ஒரு பேனாவின் பயணம் – 214 – சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 01 ஜூலை 2019

பழைய சம்பிரதாய மூட்டை !

எங்கே பார்த்­தா­லும் சோலை­கள் சூழ்ந்து ஒரே பசு­மை­யாக விளங்­கிற்று. அந்­நாடு, அதிக குளி­ரா­க­வும் இரா­மல் அதிக உஷ்­ண­மா­க­வும் இரா­மல் சீதோஷ்ண ஸ்திதி சம­நிலை பெற்று இனி­மை­யாக இருந்­தது. இதெல்­லாம் பழங்­கதை. இப்­போது பல நூறு வரு­டங்­க­ளாக வெறும் பாழ்­நி­ல­மாக – பாலை­வ­னம் என்றே சொல்­லி­வி­ட­லாம் – கிடக்­கி­றது. பழைய நக­ரங்­க­ளில் சில இன்­னும் இருக்­கின்­றன. ஸமர்க்­கந்த் பொகாரா – இவற்­றின் பெய­ரைச் சொன்ன மாத்­தி­ரத்­தி­லேயே பழைய நினை­வு­கள் வந்து குவி­கின்­றன. ஆனால், இந்­ந­க­ரங்­கள் தங்­க­ளு­டைய புரா­த­னச் சிறப்பை இழந்து நிற்­கின்­றன.

 மறு­ப­டி­யும், நான் பின் சொல்­ல­வேண்­டி­யதை முன்­பா­கவே சொல்­கி­றேன். நாம் இப்­போது பேசிக்­கொண்­டி­ருக்­கும் பழைய நாட்­க­ளிலே ஸமர்க்­கந்த் – பொகாரா நக­ரங்­கள் தோன்­றவே இல்லை. மத்­திய ஆசியா பெரு­மை­யு­று­வ­தும் பின்பு வீழ்ச்­சி­யு­று­வ­தும் எதிர்­கா­லத்­தில் நடக்­க­வி­ருக்­கும் சம்­ப­வங்­க­ளா­கும்.

பழைய சம்­பி­ர­தாய மூட்டை ஜன­வரி 14, 1931

சிறை­யில் எனக்­குச் சில புது பழக்­கங்­கள் ஏற்­பட்­டி­ருக்­கின்­றன. இவற்­றில் ஒன்று அதி­கா­லை­யில், விடி­யு­முன்பே எழுந்­து­வி­டு­வ­தா­கும். சென்ற வரு­டம் கோடைக்­கா­லத்­தில் இவ்­வ­ழக்­கத்தை மேற்­கொண்­டேன். உதய ஒளி சிறிது சிறி­தா­கப் பரவி வானி­லுள்ள நட்­சத்­தி­ரங்­களை  ஒட்­டு­வ­தைப் பார்ப்­பது எனக்கு ஆனந்­த­மா­யி­ருக்­கும். விடி­யு ­முன் சந்­தி­ரனை பார்த்­தி­ருக்­கி­றாயா? அது மெல்ல மெல்­லப் பக­லாக மாறு­வ­தைக் கவ­னித்­தி­ருக்­கி­றாயா   நில­வொ­ளிக்­கும் பக­லொ­ளிக்­கும் நடக்­கும்

இப்­போ­ராட்­டத்­தில் பக­லொளி எப்­பொ­ழு­தும் வெற்றி பெற்று வரு­கி­றது. இதை நான் அடிக்­கடி கவ­னிப்­ப­துண்டு. இந்த மங்­க­லான வெளிச்­சத்­தில் சிறிது நேரம் நில­வொ­ளியா அல்­லது பக­லொ­ளியா என்று சொல்­வது கஷ்­ட­மா­யி­ருக்­கும். பிறகு திடீ­ரென்று – இப்­போது சந்­தே­கமே இல்லை – விடிந்து பகல் தோன்­று­கி­றது. சந்­தி­ரன் ஒளி மழுங்­கித் தோற்று மறைந்­து­வி­டு­கி­றான்.

 என்­னு­டைய வழக்­கப்­படி நான் இன்று நட்­சத்­தி­ரங்­கள் வானி­லி­ருக்­கும் போதே எழுந்­து­விட்­டேன். விடி­யு­முன்பு காற்­றில் மிதந்து வரும் அந்த ஏதோ ஒன்­றைக் கொண்­டு­தான் பொழுது புலர்­வதை அறி­யக்­கூ­டும். நான் வாசித்­துக் கொண்­டி­ருந்­தேன். தூரத்தே கேட்டு, வர­வ­ரப் பெரி­தாகி வரும் மனி­தர்­க­ளின் குர­லோசை காலை நேரத்­தின் சாந்­தியை கெடுத்து வந்து என் செவிக்கு எட்­டிற்று. அன்­றைய தினம் சங்­க­ராந்தி என்­பது எனக்கு ஞாப­கம் வந்­தது. மாக்­மேளா (மாக் – மாசி, மேளா – திரு­விழா; இதைக் கும்­ப­மேளா என்று சொல்­வ­தும் உண்டு) வின் முதல் நாளா­கிய அன்று கங்­கை­யும் யமு­னை­யும் கண்­ணுக்­குத் தெரி­யா­மல் அந்­தர்­வா­ஹி­னி­யாக – உள்ளே பிர­வே­சித்து அல்­லது ஓடு­தல் என்று பொருள். இது சரஸ்­வ­தி­யும், வந்து கூடும் திரி­வேணி சங்­க­மத்­தில் ஸ்நானம் செய்­வ­தற்கு ஜனங்­கள் ஆயி­ரக்­க­ணக்­கில் போய்க்­கொண்­டி­ருந்­தார்­கள். போய்க்­கொண்­டி­ருக்­கும் போதே  பாடிக்­கொண்­டும் `கங்கா மாய் கீ ஜே’ என்று கோஷித்­துக் கொண்­டும் சென்­றார்­கள். அவர்­க­ளு­டைய குரல் நைனி சிறை­யின் சுவர்­க­ளைத் தாண்டி வந்து  என் காதில் பட்­டது. அதைக் கேட்­ட­போது, இத்­தனை பேரை­யும் தங்­கள் வறு­மை­யை­யும், துன்­பத்­தை­யும் ஒரு கண நேரம் மறக்­கச் செய்து சங்­கம ஸ்நானத்­துக்கு இழுத்­துச் சென்ற அந்த நம்­பிக்­கை­யின் சக்­தியை நினைத்­துப் பார்த்­தேன். எத்­தனை ஆயி­ரம் வரு­டங்­க­ளாக, ஒரு வரு­டம்­கூட  தவ­றா­மல், இவர்­கள் இவ்­வாறு திரி­வே­ணிக்­குப் போய்க்­கொண்­டி­ருக்­கி­றார்­கள். மனி­தர்­கள் வர­லாம், மனி­தர்­கள் போக­லாம், அர­சாங்­கங்­க­ளும் சாம்­ராஜ்­ஜி­யங்­க­ளும் சிறிது காலம் ஆட்சி செய்­து­விட்டு மறைந்து போக­லாம். ஆனால்  பழைய சம்­பி­ர­தா­யம் இடை­யீ­டின்­றிச் சென்று கொண்டே இருக்­கி­றது. அதைத் தடுப்­ப­வர் யாரு­மில்லை. ஒவ்­வொரு தலை­மு­றை­யும் அதற்­குப் பணிந்து செல்­கி­றது. பழைய வழக்­கங்­கள் என்­ப­ன­வற்­றில் நல்­லன நிறைய இருக்­கின்­றன. ஆனால் சில சம­யங்­க­ளில் அவை சுமக்க முடி­யாத மூட்­டை­யாகி நாம் முன்­னே­றிச் செல்­வ­தற்கு இடைஞ்­சல் பண்­ணு­கின்­றன. தூரத்தே மங்­க­லா­கத் தெரி­யும் இறந்த காலத்­தை­யும் நம்­மை­யும் சேர்த்து பிணைக்க இவ்­வ­றான தொடர்பை நினைக்­கும்­போது இம்­மே­ளா­வைப் பற்றி 1300 வரு­ஷங்­க­ளுக்கு முன் எழு­தப்­பட்ட விவ­ரங்­க­ளைப் படிக்­கும்­போ­தும் ஒரு விதக் கவர்ச்­சி­யும் பிர­மிப்­பும் உண்­டா­கின்­றன. அந்­தக் காலத்­தி­லேயே மேளா ஒரு பழைய வழக்­க­மா­யி­ருந்­தது. ஆனால் நாம் முன்­னே­றிச் செல்ல விரும்­பும்­போது இத்­தொ­டர்­பா­னது நம்­மைச் சுற்­றிக்­கொண்டு பழைய வழக்­கத்­தின் பிடிப்­பிலே நம்மை சிறைப்­ப­டுத்தி விடு­கி­றது. பழங்­கா­லத்­தோடு நமக்­குள்ள பல தொடர்­பு­களை நாம் பாது­காத்து வைத்­துக் கொள்ள வேண்­டும்.  ஆனால் பழைய வழக்­கம் என்­கிற தலை நமது முன்­னேற்­றத்­தைத் தடுக்­கும்­போ­தெல்­லாம் அதை முன்­பின் பாராது அறுத்­தெ­றிய வேண்­டும்.  கடந்த மூன்று கடி­தங்­க­ளில் உல­க­மா­னது சென்ற 3ஆயி­ரத்­தி­ லி­ருந்து 2 ஆயி­ரத்து ௫௦௦ வரு­டங்­கள் வரை­யில் எப்­படி இருந்­தது என்று பார்க்க முயன்­றோம். நான் தேதி­கள் ஒன்­றும் குறிப்­பி­ட­வில்லை. தேதி­கள் என்­றால் எனக்­குப் பிடிக்­காது. அவற்­றைச் சொல்லி உனக்கு அதி­கத் தொந்­த­ரவு கொடுக்­க­வும் நான் விரும்­ப­ வில்லை. மேலும் பழங்­கா­லத்­திய சம்­ப­வங்­கள் இன்ன தேதி­யில்­தான் நிகழ்ந்­தன என்று சரி­யாக அறிந்து சொல்ல முடி­யாது. போகப்­போக நமது மன­தில் விஷ­யங்­களை வரி­சைக்­கி­ர­ம­மாக வைத்­துக் கொள்­வ­தற்­காக சில தேதி­களை ஆங்­காங்கு குறிப்­பி­டு­வது அவ­சி­ய­மா­யி­ருக்­கும். இப்­போ­தைக்கு உல­கம் பழைய நாட்­க­ளில் எவ்­வாறு இருந்­த­தென்று தெரிந்து கொள்ள முயன்று வரு­கி­றோம்.

 கிரீஸ், மத்­திய தரைக்­க­டல் நாடு­கள், எகிப்து, சின்ன ஆசியா, பார­சீ­கம் இவற்­றைப் பார்த்­தோம். இப்­போது நமது நாட்­டிற்கு திரும்பி வரு­வோம். இந்­தி­யா­வின் ஆதி­கால சரித்­தி­ரத்தை அறி­வ­தில் நமக்கு ஒரு பெரிய கஷ்­டம் இருக்­கி­றது. ஆதி ஆரி­யர்­கள் அதா­வது இந்­திய ஆரி­யர்­கள் சரித்­தி­ரம் எழுதி வைப்­பது அவ­சி­யம் என்று கரு­த­வில்லை. நமது முந்­தின கடி­தங்­க­ளில் அவர்­கள் பல வழி­க­ளில் எவ்­வாறு மேன்­மை­யுற்­றி­ருந்­தார்­கள் என்று பார்த்­தோம். அவர்­க­ளு­டைய வேதங்­கள், உப­நி­ஷ­தங்­கள், ராமா­ய­ணம், மகா­பா­ர­தம், ஆகிய நூல்­களை அதி ‘மேதா­வி­கள்’ தாம் இயற்­றி­யி­ருக்க முடி­யும். இந்­நூல்­க­ளும்  இதர விஷ­யங்­க­ளும் பழைய சரித்­தி­ரத்தை அறி­வ­தில் நமக்கு உதவி செய்­கின்­றன. நமது மூதா­தை­யர்­க­ளின் பழக்­க­வ­ழக்­கங்­க­ளை­யும் அவர்­கள் எவ்­வ­ழி­க­ளில் தங்­கள் சிந்­த­னா­சக்­தி­யைச் செலுத்­தி­னார்­கள் என்­ப­தை­யும், எவ்­வாறு வாழ்க்கை நடத்­தி­னார்­கள் என்­ப­தை­யும் இவை நமக்­குத் தெரி­விக்­கின்­றன. ஆனால் இவற்றை சரி­யான சரித்­தி­ரம் என்று சொல்ல முடி­யாது. மிக­வும் பிற்­பட்ட காலத்­தில் எழு­தப்­பட்ட காஷ்­னிர சரித்­தி­ரமே சமஸ்­கி­ரு­தத்­தில் உள்ள உண்­மை­யான சரித்­திர நூலா­கும். கல்­ஹ­ணன் என்­ப­வர் இயற்­றிய காஷ்­மீர் அர­சர்­க­ளின் வர­லாற்­றைச் சொல்­லும் இந்­நூ­லுக்கு `ராஜ தரங்­கிணி’ என்று பெயர். நான் இக்­க­டி­தங்­களை  எழு­திக்­கொண்­டி­ருக்­கும்­போது ` ரஞ்­சித் மாமா இப்­பெ­ரிய காஷ்­மீர சரித்­தி­ரத்தை சமஸ்­கி­ரு­தத்­தி­லி­ருந்து மொழி பெயர்த்­துக் கொண்­டி­ருக்­கி­றார் என்­ப­தைக் கேட்க நீ சந்­தோ­ஷப்­ப­டு­வாய். ஏறக்­கு­றைய பாதி ஆகி­விட்­டது. அது மிக­வும் பெரிய நூல். அதன் மொழி­பெ­யர்ப்பு முழு­வ­தும் வெளி­யா­கும்­போது நாம் அதை ஆவ­லு­டன் படிப்­போம். ஏனெ­னில் துர­தி­ருஷ்­ட­வ­ச­மாக நம்­மில் பல­ருக்கு முதல் நூலை வாசிப்­ப­தற்­குப் போதிய சமஸ்­கி­ருத ஞான­மில்­லை­யல்­லவா? அது ஒரு அரு­மை­யான நூல் என்­பது ஒரு­பு­ற­மி­ருக்க, அதில் பழைய வர­லா­று­கள்,முக்­கி­ய­மாக நமது பூர்­வீக வாசஸ்­த­ல­மா­கிய காஷ்­மீ­ரத்­தைப் பற்றி வர­லா­று­கள் கூறப்­ப­டு­வ­தால் நாம் அதை ஆவ­லு­டன் வாசிப்­போம். ஆரி­யர்­கள் இந்­தி­யா­வுக்கு வந்­த­பொ­ழுது அது ஏற்­கெ­னவே நாக­ரி­கம் வாய்ந்த நாடாய் இருந்­தது. மொஹஞ்­ச­தா­ரோ­வில் நமக்கு கிடைத்­தி­ருப்­ப­வ­ன­வற்­றி­லி­ருந்து ஆரி­யர்­க­ளின் வரு­கைக்­கும் நெடுங்­கா­லத்­துக்கு முன்­னரே இந்­தி­யா­வின் வட­மேற்­குப் பாகத்­தில் ஒரு பெரிய நாக­ரி­கம் இருந்­தி­ருக்க வேண்­டும் என்­பது தெளி­வா­கத் தெரி­கி­றது. ஆனால், இதைப் பற்றி நமக்கு இன்­னும் அதி­க­மா­கத் தெரி­ய­வில்லை. நமது புதை­பொ­ருள் ஆராய்ச்சி நிபு­ணர்­கள் – அழித்­தும் சிதைந்­தும் கிடக்­கும் பழைய கட்­ட­டங்­கள், கல்­வெட்­டு­கள் முத­லி­ய­வற்றை ஆராய்ந்து அறி­விப்­ப­வர்­கள் – அங்கே பூமி­யைத் தோண்டி எல்­லா­வற்­றை­யும்  கண்­டு­பி­டித்த பிறகு இன்­னும் சில ஆண்­டு­க­ளில் நாம் அதைப் பற்றி அதி­க­மா­கத் தெரிந்து கொள்­ள­லாம்.

 இதன் மூலம் தென் இந்­தி­யா­வில் – ஒரு வேளை வட இந்­தி­யா­வில் கூட – திரா­வி­டர்­க­ளின் நாக­ரி­கம் மிக­வும் சிறப்­புற்­றி­ருந்­தது என்­பது தெளி­வா­கத் தெரி­கி­றது. அவர்­க­ளு­டைய பாஷை­கள், ஆரி­யர்­க­ளின் சமஸ்­கி­ரு­தத்­தி­லி­ருந்து பிறந்­தவை அல்ல. மிக­வும் பழ­மை­யான அப்­பா­ஷை­க­ளில் சிறந்த இலக்­கி­யங்­கள் காணப்­ப­டு­கின்­றன. இம்­மொ­ழி­கள் தமிழ், தெலுங்கு, கன்­ன­டம், மலை­யா­ளம் ஆகும். இவை தென் இந்­தி­யா­வில் இன்று வழங்கி வரு­கின்­றன. பிரிட்­டிஷ் அர­சாங்­கம் இந்­தி­யா­வைப் பிரித்­தி­ ருப்­பது போலன்றி தேசிய காங்­கி­ரஸ் மகா­ச­பை­யா­னது இந்­தி­யா­வைப் ( பாஷா வாரி­யாக)  பிரித்­தி­ருப்­பது உனக்­குத் தெரிந்­தி­ருக்­க­லாம். ஏறக்­கு­றைய ஒரே வித­மான நடை, உடை பாவ­னை­களை உடைய ஒரு மொழி பேசும் மக்­களை ஒரு மாகா­ணத்­தில் சேர்த்­து­வி­டு­வது சிறந்த ஏற்­பா­டா­கும். தென் இந்­தி­யா­வி­லுள்ள காங்­கி­ரஸ் மாகா­ணங்­கள் வரு­மாறு 1. ஆந்­திர தேசம். அதா­வது சென்­னைக்கு வடக்கே உள்ள தெலுங்கு  வழங்­கும் ஆந்­திர மாகா­ணம். 2. தமிழ்­நாடு அதா­வது தமிழ் வழங்­கும் தமிழ் மாகா­ணம். 3. கர்­நா­ட­கம், அதா­வது மும்­பைக்­குத் தெற்கே உள்ள கன்­ன­டம் வழங்­கும் நாடு. 4. கேர­ளம் அதா­வது மலை­யா­ளம் வழங்­கும் மலை­யாள நாடு. எதிர்­கா­லத்­தில் இந்­தி­யாவை மாகா­ணங்­க­ளா­கப் பிரிக்­கும்­போது   பிர­தே­சத்­தின் பாஷை முக்­கி­ய­மாக கவ­னிக்­கப்­ப­டும் என்­ப­தில் ஐய­மில்லை.

 இங்கே இந்­தி­யா­வில் பாஷை­க­ளைப் பற்­றிக் கொஞ்­சம் அதி­க­மா­கச் சொல்­ல­லா­மென்று நினைக்­கி­றேன். ஐரோப்­பா­வி­லும் இதர இடங்­க­ளி­லு­முள்ள சில இந்­தி­யா­வில் நூற்­றுக்­க­ணக்­கான பாஷை­கள் வழங்­கு­வ­தாக எண்­ணிக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள். இது முற்­றி­லும் தவறு. இவ்­வாறு சொல்­ப­வர்­கள் அதன் மூலம் தங்­கள் அறி­யா­மை­யையே காட்டி விடு­கி­றார்­கள். இந்­தி­யா­வைப் போன்ற ஒரு பெரிய தேசத்­தில்  ஒரு மொழியே இடத்­திற்­கேற்­றாற்­போல் மாறு­த­ல­டைந்து பல தேசிய மொழி­க­ளாக (dialect)  வழங்­கு­வது இயற்­கையே ஆகும். தேசத்­தின் பல பாகங்­க­ளில் வசிக்­கும் பல­வி­த­மான மலை­ச­மூ­கத்­த­வர்­க­ளும் வேறு சிறு சிறு கூட்­டத்­தி­ன­ரும் வெவ்­வேறு பாஷை­கள் பேசு­கி­றார்­கள். ஆனால் இந்­தி­யாவை மொத்­த­மாக எடுத்­துப் பார்க்­கும்­போது இவை முக்­கி­ய­ மா­னவை ஆகா. ஜனத்­தொகை கணக்கு எடுப்­ப­தற்­குத்­தான் இவை முக்­கி­ய­மாக கொள்­ளப்­ப­டு­கின்­றன. நான் ஏற்­கெ­னவே என் கடி­தங்­க­ளுள் ஒன்­றில் சொல்­லி­யி­ருப்­பது போல் இந்­தி­யா­வின் உண்­மை­யான பாஷை­க­ளைத் திரா­வி­டம், இந்­திய – ஆரி­யம் என்று இரு­பெ­ரும் பிரி­வு­க­ ளா­கப் பிரிக்­க­லாம்.  இந்­திய – ஆரிய பாஷை­க­ளில் தலை­யா­னது சமஸ்­கி­ரு­தம், மற்­றவை அத­னின்­றும் பிறந்­தவை. இவை இந்தி, வங்­காளி, குஜ­ராத்தி, மராத்தி ஆகிய மொழி­க­ளா­கும். இவற்­றி­னின்று சிறிதே  மாறு­பட்ட பாஷை­கள் வேறு சில இருக்­கின்­றன. அஸ்­சா­மில் அஸ்­சா­மிய பாஷை­யும் ஒரி­ஸா­வில் உரி­யா­வும் வழங்­கு­கின்­றன. உருது என்­பது இந்­தி­யின் மாறு­பாடு. இந்­துஸ்­தானி, வங்­காளி, குஜ­ராத்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு கன்­ன­டம், மலை­யா­ளம், உரியா, அஸ்­சா­மிய பாஷை ஆக  பத்­துப் பாஷை­கள். இவற்­றுள் நமது தாய் மொழி­யா­கிய இந்­துஸ்­தானி வட இந்­தியா முழு­வ­தும், பஞ்­சாப், ஐக்­கிய மாகா­ணம், பீகார், மத்­திய மாகா­ணம், ராஜ­பு­த­னம், டில்லி, மத்­திய இந்­தியா ஆகிய இடங்­க­ளில் பேசப்­ப­டு­கி­றது. பதி­னைந்து கோடி மக்­கள் வாழும் பெரிய பிர­தே­சம் இது. ஆகவே இந்­துஸ்­தானி சிற்­சில சிறிய மாறு­தல்­க­ளு­டன் பதி­னைந்து கோடி மக்­க­ளால் பேசப்­ப­டு­கி­றது. இந்­தி­யா­வில் அனே­க­மாக எல்­லாப் பாகங்­க­ளி­லும் இது அறிந்து கொள்­ளப்­ப­டு­கி­றது. இந்­தி­யா­வின் பொது பாஷை­யாக அது ஆக­லாம். இப்­ப­டிச் சொல்­வ­தால் மேற்­கூ­றப்­பட்ட மற்ற முக்­கிய பாஷை­கள் மறைந்­து­வி­டு­மென்று அர்த்­த­மல்ல.  அவை கட்­டா­யம் மாகாண பாஷை­க­ளாக இருந்தே தீரும். அவற்­றில் சிறந்த இலக்­கி­யங்­கள் இருக்­கின்­றன. நன்கு வளம் பெற்று விளங்­கும் ஒரு பாஷையை  அதைப் பேசும் மக்­க­ளி­ட­மி­ருந்து ஒழிக்க முய­லு­வது விரும்­பத்­தக்­க­தல்ல. தங்­கள் சொந்த பாஷை ஒன்­றின் மூலம்­தான் ஒரு மக்­கள் வளர்ச்­சி­ய­டைய முடி­யும். குழந்­தை­க­ளும் அதன் மூல­மா­கத்­தான் கல்வி கற்க வேண்­டும். இந்­தி­யா­வில் இப்­பொ­ழுது எல்­லாம் தலை­கீழ்ப் பாட­மாக இருக்­கி­றது. நாம் நமக்­குள்­ளேயே அதி­க­மாக ஆங்­கில பாஷையை  வழங்­கு­கி­றோம். நான் உனக்கு ஆங்­கி­லத்­தில் எழு­து­வது எள்ளி நகை­யா­டத்­தக்­கதே. அப்­ப­டி­யி­ருந்­தும் நான் அதைச் செய்­கி­றேன். இந்த வழக்­கம் சீக்­கி­ரமே தொலைந்­து­வி­டும் என்று நம்­பு­கி­றேன்.

 புரா­தன இந்­தி­யா­வின் கிரா­மக் குடி­ய­ர­சு­கள் ஜன­வரி 15, 1931

பழைய சரித்­தி­
ரத்­தைக் கவ­னிப்­ப­தில் நாம் எவ்­வாறு முன்­னே­று­வது? நான் சதா முக்­கிய கதையை விட்டு விட்­டுக் கிளைக் கதை­கள் சொல்ல ஆரம்­பித்து விடு­கி­றேன். எனது கடை­சிக் கடி­தத்­தில் முக்­கிய விஷ­யத்­தைப் பற்­றிக் சொல்­லப்­பு­குந்து அதை விடுத்து இந்­தி­யா­வின் பாஷை­க­ளைப் பற்றி பேசி­விட்­டேன்.

 இப்­போது புரா­தன இந்­தி­யா­வுக்­குப் போவோம். இன்று ஆப்­கா­னிஸ்­தா­னம் என வழங்­கும் நாடு அக்­கா­லத்­தி­லும் அதற்­குப் பின் நெடுங்­கா­லம் வரை­யி­லும் இந்­தி­யா­வின் ஒரு பாக­மா­யி­ருந்­தது. இந்­தி­யா­வின் வட­மேற்­குப் பாகம் காந்­தா­ரம் என்று அழைக்­கப்­பட்­டது. வடக்­கில் சிந்து, கங்கை சம­வெ­ளிப் பிர­தே­சத்­தில் ஆரி­யர்­கள் பல இடங்­க­ளில் கூட்­டம் கூட்­ட­மா­கக் குடி­யே­றி­யி­ருந்­தார்­கள். இவ்­வா­ரி­யர்­க­ளில் பெரும்­பா­லோர் பெரிய நக­ரங்­கள் பார­சீ­கத்­தி­லி­ருந்­தும், மெச­போ­டே­மி­யா­வி­லி­ருந்­தும் வந்­த­வர்­கள். ஆத­லால் அவர்­கள் கட்­ட­டம் கட்­டு­வ­தில் தேர்ந்­த­வர்­க­ளா­யி­ருந்­தார்­கள். ஆரி­யர்­கள் குடி­யே­றி­யி­ருந்த இடங்­க­ளுக்­கி­டையே பல காடு­கள் இருந்­தன. முக்­கி­ய­மாக வட இந்­தி­யா­வுக்­கும் தென் இந்­தி­யா­வுக்­கும் மத்­தி­யில் ஒரு பெரிய ஆர­ணி­யம் இருந்­தது. தெற்கே குடி­யே­று­வ­தற்கு ஆரி­யர்­கள் பெரு­வா­ரி­யாக இவ்­வா­ர­ணி­யத்­தைக் கடந்து போயி­ருக்க முடி­யாது.

 (தொட­ரும்)