வடகொரியா – சீனா இடையேயான நட்பு ஈடு இணையில்லாதது : சீன அதிபர் ஜீ ஜின்பிங் கடிதம்

பதிவு செய்த நாள் : 19 ஜூன் 2019 17:25

சியோல்,

   சீனா – வடகொரியா இடையாயான நட்புறவு ஈடு இணையில்லாதது. அதை யாராலும் விலைகொடுத்து வாங்க முடியாது என்று சீன அதிபர் ஜீ ஜின்பிங் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். அவரது கடிதம் வடகொரியா அரசு செய்திதாளில் வெளியாகியுள்ளது.

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அழைப்பை ஏற்று சீன அதிபர் ஜீ ஜின்பிங் இரண்டு நாள் பயணமாக நாளை (ஜூன் 20ம் தேதி) வடகொரியா செல்கிறார். இதன் மூலம் கடந்த 14 ஆண்டுகளுக்கு பின் வடகொரியா செல்லும் முதல் சீன அதிபர் என்ற பெருமையை ஜீ ஜின்பிங் பெருகிறார்.

இதற்கு முன் முன்னாள் சீன அதிபர் ஹூ ஜிண்டோ கடந்த 2005ம் ஆண்டு வடகொரியா சென்றார்.

அமெரிக்கா – வடகொரியா உறவில் ஏற்பட்ட முன்னேற்றம் மீண்டும் சரிவை சந்தித்துள்ள நிலையில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் இந்த பயணத்தை மேற்கொள்கிறார்.

இந்நிலையில் வடகொரியாவின் அதிகாரப்பூர்வ அரசு செய்திதாளான ரோடோங் சின்முன்னில் ஜீ ஜின்பிங்கின் செய்தி வெளியாகியுள்ளது. அதில் கிழக்காசிய பிராந்தியத்தில் நிலையான அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வடகொரியாவுடன் ஒரு கூட்டுத்திட்டத்தை உருவாக்க சீனா தயாராக உள்ளது என ஜீ ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவுடனான தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை வலுமைப்படுத்தி கொரிய பிராந்தியத்தின் அமைதி, மேம்பாடு மற்றும் வல மேலாண்மைக்கு எங்கள் பங்களிப்பை வழங்குவோம். வடகொரியா – சீனா இடையேயான உறவு ஈடு இணையற்றத்து. காலம் செல்ல செல்ல அது மேலும் வலுவடையும் என்றும் ஜீ ஜின்பிங் கூறியுள்ளார்.

வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் 4 முறை சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அவரின் அழைப்பின் பேரில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் நாளை வடகொரியா செல்லவுள்ளார்.

சீனா – வடகொரியா இடையேயான தூதரக உறவு துவங்கி இந்த ஆண்டுடன் 70 ஆண்டுகள் நிறைவு பெரும் நிலையில் ஜீ ஜின்பிங் வடகொரியா செல்கிறார்.

அடுத்த வாரம் ஜப்பானில் நடக்கும் ஜீ 20 மாநாட்டில் ஜீ ஜின்பிங் அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்கவுள்ள நிலையில் அவரது வடகொரியா பயணம் குறித்து பலர் ஆச்சரியம் தெரிவித்துள்ளனர்.

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் –க்கு தனது ஆதரவு எப்போதும் உண்டு என்பதை அமெரிக்காவுக்கு உணர்த்தவே ஜீ ஜின்பிங் இந்த பயணத்தை மேற்கொள்வதாக அரசியல் நிபுணர்கள் கருத்துகிறார்கள்.