வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

பதிவு செய்த நாள் : 20 ஜூன் 2019 14:13

சென்னை,

வங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இது தென்மேற்கு பருவகாற்றை வலுப்பெறச் செய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

48 மணி நேரத்தில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வலுப்பெற வாய்ப்பு உள்ளது. வட வங்க கடலில் உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால்  தமிழகத்தில் ஜூன் 22, 23 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

காற்றில் இருந்த ஈரப்பதத்தை வாயு புயல் எடுத்துச் சென்றதால், தென்மேற்கு பருவமழை கடந்த ஒரு வாரமாக தீவிரமாகாத நிலையில், வங்க கடலில் உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, பருவக்காற்றை வலுப்பெற செய்யும். இதனால் இன்னும் சில தினங்களில் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைய வாய்ப்பு இருப்பதாகவும்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னையில் வீசுகின்ற அனல் காற்றின் தன்மை குறைவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் திடீரென மழை பெய்யும் எனவும்  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மழை

6 மாத காலத்திற்குப் பிறகு, சென்னை – தாம்பரம், மீனம்பாக்கம், பல்லாவரம், போரூர், தரமணி ஆகிய பகுதிகளி திடீரென கன மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.