ஜூலை 1 முதல் அத்திவரதர் தரிசனம் முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரம்

பதிவு செய்த நாள் : 30 ஜூன் 2019 10:32

காஞ்சிபுரம்,

அத்திவரதர் பெருவிழா திங்கள்கிழமை (ஜூலை 1) தொடங்குவதை முன்னிட்டு முன்னேற்பாடுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டு களுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழா ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை 48 நாள்களுக்கு நடைபெறவுள்ளது. இதையொட்டி, மாவட்ட நிர்வாகம், அறநிலையத் துறை, பெருநகராட்சி சார்பில் செய்யப்பட்டு வந்த முன்னேற்பாடுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
கடந்த 28-ஆம் தேதி அத்திவரதரை அனந்தசரஸ் திருக்குளத்திலிருந்து எடுத்தனர். தற்போது வஸந்த மண்டபத்தில் தைலக் காப்பு சடங்கு செய்யப்பட்டு அத்திவரதர் வைக்கப்பட்டுள்ளார். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தொடர்ந்து, திங்கள்கிழமை (ஜூலை 1) காலை 6 மணிக்கு பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
தற்காலிக பேருந்து நிலையம்
தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பது, வாகன நிறுத்தம், மருத்துவ மையம், கண்காணிப்பு மையங்கள், பக்தர்கள் வருகைக்காக வரிசை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.

வரதர் கோயில் தெரு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் அறநிலையத்துறை சார்பில் அத்திவரதர் குறித்த நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.வெயிலின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் பக்தர்கள் நடந்து செல்ல வசதியாக வரதர் கோயில் தெருவில் பிரத்யேக வெள்ளை வர்ணம் பூசப்பட்டுள்ளது.

இரயில் சேவை

பக்தர்கள் வந்து செல்ல வசதியாக அரக்கோணம் – செங்கல்பட்டு இடையே கூடுதலாக 12 தொடர் வண்டிகள் இயக்கப்படுகின்றன. காலை 11 மணி முதல் மதியம் 12.50 மணி வரை 10 நிமிடத்துக்கு ஒருமுறை அரக்கோணம் சந்திப்பில் இருந்து செங்கல்பட்டுக்கு தொடர் வண்டிகள் புறப்பட்டு செல்லும்.

மதியம் 1.30 மணி முதல் 3.15 மணிவரை செங்கல்பட்டில் இருந்து அரக்கோணத்துக்கு தொடர் வண்டிகள் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நுழைவுச்சீட்டு வழங்குவதில் சிக்கல்: 

அத்திவரதர் பெருவிழாவையொட்டி உள்ளூர் மக்கள் 26 நாள்களுக்கு தரிசனம் செய்ய சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனுமதிக்கப்பட்ட நாள்களில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 3 மணி நேரத்துக்கு அத்திவரதரைத் தரிசனம் செய்யலாம். இதற்காக, 26 நாள்களில் எந்த நாளிலும் சென்று தரிசிக்கலாம். இந்த நுழைவுச்சீட்டைப் பெறுவதற்கு நகராட்சி, ஊரக பகுதிகளில் மையங்கள் அமைக்கப்பட்டு நுழைவுச் சீட்டு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

நகராட்சி வார்டுகளில் இ-சேவை மையங்கள், அம்மா உணவகம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து 2-ஆவது நாளாக நுழைவுச்சீட்டு வழங்குவதற்கான பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விளக்கொளிப் கோயில் பெருமாள் தெருவில் உள்ள அம்மா உணவகத்தில் நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் போதிய கணினி உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லை என ஊழியர்கள் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆட்சியர் கூறுகையில், 

"விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையும் உள்ளூர் மக்களுக்கு நுழைவுச்சீட்டு வழங்கும் பணி நடைபெறும். தொடர்ந்து, அத்திவரதர் பெருவிழா முடியும் வரை நுழைவுச் சீட்டு வழங்க 14 மையங்கள் செயல்படும். உரிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு அனைவருக்கும் நுழைவுச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

வாகனங்களுக்கு பாஸ்

6,400 வாகனங்களுக்கு அனுமதி: பெருநகராட்சிப் பகுதிகளில் வசித்து காஞ்சிபுரம் பதிவு எண் கொண்ட 4 சக்கர வாகனங்களுக்கு விழா முடியும் வரை பயணிக்கும் வகையில் அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் மைதான அரங்கில் போலீஸ் பாதுகாப்புடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் முன்னிலையில் உதவி மையம் மூலம் அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, உள்ளூரில் 4 சக்கர வாகனம் வைத்திருப்போர் வாகன பதிவுச்சான்று, ஆதார் அட்டை, காப்பீட்டுச் சான்றைக் காண்பித்து அனுமதிச் சீட்டு பெற்றுக்கொள்ள அறிவுறுத்தினர்.

அனுமதிச்சீட்டு வழங்கும் பணி கடந்த 26-ஆம் தேதி காலை தொடங்கியது. முதல் நாளில் மட்டும் 1,800 பேருக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டது. 

2-ஆவது நாளில் 1,627 பேருக்கும், 3-ஆவது நாளில் 1,076 பேருக்கும், 4-ஆம் நாளான சனிக்கிழமை 1,897 பேருக்கும் அனுமதி சீட்டு வழங்கப்பட்டது. 4 நாள்களில் மொத்தம் 6,400 பேருக்கு 4 சக்கர வாகன அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 30) வரை செயல்படவுள்ளது.

அத்திவரதரைத் தரிசனம் செய்ய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஞாயிற்றுக்கிழமை இரவு காஞ்சிபுரம் வருகை தரவுள்ளார். பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் அத்திவரதர் பெருவிழா ஜூலை 1-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் காஞ்சிபுரத்துக்கு திரளானோர் வருகை தரவுள்ளனர். அவ்வகையில், முக்கியஸ்தர்களும் அத்திவரதரைத் தரிசனம் செய்ய நகருக்கு வரவுள்ளனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஞாயிற்றுக்கிழமை இரவு காஞ்சிபுரம் வரவுள்ளார்.

திங்கள்கிழமை காலையில் ஆளுநர் பன்வாரிலால் அத்தி வரதரைத் தரிசிப்பார் என மாவட்ட காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.