சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 397– எஸ்.கணேஷ்

பதிவு செய்த நாள் : 19 ஜூன் 2019

நடிகர்கள்  :  சித்தார்த், நித்யா மேனன், ப்ரியா ஆனந்த், டி.எஸ்.பி.கே. மவுலி, கீதா, ஸ்ரீசரண்  மற்றும் பலர்.  இசை : ஷரத், ஒளிப்பதிவு : பாலசுப்ரமணியம், எடிட்டிங் :    கிஷோர், தயாரிப்பு : எஸ்பிஐ சினிமாஸ், வசனம் : சுபா, திரைக்கதை, இயக்கம் :    ஜெயேந்திரா பஞ்சாபகேசன்.

துடிப்பான இளைஞனான டாக்டர். அஜய்குமார் சென்னைக்கு வந்து இறங்குகிறான். தன்னை மனோ என்ற பெயரில் அறிமுகப்படுத்திக் கொள்பவன் வயதான தம்பதியான எஸ்.வி.எஸ். மூர்த்தி (டி.எஸ்.பி.கே. மவுலி) ஜெயம் (கீதா) வீட்டில் குடியேறுகிறான். வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வாழ விரும்பும் மனோ, தன்னோடு பழகுபவர்களின் மனதிற்கு நெருக்கமாகிறான். வித்யா எனப்படும் வித்யாலட்சுமியோடு (நித்யா மேனன்) சந்திப்பு ஏற்பட்டு நட்பாகிறார்கள். மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் சந்தோஷமடையும் குணமுடைய மனோவை கண்டு வித்யா ஆச்சரியமாகிறாள். வித்யாவின் உதவியோடு தெருவோர சிறுவர்களின் கல்விச்செலவுக்கு பொறுப்பேற்கிறான். வித்யா தன் நேசத்தை மனோவிடம் வெளிப்படுத்துகையில் யாரிடமும் சொல்லாமல் ஊரைவிட்டு செல்ல தயாராகிறான். தற்போது மனோவாக வாழும் அஜய்யின் முந்தைய வாழ்க்கை கண்முன் விரிகிறது. சான் பிரான்சிஸ்கோவில் டாக்டராக இருக்கும் அஜய், இண்டீரியர் டிசைனரான ரேணு நாராயணனை (ப்ரியா ஆனந்த்) சந்திக்கிறார். இருவரும் ஒருவரையொருவர் விரும்பி மணந்து கொள்கிறார்கள். சில மாதங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையில், திடீரென அஜய்க்கு கல்லீரல் புற்றுநோய் இருப்பது தெரியவருகிறது. சிறப்பு மருத்துவர்கள் அவர் ஆறு மாதங்கள் மட்டுமே உயிரோடு இருக்க முடியும் என்று கூறுகிறார்கள். கிடைத்திருக்கும் அந்த 180 நாட்களை பிறருக்கு பயனுள்ள வகையிலும் தனக்கு நிம்மதி தரும் வகையிலும் அமைத்துக்கொள்ள முடிவெடுக்கும் அஜய், தன்னை பற்றிய அடையாளங்களை மறைத்துக் கொண்டு புதிய மனிதனாக இந்தியாவில் வாழ்ந்து வருகிறான்.

அஜய் சென்னையிலிருந்து புறப்படும் நேரத்தில், விபத்தில் சிக்கும் வித்யாவிற்கு ஆபரேஷன் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. வித்யாவை சான் பிரான்சிஸ்கோவிற்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் அஜய், தனது நண்பன் சாம் எனப்படும் சாம்பசிவத்தை சந்திக்கிறான். சாம் ரேணுவை சந்திக்கச் சொல்லி அஜய்யை வற்புறுத்துகிறான். தனது நோயைப் பற்றியோ, மறைவைப் பற்றியோ யோசித்து தினமும் ரேணு வருந்தக்கூடாது என, தான் இறந்துவிட்டதாக நாடகமாடி ரேணுவை நம்ப வைத்து அவளது வாழ்க்கையிலிருந்து தான் விலகிவந்த விவரத்தை வெளிப்படுத்துகிறான். அஜய்யின் மறைவிற்குப் பின் மனதை தேற்றிக் கொண்டு மகிழ்ச்சியாக வாழும் ரேணுவைக் கண்ட சந்தோஷத்தோடு கிளம்புகிறான்.

அஜய் ‘ஜோஸ்’ என்ற புதிய பெயரோடு ரியோ டி ஜெனிரோ நகரத்திற்கு வந்து இறங்குகிறான். மகிழ்ச்சியாக கால்பந்து விளையாடியபடி, தனது மரணத்திற்காக காத்திருக்கிறான்.