உலக வங்கியிடம் 91.8 கோடி டாலர் கடன் பெறுகிறது பாகிஸ்தான்; 3 ஒப்பந்தங்களில் கையெழுத்து

பதிவு செய்த நாள் : 18 ஜூன் 2019 19:34

இஸ்லாமாபாத்,

உலக வங்கியிடம் 91.8 கோடி டாலர் கடன் தொகைக்கான மூன்று ஒப்பந்தங்களில் பாகிஸ்தான் இன்று கையெழுத்திட்டது. பாகிஸ்தான் நிதி நெருக்கடியை சீர் செய்ய உதவியாக இந்த கடனுதவி பெறப்பட்டுள்ளது.

இந்த மொத்த கடன் தொகையில் இருந்து பாகிஸ்தானின் வருவாய் உயர்த்தும் திட்டம் மற்றும் உயர் கல்வி மேம்பாட்டு திட்டத்திற்கு தலா 40 கோடி டாலர் ஒதுக்கப்படும். கைபர் பக்துங்குவா மாகாண வருவாய் திரட்டல் மற்றும் வள மேலாண்மை நிர்வாக திட்டத்திற்கு 11.8 கோடி டாலர் ஒதுக்கப்படும் என்று பாகிஸ்தான் பத்திரிகையான டான் செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் நிதி ஆலோசகர் ஹஃபீஸ் ஷாய்க் முன்னிலையில் உலக வங்கியுடனான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

உலக வங்கியின் பாகிஸ்தான் நிர்வாகியான பச்சைமுத்து இளங்கோவன் மற்றும் பாகிஸ்தான் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் நூர் அகமது, பாகிஸ்தான் உயர்கல்வி ஆணைய பிரதிநிதிகள், கைபர் பக்துங்குவா மாகாண அரசு பிரதிநிதிகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

பாகிஸ்தான் வளர்ச்சிக்காக தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உலக வங்கிக்கு நிதி ஆலோசகர் ஹஃபீஸ் ஷாய்க் தன் நன்றிகளை தெரிவித்தார்.

கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான் தன் பொருளாதார சிக்கல்களை சீர் செய்ய பல தரப்பில் கடனுதவி கேட்டு வருகிறது.

கடந்த மாதம் 600 கோடி டாலர் கடன் தொகைக்காக பன்னாட்டு செலவாணி நிதியம் – பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆசிய மேம்பாட்டு வங்கியிடம் கடனுதவி பெற வங்கி பிரதிநிதிகளுடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.