்றி வேறெதையும் வாய் திறந்து பாடாத நெறியில் நின்று தொண்டு செய்த மெய்யடிமையுடையவர்கள். அவர்களுடைய பெருமையை அறிந்து உரைக்க வல்லவர்கள் யார்தான் உண்டு?

 அவர்களை வாழ்த்தி வணங்கிவிட்டு அடுத்ததாக புகழ் சோழரின் திருத்தொண்டை புகல்வோம்.

 புகழ் சோழ நாயனார்

 இமயமலையின் உச்சியில் தமது புலிக்கொடியின் அடையாளத்தை பொறித்தவர்கள் சோழர்கள். இவர்கள், வெண்கொற்றக் குடையின் நிழலில் இருந்து, பரந்த உலகத்தைக் காத்து இன்பம் பெருக அரசளித்தவர்கள். இவர்கள் புகழும் வன்மையும் கொண்ட தமிழ் மன்னர்களேயாவர். இவர்களால், ஆளப்பட்ட சோழ வளநாட்டில், உலகத்தில் அழகுகளெல்லாம் ஒருங்கே அமைந்ததையும் பழைய பெரிய ஊர் ‘உறையூர்’ என்பதாகும்.

 அளவற்ற பெரும் புகழ்பெற்ற அந்த உறையூரில் அழகிய ஒளிவீசும் சுடர்மணி விளக்குகள், இளங்கதிரவன் போல ஒளிவீசி, இரவுப் பொழுதை இல்லையெனும்படிச் செய்யும். எல்லையில்லாத பற்பல வகைப்பட்ட பொருட்கள் யாவும்  நிறைந்துள்ள கடைவீதிகள் மூவுலகத்திலும் உள்ளனவற்றை விடச் சிறந்து விளங்கும். மேகக்கூட்டங்கள், தம் இனங்கள் தானென்று கருதி வரும்படியாகக் கருமை நிறம் படைத்த யானைகள், யானைக் கூடங்களில் நின்று கொண்டிருக்கும். லாயங்கள் தோறும், புல்லைத் தின்று கொண்டு வாய் நீர் ஒழுகக் கனைக்கும் குதிரைகள் கடல் போல் நிறைந்து விளங்கும் ஐராவதம், உச்சைச்சிரவம், லக்குமி, கற்பகத்தரும் சிந்தாமணி, அமுதம் ஆகியவற்றை எல்லாம் தேவர்கள் எடுத்துச் சென்றுவிட்டதால் வருந்திய பாற்கடலானது, அவற்றுள் ஒன்றையாவது திரும்பப் பெற விரும்பி, தேவருலகத்தையடைந்து வளைந்து சூழ்ந்து கொண்டிருப்பது போல், புறமதிலைச் சூழ்ந்த அகழிகள் நீர் நிறைந்து தோன்றும். அவ்வூரிலுள்ள கோபுரங்கள் எல்லாம் கருமேகங்கள் ஏறும். மலர்ச்சோலைகளில் சந்திர சூரிய ஒலிகள் ஏறும். இளமங்கையரின் மார்புகளில் வார்க்கச்சைகள் ஏறும். அழகான வீதிகளிலெல்லாம், பேரழகுடைய தேர்களில் ஏறி ஓடிக்கொண்டிருக்கும் அத்தகைய உறையூரின் வளமையையும் பெருமையையும் அளவிட்டு வர்ணிக்கவே முடியாது.

 அங்கு, அநபாய சோழரின் மரபில் வந்த புகழ் சோழர் என்ற மன்னர் உறையூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்தார். செல்வத்தால் செழிப்புற்ற பரந்த உலகம் முழுதும் அவர்தம் செங்கோலின் ஆணைக்கு கீழ்ப்படிந்து நடந்தது. அவரது நாட்டில் வைதீகச் சைவம் தழைத்தோங்கியது. அவர் சிவாலயங்கள் எல்லாவற்றிலும் நிறைந்த பெரும்பூசனைகள் விளங்கச் செய்தார். சிவனடியார்களை அடுத்து உபசரித்து அவர்கள் வேண்டுவனவற்றையெல்லாம் குறிப்பறிந்து வழங்கி வந்தார். இவ்வாறு, உறையூரில் ஆட்சி புரிந்து வருகையில், கொங்கர்களிடமும், குடபுல மன்னர்களிடமும் கப்பம் வசூலிப்பதற்காகப் புகழ் சோழர் தாமும் குல மரபுக்கு உரிமையுடைய பெருநகராகிய கருவூருக்கு நல்லதொரு நாளிலே, தமது சுற்றத்தாரோடு சென்றார்.

 முதலாவதாக, அவர் அங்குள்ள திருஆனிலைத் திருக்கோயிலை அடைந்து சிவபெருமானை வணங்கினார். பிறகு ஒளி பொருந்திய அரண்மனையை அடைந்து அத்தாணி மண்டபத்தில் அரியணையில் அரசு வீற்றிருந்தார்.

 அப்பொழுது புகழ் சோழர், குடபுல மன்னர்கள் கொண்டு வந்த  திறைப் பொருட்களாகிய யானைகளையும், குதிரைகளையும் பொற்குவியல்களையும், ரத்தின மணிகளையும் கண்காணித்து மகிழ்ந்தார். திறைகளைக் கொண்டு வந்து செலுத்திப் பணிந்த அரசர்களுக்கு, அவரவர் அரசுரிமைத் தொழிலை செய்து தரும்படி பணித்தருளி தமது அமைச்சர்களை நோக்கி, ‘நமது ஆளுகைக்கு அடங்கி நில்லாமல், மாறுபட்ட அரசர்கள் ஒதுங்கியிருக்கும் காவலிடங்கள் ஏதேனும் உண்டா? உண்டாகில், அதை தெரிந்து சொல்லுங்கள்’ என்று கட்டளையிட்டார்.

 இவ்வாறு கருவூரிலிருந்து புகழ் சோழர் அரசாட்சி புரிந்து வருகையில் ஒரு நாள் சிவகாமியாண்டார் என்னும் சிவனடியார் இறைவனுக்காக பறித்துக் கொணர்ந்த திருப்புள்ளைத் தாமம் நிறைந்துள்ள பூக்கூடையை  புகழ் சோழரின் பட்டத்து யானை அச்சிவனடியாரின் கையிலிருந்து பறித்துச் சிதறடித்தது. அதனால் எறிபத்த நாயனார் என்பவர் அந்த பட்டத்து யானையைக் கொண்டு வீழ்த்தி அதன் பாகர்களையும் கொன்றார். அந்த எறிபத்த நாயனாரின் எதிரே புகழ் சோழர் சென்று, ‘என் யானை செய்த இக்குற்றத்திற்கு இது போதாது. என்னையும் இதனால் கொன்றருளும்’ என்று வேண்டித் தமது உடைவாளை நீட்டித் திருத்தொண்டின்  திறத்தில் மிகச் சிறந்து விளங்கினார். இதன் விவரத்தை எறிபத்த நாயனார் கதையில் நாம் பார்க்கலாம்.

 இவ்வாறு புகழ் சோழர் திருத்தொண்டிலும் ஈடுபட்டு மிகச் சிறந்து விளங்கி ஆட்சி புரிந்து வருகையில் ஒரு நாள் ...