அரசியல்மேடை : கரையும் கட்சி திணறும் தினகரன்!

பதிவு செய்த நாள் : 29 ஜூன் 2019

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற தினகரனின் கட்சி, ‘தேர்தல் ஆணையத்தின் பதிவை, அங்கீகாரத்தைப் பெறுவதற்கு முன்பே கரைய தொடங்கிவிட்டது.  அக்கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் வெளியேறத் தொடங்கிவிட்டனர். இனி அமமுகவின் எதிர்காலம் என்னாகும்... என்ற குழப்பத்திலும், கலக்கத்திலும் அக்கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் இருக்கின்றனர். கட்சியை தொடங்கி, தன்னை  பொதுச்செயலாளராக அறிவித்துக் கொண்ட தினகரனின் பாடும் திண்டாட்டமாகத்தான் இருக்கிறது.

தமிழ்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் இருக்கின்றன. இதில் ஆகப்பெரிய கட்சிகளாக இருப்பவை அதிமுகவும், திமுகவும்தான். கட்சிக்கட்டமைப்பு, தொண்டர்கள் பலம், உறுப்பினர்களின் எண்ணிக்கை, குக்கிராமக் கிளை முதல் தலைமைக் கழகம் வரையிலான நிர்வாகிகள் பலம் என்று எல்லா வகையிலும் இந்த இரண்டு கட்சிகள்தான் சக்திவாய்ந்த கட்சிகளாக, மாறி மாறி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் கட்சிகளாக இருந்து வருகின்றன. இந்த இரண்டு கட்சிகளை தவிர்த்து, மூன்றாவதாக ஒரு கட்சி, வளர்ச்சி பெற்று ஆட்சி, அதிகாரத்திற்கு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.

ஏற்கனவே, இந்த இரண்டு கட்சிகளுக்கு மாற்றாக நாங்கள் இருக்கிறோம் என மார்தட்டி களம் புகுந்த பாமக, தமாகா, மதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தேறவில்லை. இவர்களோடு அணி சேர்ந்து புதிய ஜனநாயக கூட்டு சக்தியாக வலு பெறுவோம் என கருதி வந்த பொதுவுடமை கட்சியினரும் படு தோல்வியை தழுவும் நிலைதான். தேசிய கட்சிகளான காங்கிரசும், பாஜவும் கூட இங்கு வலுவிழந்துதான் காணப்படுகின்றன.

எந்த தேர்தல் வந்தாலும், அதிமுகவுடன், அல்லது திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால் மட்டுமே ஒரு சில எம்.பி.க்களை, எம்.எல்.ஏக்களை பெறும் நிலையில்தான், தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகளின் நிலை உள்ளது. தனித்துப் போட்டியிட்டால், அதிகபட்சம் ௧௦ சதவீத வாக்குகளை பெற முடியுமே தவிர, ஆட்சி, அதிகாரத்தை பெறக்கூடிய அளவிற்கு, வாக்குகளை பெற கூடிய வலிமை இல்லை. காலப்போக்கில் இந்த கட்சிகளுக்கு வலிமை வருவதற்கான வாய்ப்பும் இல்லை.

இந்த சூழலில் அதிமுகவை கைப்பற்றுவேன் என சூளுரைத்து அரசியல் களத்திற்கு வந்த தினகரன், அமமுக எனும் பெயரில் ஒரு அமைப்பை தொடங்கி, லோக்சபா தேர்தலிலும், ௨௨ சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும், தங்கள் அமைப்பினரை சுயேச்சையாக களம் இறக்கி அவர்களுக்கு பரிசு பெட்டி சின்னத்தை, சட்டப் போராட்டம் நடத்தி பெற்றுக்கொடுத்தார்.

அதிமுக, திமுகவுக்கு மாற்றான அரசியல் சக்தியாக தன்னை பிரகடனப்படுத்தி, தேர்தல் பரப்புரையை மேற்கொண்ட தினகரன் தமிழ்நாடு முழுதும் சுற்றி வந்தார். ௩௯ எம்பி தொகுதிகளில் வெற்றி பெற்று, டில்லியில் யார் பிரதமர் பொறுப்பு ஏற்பது என்பதை  அமமுகதான் தீர்மானிக்கும், ௨௨ சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியை கவிழ்ப்போம் என தினகரனும் அவரது அமைப்பின் நிர்வாகிகளும் பேசி வந்தனர். அதற்கு ஏற்றாற்போல, அவர்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக தினகரனுக்கு ஓரளவு கூட்டமும் வந்தது. ஆனால் அந்த கூட்டம் வாக்குகளாக மாறவில்லை.

ஒட்டுமொத்த கட்சியின் பலத்தை, நிர்வாகிகள் தொண்டர்கள் உழைப்பை பயன்படுத்தி, மக்களின் வாக்குகளை ‘கவர்’ செய்து ஆர்.கே. நகரில் தினகரன் வெற்றி பெற்றது போல தமிழ்நாடு முழுவதும் வெற்றிபெற்று விடலாம் என அமமுகவினர் கருதினர். அவர்கள் எண்ணம் ஈடேறவில்லை. அதன் விளைவு கட்சி கலகலக்க தொடங்கிவிட்டது’ கொஞ்சம் கொஞ்சமாக கரையத் தொடங்கிவிட்டது.

தேர்தலுக்கு முன்பே நாஞ்சில் சம்பத், செந்தில் பலாலாஜி, வி.பி.கலைராஜன் என முக்கிய பிரமுகர்கள் வெளியேறிய நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, பாப்புலர் முத்தையா, மைக்கேல் ராயப்பன் உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் நெல்லை தொடங்கி, தருமபுரி, சேலம்,  திருவண்ணாமலை, திருச்சி, தேனி என பல மாவட்டங்களிலும் அமமுகவிலிருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் தான் தினகரனின் முரட்டு பக்தனாக இருந்து ஒபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்து வந்த,  ஊடகங்களில் அமமுகவின் முகமாக, முகவரியாக உலா வந்த, அந்த கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் என்ற உயர் பொறுப்பில் இருந்த தங்கதமிழ்ச் செல்வன் போர்க்கொடி தூக்கியுள்ளார். தினகரனை மிக கடுமையான, அறுவெறுக்கத்தக்க வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியுள்ளார். தினகரன் நடத்துவது கட்சி அல்ல, தீவிரவாத இயக்கத் தலைவர் போல செயல்படுகிறார். அவரிடம் தலைமை பண்பு இல்லை என பல விமர்சனங்களை முன் வைக்கிறார். முன்பு கட்சியிலிருந்து வெளியேறிய, வெளியேற்றப்பட்ட கலைராஜன், செந்தில் பாலாஜி ஆகியோர் தினகரன் குறித்து தவறாக எந்த கருத்தையும் தெரிவிக்காத நிலையில், பல நெருக்கடியான கட்டங்களில் எல்லாம் உடனிருந்து, கட்சியின் தளகர்த்தராக – சிப்பாயாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் திடீரென தினகரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே மேலும் குழப்பத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவை கைப்பற்றி அம்மா ஆட்சியை தினகரன் தலைமை ஏற்று நடத்துவார் என நம்பி வந்த நிர்வாகிகளும், தொண்டர்களும், இந்த தேர்தல் முடிவைக் கண்டு தினகரனால் அது சாத்தியம் இல்லை. அவரால் அமமுக எனும் கட்சியையும் சரிவர நடத்த முடியாது என முடிவெடுத்துத்தான் சாரி சாரியாக விலகி வருகிறார்கள், இதை தடுக்க முடியாமல் தினகரன் திணறி வருவதாக அக்கட்சியின் நிர்வாகிகளே புலம்புகின்றனர்.