லட்சக்கணக்கான சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்ற நடவடிக்கை: அதிபர் டிரம்ப் அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 18 ஜூன் 2019 20:49

வாஷிங்டன்,

அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக குடியிருக்கும் லட்சக்கணக்கான வெளிநாட்டினர் அடுத்த வாரம் முதல் வெளியேற்றப்படுவார்கள் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை அறிவித்தார்.

வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள கவுதமாலா உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மெக்சிகோ வழியாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஊடுருவி வருகிறார்கள். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்க அதிகாரிகள் திணறி வருகிறார்கள்.

அதேபோல் மத்திய கிழக்கு நாடுகள், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் போன்ற தெற்காசிய நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் அமெரிக்காவில் ஆவணங்கள் இல்லாமல் வசித்து வருகிறார்கள்.

இத்தகைய சட்டவிரோத குடியேறிகளால் அமெரிக்காவில் கும்பல் வன்முறை, கொள்ளை மற்றும் கடத்தல் தொழில்கள் அதிகரிப்பதாக அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

சட்டவிரோத அகதிகள் அமெரிக்காவில் ஊடுருவதை தடுக்க பல கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் திங்கள்கிழமை டுவிட்டரில் செய்தி வெளியிட்ட அதிபர் டிரம்ப் அடுத்த வாரம் முதல் அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் லடச்க்கணக்கான வெளிநாட்டு குடியேறிகளை வெளியேற்றும் பணி துவங்கும் என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை நோக்கி வரும் அகதிகளை தடுக்க மத்திய அமெரிக்க நாடுகளான எல் சால்வடார், கவுதமேலா மற்றும் ஹோண்டுராஸ் நடவடிக்கை எடுக்காவிட்டால் அந்த நாடுகளுக்கு புதிதாக எந்த நிதியுதவியும் அமெரிக்கா வழங்காது என்று அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட கவுதமாலா தயாராகி வருகிறது. இந்த ஒப்பந்தத்தின் படி கவுதமாலாவுக்குள் நுழையும் அகதிகள் அந்த நாட்டில் தான் புகலிடம் கேட்டு விண்ணப்பிக்க முடியும் அமெரிக்காவில் அல்ல என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அகதிகளை தடுக்க மெக்சிகோ நடவடிக்கை எடுக்காவிட்டால் அந்நாட்டின் ஏற்றுமதி பொருட்கள் மீது வரி உயர்த்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்தார்.

அதை தொடர்ந்து அமெரிக்காவில் அகதிகள் நுழைவதை தடுக்க எல்லையில் 6000 வீரர்கள் நிறுத்தப்படுவார்கள். அமெரிக்கா திருப்பி அனுப்பும் மெக்சிகோ நாட்டினரை மீண்டும் ஏற்றுகொள்வதாக மெக்சிகோ அரசு உறுதி அளித்து அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோத இந்திய குடியேறிகள்

அமெரிக்காவில் சுமார் 6.3 லட்சம் இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியிருப்பதாக தெற்காசிய அமெரிக்கர்கள் அமைப்பான சால்ட் (SAALT) தெரிவித்துள்ளது.

இது கடந்த 2010ம் ஆண்டை விட 72 சதவீதம் அதிகம். பல இந்தியர்கள் தங்கள் விசா காலம் முடிந்த பின்பும் அமெரிக்காவில் வசிப்பதால் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு மட்டும் சுமார் 2.5 லட்சம் இந்தியர்கள் விசா காலம் முடிந்த பின்பும் அமெரிக்காவில் தங்கியுள்ளதாக சால்ட் நிறுவனம் கூறியுள்ளது.

சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றப்படுவார்கள் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில் சட்டவிரோத இந்திய குடியேறிகள் நிலை என்னவாகும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.