மூத்த பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘சிவநேசச் செல்வர்கள்! – 159

பதிவு செய்த நாள் : 25 ஜூன் 2019

 

தம் பூதகணங்களைப் பார்த்து, ‘நீங்கள் வேடர்கள் வடிவம் எடுத்துச் சென்று வன்தொண்டன் கொண்டு வரும் நிதியங்களையெல்லாம் கவர்ந்து செல்லுங்கள்’ என்று கட்டளையிட்டார்.

அவ்வாறே சிவபெருமானின் பூதகணங்கள் வேடவர் படையாக வடிவமெடுத்துச் சென்று, நம்பியாரூரர் வரும் வழியில் இருபுறமும் சினந்தெழுந்து, பொருட்களைச் சுமந்து செல்லும் ஆட்களை வில்லும் அம்பும் கொண்டு வளைத்து நிறுத்தி, ‘இப்பொதிகளை இங்கேயே விட்டுவிட்டு உயிர் தப்பிப் போங்கள். இல்லையேல், உங்கள் அனைவரையும் கொல்லுவோம்!’ என்று அச்சுறுத்தி அவர்களிடமிருந்த அளவில்லாத நிதியங்களை கவர்ந்து சென்றனர். பறிகொடுத்த சுமையாட்களோ பயந்து, பதறி சிதறி ஓடினார்கள். வேடர்களாக வந்த சில பூதகணங்கள் நம்பியாரூரரை மட்டும் தொந்தரவு கொடுக்காமல் சிவபெருமானின் திருவருளால் நீங்கிச்சென்றன. பொருட்களை பறிகொடுத்த சுமையாட்களோ சுந்தரர் அருகில் வந்து சேர்ந்தார்கள். நம்பியாரூரரோ கடுவேகமாக திருமுருகன் பூண்டியை அடைந்தார். சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கோயினுள் சென்றார். வலம் வந்தார். மெய்சிலிர்க்க கரம் கூப்பி சிவபெருமான் முன் வீழ்ந்து வணங்கி எழுந்து நின்று, ‘வெடுவுற வேடுவர்கள் வழிப்பறிக்கும் நெஞ்சுரக் காட்டல் எத்துக்கு இங்கு வந்தீர்?’ என்று கருத்துடைய ‘கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்’ என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடித் துதித்தார். உடனே சிவபெருமானது திருவருளால், திருவாயிலின் முன்னே ஆகாயத்தை முட்டும் வண்ணம் கொண்டு வந்து குவித்தார்கள். சுந்தரர் அது கண்டு ஆனந்தம் கொண்டார். சிவபெருமானை வணங்கினார். அப்பொருட்களையெல்லாம் பெற்றுக் கொண்டு, ஆட்கள் மூலம் கொண்டு வரும்படிக் கட்டளையிட்டார். பிறகு அவ்வூர் ஆலயத்து பெருமானை வணங்கிவிட்டு இறைவனின் திருநாமத்தைப் பாடியபடியே திருவாரூரை அடைந்தார்.

 நம்பியாரூரரிடம் விடைபெற்றுச் சென்ற சேரமான் பெருமான் நாயனார் அவரது நட்பையே ஓயாமல் நினைத்தார். மணமலர்ச்சோலைகள் சூழ்ந்த மகோதைப்பதியை அடைந்து, அங்கேயே வீற்றிருந்து, மலைநாட்டின் அரசைத் தம் வசம் ஒருநிலைப்படுத்தி, சீராக அரசு புரிந்து செழிப்பாக வாழ்ந்து வந்தார். சில காலம் கழித்து நம்பியாரூரரான சுந்தரர் தம்முடைய பொன்னி வளநாட்டை விட்டு அகன்று சேரநாட்டிற்கு வந்து சேரமான் பெருமானின் ஊரை அடைந்தார். பிறகு அவர் யானை மீது ஏறி திருக்கயிலை மலை எழுந்தருளியபோது சேரமான் பெருமானும் ஒரு குதிரை மீது ஏறிப் பின்தொடர்ந்தார். அந்தச் செயலைப் பின்னால் கூறுவோம். இப்போது கழறிற்றரிவரரான சேரர் பெருமானின் கழல்களைப்போற்றிவிட்டு அடுத்ததாக கணநாத நாயனாரின் திருத்தொண்டைக் கூறுவோம்

 கணநாத நாயனார்

 உலக முழுவதையும் ஈன்று காக்கின்ற உமாதேவியாரிடம் ஞானப்பால் உண்டருளிய திருஞானசம்பந்தர் அவதரித்த சீர்காழிப் பதியில் மறையவர் குலத்தில் கணநாதர் – இது இறைவரின் திருப்பெயர். சிவகணங்களுக்குத் தலைவர் என்பது பொருள். இப்படி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் சிவநேசர். அவர் திருத்தோணியப்பருக்கு நாள்தோறும் நல்ல திருப்பணிகளைச் செய்து வந்தார். அவர், திருநந்தவனப் பணி செய்வோர், நறுமலர் பறிப்போர், மாலை தொடுப்போர், திருமஞ்சன நீரைக் கொண்டு வருவோர், திருவிளக்கு ஏற்றுவோர், திருமுறைகளை வழுதுவோர் (திருமுறை: தேவாரம், திருவாசகம், திருமந்திரம் முதலியன திருமுறை என்று அழைக்கப்படும்).  அவற்றை  வாசிப்போர் முதலிய கைத்திருத் தொண்டர்களுக்கு ஏதாவது குறை நேருமாயின், அதனை அவ்வப்பொழுதே நீக்குவார். இத்திருத்தொண்டுகளில் மக்களை ஈடுபடுத்தி, அவர்களைத் திருத்தொண்டர்களாக்குவார். இல்லறத்தில் மனைவியாரோடு அன்பாக இருந்து கொண்டே திருத்தொண்டு புரிவதிலும், வாய்மை காப்பதிலும் அவர் சிறந்து விளங்கி வந்தார்.

 திருத்தொண்டராகிய கணநாதர், திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகளை விரும்பும் பேரன்பாலே நாள்தோறும், முப்போதும் அருச்சுனை வழிபாடுகள் செய்து வந்தார். அதனால் அவர் திருக்கயிலை மலையை அடைந்து பெரும்  சிவகணங்களுக்குத் தலைவராகி, வழித் தொண்டினில் நிலைபெற்றார்.

 உலகம் உய்ய நஞ்சுண்ட சிவபெருமானுக்குத் திருத்தொண்டு புரிவதில் உறுதியான மெய்யுணர்வு அடைந்து அலகிலாத தொண்டர்களுக்கும் அறிவளித்து அவர்தம் திறத்தை அவனியில் பெருக்கிய கணநாதனாரின் கழல்களை வாழ்த்திவிட்டு அடுத்ததாகக் கூற்றுவனாரின் தொண்டைச் சொல்வோம்.

 கூற்றுவ நாயனார்

 திருக்கடந்தை – திருக்களந்தை என்று முந்நாளில் அழைக்கப்பெற்றது. இந்த ஊர் தொண்டை நாட்டிலுள்ள பொன்விளைந்த களத்தூர் ஆகும். இந்த ஊரில் குறுநில மன்னர் குலத்தில் கூற்றுவர் என்று ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் தமது தோள் வலிமையினால் பகைவர்களுக்கு கூற்றுவராய்த் திகழ்ந்தார். அவர் சிவபெருமானுடைய திருநாமத்தினை நாள்தோறும் நவின்று வருவார். சிவனடியார்களைப் பணிந்து அவர்களுக்குத் திருத்தொண்டு செய்வார். இறைவனின் திருவருள் வலிமையினாலே பகை அரசர்களை வென்று அவர்களை தமக்குக் கீழ்ப்படும்படி செய்து ஆட்சி செலுத்தி வந்தார். யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்னும் நால்வகைச் சேனைகளையும் எல்லையற்ற செல்வப்பெருக்கையும் பெற்றும், பகைவர் அஞ்சும்படி வீரச்செருக்கில் மேம்பட்டு விளங்கினார். தும்பை மாலையைச் சூடி, பகையரசர்களைப் பல போர்களிலும் எதிர்த்து வென்று, நறுமணம் கமழும் வாகை மாலை சூடி, அவர்களின் நாடுகளையெல்லாம் கைப்பற்றிக் கொண்டார். ஆனால், அரசர்க்குரிய செல்வமெல்லாம் அவர் பெற்றிருந்தும் திருமுடி ஒன்று மட்டும் பெறாமலிருந்தார்.

 அவர் அந்தக் குறையை நீக்கிக் கொள்வதற்காக தில்லைவாழ்  அந்தணர்களிடம் முறையிட்டார். அவர்களோ, ‘நாங்கள் தொன்றுதொட்டு வரும் சோழ மன்னர்களுக்கன்றி பிறருக்கு முடி சூட்டமாட்டோம்’ என்று மறுத்தார்கள். அவர்கள் திருமுடியைக் காக்கும் பொருட்டு ஒரு குடியை மட்டும் அங்கே வைத்துவிட்டு மற்ற எல்லோரும் சேர நாட்டிற்குச் சென்று விட்டார்கள்.