சர்ச்சைக்குரிய மசோதாவை ரத்து செய்யாவிட்டால் ஹாங்காங்கில் போராட்டம் தொடரும் : போராட்டக்காரர்கள் எச்சரிக்கை

பதிவு செய்த நாள் : 20 ஜூன் 2019 16:46

ஹாங்காங்,

ஹாங்காங்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணைக்காக சீனாவுக்கு அனுப்ப வழிவகை செய்யும் சர்ச்சைக்குரிய மசோதாவை வியாழக்கிழமை இரவுக்குள் அரசு ரத்து செய்ய வேண்டும். மீறினால் ஹாங்காங்கில் மீண்டும் முற்றுகை போராட்டம் தொடரும் என்று போராட்டக்காரர்கள் எச்சரித்துள்ளனர்.

ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களை சீனாவிடம் ஒப்படைக்க வழிவகை செய்யும் மசோதா ஒன்று ஹாங்காங் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த சட்டத்தின் மூலம் சீன அரசுக்கு எதிராக குரல் கொடுப்போர் மீது தேசிய விரோத சட்டத்தின் கீழ் சீனா நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக ஹாங்காங் மக்கள் கருதுகிறார்கள். அதை தொடர்ந்து கடந்த ஜூன் 9ம் தேதி சர்ச்சைக்குரிய மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி லட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு அமைதி பேரணி நடத்தினர். கடந்த 30 ஆண்டுகளுக்கு பின் ஹாங்காங்கில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் இது.

அதன் பின்பும் மக்களின் போராட்டம் தொடர்ந்தது. அரசு அலுவலகங்கள் முற்றுகையிடப்பட்டன. முக்கிய சாலைகள் மறிக்கப்பட்டன. போராட்டத்திற்கு ஆதரவாக வணிகர்கள் கடைகளை அடைத்தனர். அதனால் ஹாங்காங் முழுவதும் ஸ்தம்பித்தது.

போராட்டக்காரர்களை கலைக்க ஹாங்காங் போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். ரப்பர் குண்டுகள் கொண்ட துப்பாக்கிகளால் சுட்டனர். இதில் 79 பேர் காயமடைந்தனர். ஆனால் மக்கள் போராட்டதை கைவிடவில்லை. போலீசாரின் இந்த வன்முறை செயல்களுக்கு சர்வதேச அளவில் கண்டனம் எழுந்தது.

ஹாங்காங் போராட்டத்திற்கு சில உலக நாடுகளும் ஆதரவு தெரிவித்தன. இதனால் ஹாங்காங் அரசுக்கு அழுத்தம் அதிகரித்தது.

அதை தொடர்ந்து பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்ட ஹாங்காங் அரசின் தலைவர் காரி லாம் சர்ச்சைக்குரிய மசோதா தற்காலிகமாக கைவிடப்படுவதாக அறிவித்தார்.

மீண்டும் போராட்டம்

மசோதா தற்காலிகமாக கைவிடப்பட்டாலும் அதை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

மேலும் சீனாவுக்கு ஆதரவாக செயல்படும் ஹாங்காங் அரசின் தலைவர் காரி லாம் பதவி விலக வேண்டும். கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் விடுவிக்கப்பட வேண்டும். போராட்டத்தில் போலீசாரின் வன்முறை செயல்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.

தங்கள் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள இன்று வரை கால அவகாசம் வழங்கியுள்ளனர். நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றால் மீண்டும் ஹாங்காங்கில் போராட்டம் துவங்கும் என்று மாணவர் அமைப்புகள் எச்சரித்துள்ளன. போராட்டத்திற்காக மக்களை திரட்டும் பணியில் அந்த அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.

ஆனால் காரி லாம் தன் பதவியை ராஜினாமா செய்ய போவதில்லை என உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் நாளை காலை 7:00 மணிக்கு மக்கள் ஹாங்காங்கின் முக்கிய அரசு அலுலகங்களை முற்றுகையிட வேண்டும் என்று மாணவர் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

மக்களின் போராட்டத்திற்கு ஹாங்காங் எதிர்க்கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. காவல்துறை வன்முறையைத் தடுக்க போராட்டக்காரர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர் கிளாடியா மோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.