காஞ்சிபுரத்தில் 48 நாட்களுக்குப் பள்ளி, கல்லூரிகளுக்கு நேரம் மாற்றம்

பதிவு செய்த நாள் : 24 ஜூன் 2019 18:52

சென்னை,

அத்தி வரதர் பெருவிழாவையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் செயல்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு பின்னர் காஞ்சிபுரத்தில் நடைபெறும் அத்தி வரதர் விழா. 48 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. ஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்டு 17-ம் தேதி வரை காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை வெளியூர் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

பொது தரிசனம், சிறப்புத் தரிசனம், மாற்றுத் திறனாளிகள், முதியோருக்கென மொத்தம் 3 வரிசைகள் அமைக்கப்படவுள்ளன. 

இதில், பொது தரிசனம், மாற்றுத் திறனாளிகள் - முதியோருக்கான தரிசன வரிசை இலவசமாக அனுமதிக்கப்படும். 

சிறப்புத் தரிசனத்துக்கு ரூ. 50 செலுத்த வேண்டும். சகஸ்ரநாம பூஜை தரிசனத்துக்கு மட்டும் ரூ.500 செலுத்தி அத்தி வரதரைத் தரிசனம் செய்யலாம்.

விழா நடைபெறும் ஜூலை 1 முதல் ஆகஸ்டு 17 வரை காஞ்சிபுரம் பெருநகராட்சிக்குட்பட்ட அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் வகுப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.

காலை 8.30 முதல் நண்பகல் 1.30 வரை மட்டுமே பள்ளிகள், கல்லூரிகள் இயக்கப்படும். மதியம் விடுமுறை அளிக்கப்படும்.

வழக்கம் போல் விடுமுறை நாள்களில் பள்ளிகள் செயல்படாது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பாதுகாப்புக்காக 2,500 போலீசார் வரவழைக்கப்படுகின்றனர்.